Thursday, September 25, 2008

நினைவுகள் - 3

நான் முதல் நாள் வகுப்புக்குச் செல்லும்போது, ஆங்கில ஆசிரியர் செல்வராணி அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆறாம் வகுப்புக்கு வகுப்புகள் ஆரம்பித்து இரண்டு நாள் கழித்துதான் பள்ளியில் சேர்ந்தேன். எனது அப்பா என்னை அழைத்துக் கொண்டு 6A பிரிவில் கொண்டு போய்விட வந்தார். பாடம் நடத்திக் கொண்டிருந்த செல்வராணி ஆசிரியை அழைத்து, இவன் என்னுடைய மகன் செந்தில்குமாரு ஒரே பையன். நல்ல விதமா படிக்க வச்சி திறமையான மாணவனா வர்றதுக்கு நீங்கதான் நல்லா பாத்துக்கணும் என்று சொன்னார். செல்வராணி அவர்கள், அய்யா நாங்க பாடமெல்லாம் நல்லா நடத்தி படிக்க வைக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. நீங்கதான் உங்க குடும்பத்துல குழந்தைகளுக்கு முன்னுதாரனமா நடந்துக்கணும். இங்க படிக்கிற நிறைய குழந்தைகளோட பிரச்சினையே, பெற்றோர்கள் வீட்டுல உள்ள பிரச்சினையை குழந்தைகளுக்கு தெரியுறமாதிரி காமிக்கிறது. குழந்தைங்க முன்னாடியே சண்டை போடுறது. இது மட்டும் இல்லாம உங்க வீட்டுல இருந்ததுனா, உங்க பையன திறமையான மாணவனா ஆக்குறதுல எங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. நாங்க உங்களுக்கு உறுதி கொடுக்கிறோம் என்று சொல்லிய போது, இந்த மாதிரியான பதிலை எனது தந்தையார் எதிர்பார்க்கவில்லை. அவருடைய கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி புதுமையான கோணத்துல பட்டுனு பதில் சொன்ன உங்கள பாராட்டுறேன். என்னோட பையன ஒரு சிறந்த சிந்தனையுள்ள ஆசிரியர்கிட்ட ஒப்படைக்கிறதுல ரொம்ப சந்தோசம். மாசத்துக்கு ஒரு தடவை விடுதிக்கு என்னோட பையன பாக்க வர்றப்ப, உங்கள வந்து பாக்குறேன் டீச்சர் என்று சிறிது கண்ணீர்த் துளிகளோடு, என்னிடம் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஊருக்கு சென்றார். ஆசிரியர் செல்வராணி அவர்கள் என் அப்பாவிடம் கூறியதுபோல், என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

செல்வாராணி அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், ஒரு வாரம் கழித்து, நான்கு மாத கால விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டார். இவருக்கு பதிலாக ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் காமராஜ் அவர்கள் வந்தார்.
மாணவர்களிடம் மிகுந்த தோழமையுடன் பழகினார். பள்ளிப் பாடங்களைப் படிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய மாதத் தேர்வில் 54 மாணவர்களில் 38 வது ரேங்க் தான் எடுத்தேன்.
இதைக் கேட்டு என் அப்பா வருத்தப்படவில்லை. இப்பதான புதுசா போய் சேந்துருக்கே. புதிய சூழ்நிலை, பாடம் நடத்துற முறையை பின்பற்ற கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். பரவாயில்லை, நல்லா படி என்றார். நான் சொன்னேன் - வர்ற காலாண்டுத் தேர்வுல நல்ல மதிப்பெண் எடுத்து, 10 ரேங்குள்ள வர்ற பாக்குறேன் என்று அப்பாவிடம் உறுதி கூறினேன்.

அதேபோல் காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய இரண்டு மாத இடைவெளியில், கடினமாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, 2 வது ரேங்க் எடுத்தபோது, உடன் படித்த மாணவர்களும், ஆசிரியர்களும் சதம்பித்துப் போனார்கள். இயற்பியல் ஆசிரியர் ஞானப்பிரகாசம் என்னிடம் கேட்டார் - ஏன் செந்தில்குமாரு நல்ல மதிப்பெண் எடுத்த நீ, ஏம்பா முதல் மாதத் தேர்வுல சொதப்புனே என்றார். ஐயா, எங்க கிராமத்து பள்ளியில நல்லாதான் படிச்சேன். ஆனா, இங்க பாடத்திட்ட முறை, சொல்லிக்கொடுக்கிறத உடனே கிரகிக்க முடியல. அதனாலதான் படிக்கிறதுல இழுபறியா போச்சு. இனிமே என்னோட படிக்கிற பெர்பாமன்ச விடமாட்டேன் என்று சொன்னபோது, ரொம்ப நல்ல பதிலை சொன்னதுக்கு பாராட்டு என்றார். 10 வகுப்பு வரைக்கும் எனக்கு ஞானப்பிரகாசம் ஆசிரியர் சிறந்த வழிகாட்டியாக இருந்தார்.

ஆனால் ஆங்கில பாடத்தில் மட்டும் என்னால் 100 க்கு 50 மதிப்பெண்ணுக்கு மேல் பத்தாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் தாண்ட முடியவில்லை. அதிசயமா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுல 52 மதிப்பெண் எடுத்தேன். ஏனெனில், ஆங்கிலப் பாடம் ஒன்று மட்டுமே எனக்கு வேப்பங்காயாக கசந்தது.
12 ம் வகுப்பு படிக்கும் வரைக்கும் ஆங்கில பாடத்துடன் மட்டுமே எதிர்நீச்சல் போட்டேன்.

நான்கு மாத விடுமுறையை கழித்து வந்த செல்வராணி ஆசிரியர் கேட்டார் - நல்லா படிக்குற நீ, ஏன் என்னோட பாடத்துல மதிப்பெண் கூடுதலா எடுக்க முடியல. விருப்பமில்லாத பாடத்தை கடமைக்கு படிக்கிறதால, நல்ல மதிப்பெண் எடுக்க முடியலன்னு சொன்னப்ப, அவருக்கு கொஞ்சம் கோபம் வந்துருச்சு. நான் என்ன செய்வேன், அவங்க கேட்டதுக்கு என்னோட மனசுல உள்ளதை வெளிப்படையா சொன்னேன். இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பள்ளி நாட்கள் நகர்ந்தன.

நாடார் மேல்நிலைப் பள்ளியில 10 ம் வகுப்பு படிக்கிற வரைக்கும் வகுப்புல 2 வது, 3 வது ரேங்க் எடுத்துகிட்டே இருந்தேன். ஆனா முதல் ரேங்க் மட்டும் என்னால எடுக்க முடியல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுல 400 மதிப்பெண்ணுக்கு 5 மதிப்பெண் குறைவு. நானுருக்கு மேல எடுக்க முடியலேன்னு வருத்தப்பட்டேன். விவசாயத்துல சரியான வருமானம் இல்லாததால குடும்ப பொருளாதாரம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால 1997 ம் வருடம் 11 ம் வகுப்பு கழுகுமலையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில கணிதப் பிரிவுல சேர்ந்தேன். 17 மாணவர்கள்தான். 17 பேருல 15 பேரு பசங்க. 2 பேரு பொண்ணுங்க - ஜெயலக்ஷ்மி, சந்தான லட்சுமினு ரெண்டு பேரு. 11, 12 வகுப்புல சீரியஷ்ணஸ் இல்லாம, விளையாட்டுதனமா படிச்சதால, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுல குறைவான மதிப்பெண்கள் தான் எடுக்க முடிஞ்சது. இந்த 3 வது தொடரோட என்னோட பள்ளி நினைவுகளை, எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி கணிப்பொறித்துறை எனது அருமைப் பேராசிரியரோட அன்பான வேண்டுகோளுக்கிணங்க நிறைவு செய்வதோட, அடுத்த நினைவுகள பதிவு செய்ற தொடருல இருந்து, எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியோட 3 வருஷ பசுமையான, இனிமையான நாட்களைப் பத்தி எழுதப் போறேன். எத்தனை தொடர் எழுதப் போறேன்னு எதுவும் முடிவு செய்யல. இதயத்தோட ஆழத்துல புதைஞ்சு கிடக்கிற நினைவுகள சொல்ற வரைக்கும், எழுதிகிட்டே இருப்போமுன்னு முடிவு செஞ்சிருக்கேன்...

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment