Saturday, April 5, 2008

நினைவுகள் - 1

ஒவ்வொரு மாணவருக்கும் பண்ணிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சென்று படித்து, பட்டப் படிப்பில் பட்டம் பெறுவது என்பது பெருமைக்குரிய விசயம். இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, வளாக நேர்காணலில் கை நிறைய ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் சொந்தமாக தொழில் நிறுவனம் தொடங்கு -கிறார்கள். சொந்தத் தொழிலில் மகத்தான வெற்றியும் பெறுகிறார்கள். சில மாணவர்களுக்கு தான் படித்த படிப்புக்குண்டான வேலை கிடைக்காமல், வேறு துறைகளில் வேலையில் சேருகிறார்கள். ஆயிரத்தில் சில மாணவர்கள் தான் படித்த கல்வியால் உலகமே போற்றுமளவுக்கு புகழ் பெறுகிறார்கள். சிலர் குடும்பத்தின் தொழில் என்னவாக இருந்தாலும், அதை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதில் என்னுடைய பங்களிப்பு என்னவென்றால்...

நான் கழுகுமலைக்கு அருகிலுள்ள குளக்கட்டாக்குறிச்சி என்ற கிராமத்தில், கரிசல் காட்டு மண்ணில் மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதில் 1987-1992 காலகட்டங்களில் கிராமத்திலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்தேன். கிராமத்துப் பள்ளியில் படித்தது சராசரி படிப்புதான். 1992 ம் ஆண்டில் 6 ம் வகுப்பை கோவில்பட்டியிலுள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் என்னுடைய தந்தையார், அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கிப் படிக்குமாறு சேர்த்து விட்டார். 5 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது என் அப்பாவிடம் கேட்டேன் - 6 ம் வகுப்பு எங்கப்பா சேத்துவிடப்போறீங்க. அதான் குமாரு, நானும் பாலு வாத்தியாரும் உன்னை எந்தப் பள்ளிக்கூடத்துல சேத்து விடணும்னு, யோசிச்சு பேசிகிட்டு இருக்கோம். ஆனா நல்ல பள்ளிக் -கூடத்துலதான் சேர்த்து விடுவேன் குமாரு, சரியா...என்றார். அப்ப கோவில் -பட்டியில கெட்டப் பள்ளிக்கூடம் நிறைய இருக்குது என்று எதார்த்தமாக நான் சொல்லிய போது, என் அப்பா தலையில் ஒரு குட்டு வைத்தார். இந்த மாதிரி எடக்கு மடக்கா பேசுனா, பருத்தி மாரு கம்பால அடி விழும். இந்த சின்ன வயசுல இவ்வளவு பேச்சு கூடாது என்று சொன்னபோது, நான் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டேன்...

பாலு வாத்தியாரின் முழுப்பெயர் பாலசுப்ரமணியன். கோவில்பட்டியிலிருந்து ராஜ்தூத் பைக்கில்தான் பள்ளிக்கு வருவார். நாங்கள் மாணவர்கள் அனைவரும் பாலுவாத்தியார் என்று அழைப்போம். கிராமத்து மக்களும் பாலு வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். ஒரு நாள் பாலு வாத்தியார் என்னை அன்போடு அருகில் அழைத்தார். நீ நம்ம பள்ளிக் கூடத்துலேயே நல்லா படிக்கிற. உங்க அப்பாவும் வீட்டுல பாடம் நல்லா சொல்லிக் கொடுக்குறாரு. இதே மாதிரி 6 ம் வகுப்புல இருந்து 12 ம் வகுப்பு வரைக்கும் நல்லா படிச்சி, நிறைய மதிப்பெண் வாங்குனா, இன்ஜினியராகவோ, டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆகலாம். அதனால நீ நல்லா படிக்கணுங்கிறதுக்காக, கோவில்பட்டி கதிரேசன் மலைக்கு போற ரூட்ல இருக்குற லட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துல சேர்த்து விடலாம்னு இருக்கிறேன். நல்லா பேரு வாங்குன பள்ளிக்கூடம். நீ அந்தப் பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிக்குறப்ப பெரிய ஆளா வருவே...சரியா செந்தில்குமாரு...

உங்க அப்பாகிட்ட இது விசயமா பேசி இருக்கேன் என்று சொன்னபோது, ஏதோ கல்யாண மாப்பிள்ளை போல ஆயிரம் கற்பனைகள் மனதில் ரெக்கை கட்டிப் பறந்தது. என்னுடன் படித்த சிறுவர்களிடம் எல்லாம், நான் சேரப்போகும் பள்ளியைப் பற்றி சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டேன். ஆனால் என் அப்பாவிடம் இது குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை. என் அம்மாவிடம் சொல்லியபோது, பெரிதாக எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டவில்லை. நம்முடைய ஒரே மகன் பள்ளிக்கூட விடுதியில் சேர்ந்து படிப்பான். என்றோ ஒரு நாளோ, இரண்டு நாளோ விடுமுறைக்கு வீட்டிற்கு வருவான் என்ற பிரிவுத்துயர் என்னுடைய தாயின் கண்களில் தெரிந்தது.

அப்போது அம்மா அப்பாவிடம் - என்னங்க லட்சுமி மில்ஸ் பள்ளிக்கூடத்துல தங்கிப் படிக்கிற மாதிரி விடுதி இருக்கானு விசாரிச்சங்களா..ஆமா அங்க மாணவர் விடுதி இருக்குற மாதிரி தெரியல. வேற பள்ளிக்கூடம்தான் பார்க்கணும் என்று சொன்னபோது, ஐயோ சாமி இவங்க நம்மள பள்ளிக் கூடத்துல சேர்த்துவிடுறதுக்கு, இன்னொரு பள்ளிக்கூடத்த கண்டுபிடிக் -கிறதுக்குள்ள, 1992 ம் வருஷம் முடிஞ்சு, அடுத்த 1993 ம் வருஷம் ஆரம்பிச்சிரும் போலத் தெரியுது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, உம்மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டு ஒரு வாரம் யாரிடமும் சரியாக பேசவில்லை.

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment