Friday, September 26, 2008

நினைவுகள் - 4

உயர உயர பறந்தாலும் 
வானத்தின் எல்லையைத் 
தொடமுடியாது!
ஆனால் 
ஜொலிக்கும் நட்சத்திரத்தையோ 
முழுமதி போன்ற சந்திரனையோ 
சுட்டெரிக்கும் சூரியனையோ 
தொட்டுவிடலாம்!

கல்லூரி வாழ்க்கையில் பயணிக்கையில், வரிசைக் கிரமமாகவோ, ஆண்டு வாரியாகவோ பயணிக்கப் போவதில்லை. பசுமையான, இனிமையான நினைவுகள் எங்கேயெல்லாம் தென்படுகிறதோ, அங்கிருந்தெல்லாம் பயணிக்கப் போகிறேன். கசப்பான நினைவுகளை தவிர்த்து விட்டு,
என்னுடன் பயின்ற நண்பர்களையும், பிற வகுப்புத் தோழர்களையும், கல்லூரியின் பேராசிரியர் -களையும், சீனியர் மாணவர்களையும் கதாபாத்திரங்களாக உருவாக்குவதன் மூலம், நான் அவர்களை எந்த அளவிற்கு நேசித்தேன் என்பதை சொல்வதற்கு நல்லதொரு களமாக இந்த கல்லூரி வலைப்பூ இருக்கும். என்னுடைய நண்பர்களில் சில பேர் கணிப்பொறித்துறையில் அடுத்த 10,15 வருடங்களில் உலகம் போற்றும் அளவிற்கு சகாப்தம் படைக்கப் போகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவர்களுடைய நண்பர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

என்னுடைய இளங்கலைப் படிப்பு மூன்றாமாண்டு மாணவர்களின் வழியனுப்பு விழாவிற்குச் செல்கிறேன்...

இன்றைய தினம் அதிகாலைப் பொழுதில் நான்கு மணிக்கே எழுந்து விட்டேன். என்னுடைய ரூம் மேட் மாமா போத்திராஜ், TANCET நுழைவுத் தேர்வுக்கு Objective Type வினாக்களை படித்துக் கொண்டிருந்தார். என்னுடன் பயின்ற மாமா போத்திராஜ் எனது கிராமத்திற்கு அருகிலுள்ள இளையரசனேந்தல் என்ற ஊரைச் சேர்ந்தவர். போத்திராஜை மாமா மாமா என்றுதான் அழைப்பேன். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்தில் என்னுடைய அறைத் தோழன் இவர்தான். முதல் முறையாக அன்போடு மாமா என்று அழைத்தபோது, ஏன் இப்படிக் கூப்புடற செந்திலு. பேரைச் சொல்லிக் கூப்புடு என்றார். நானும் விடவில்லை, மாமா என்றுதான் அழைத்தேன். கிண்டலுக்காக நான் அப்படி அழைக்கவில்லை. என்னுடைய தாயாருடன் பிறந்த சகோதரர் சீனிவாசன் மாமாவைப் போன்றே தோற்றம் இருந்ததால், அப்படி அழைத்தேன். இதனால்தான் நான் உங்களை இப்படி அழைக்கக் காரணம் என்று சொன்னபோது, சரிப்பா கூப்புட்டுப் போ என்று பச்சைக் கொடி காட்டினார் போத்திராஜு.


என்ன மாமா, இன்னைக்கு நமளுக்கு வழியனுப்பு விழாவாம். செய்முறைத் தேர்வு முடிஞ்சது. இனி பல்கலைக் கழகத் தேர்வுக்கு படிக்கணும். தேர்வு முடியுறதுக்குள்ள ஒரு வழி ஆகிருவோம். எப்படி இருந்தாலும் நானு இரண்டாம் வகுப்புலதான் தேர்ச்சி பெறப் போறேன். தலை கீழ நின்னு படிச்சாலும், 59% தாண்டப் போறது இல்ல. மூணு வருசமும் எங்க மாமா நம்ம கம்பியூட்டரு பாடத்தை ஆர்வமா படிச்சேன். இலக்கியம், அரசியல், வரலாறுன்னு படிச்சேன். படிச்சுகிட்டே இருக்கிறேன். ஆண்டவன் விட்ட வழி. இந்த டிகிரய முடிச்ச கையோட, சட்டப் படிப்புல சேர்ந்துரலாமுனு இருக்கேன் மாமா. என்ன சொல்றீங்க மாமா. செந்திலு இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்குது. நீ எது படிக்கணும்னு முடிவு பண்ணி இருக்குறயோ, அதையே படி. நான் சொல்லுவேன் MCA படி, நல்லா எதிர்காலம் இருக்குதுன்னு. ஆனா, நீ MCA படிப்புல சேர்ந்துட்டு வரலாறு, இலக்கியமுனுதான் படிக்கப் போற. போதாக்குறைக்கு வைகோ, வைகோனு அவரு பின்னாடியே சுத்துற. உங்க அப்பா வேற, ஒரு பரீட்சை நீ எழுதாம ஆப்சண்ட் ஆகிட்டேன்னு, கல்லூரி வகுப்புல வந்து மானத்தை 
வாங்குறாரு. எனக்கு உங்க அப்பா நடந்துக்கிட்டது சுத்தமா பிடிக்கலை. 
நான் உடனே வகுப்பை விட்டு வெளியில வந்து, உங்க அப்பாவை சத்தம் போட்டேன்.

நீங்க படிக்கிற காலத்துல நிறைய வாய்ப்பு இருந்ததுல. என்ன சாதனை செஞ்ச்சீங்க. கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சிதான், உங்க பையனை படிக்கப் போடுறீங்க. நீங்க எப்படி வேணும்னா படிக்க வையுங்க. ஆனா, இந்த மாதிரி பள்ளிக்கூடத்துல போயி பேசுறமாதிரி, வயசுக்கு வந்த பையன, காலேஜ்ல வந்து பேசுறது ரொம்ப தப்புன்னு சொன்னேன் செந்திலு. அவரும் என்னை மன்னிச்சிருப்பா, ஏதோ பையன் மேல இருக்குற அளவுக்கு அதிகமான அன்பால உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நீதானே செந்திலோட ரூம் மேட். நல்லபடியா பாத்துக்கப்பா என்று சொல்லிட்டு உங்க அப்பா போயிட்டாரு. அட மாமா, எனக்கு எங்க அப்பாவோட இந்த மாதிரி சண்டை போடுறது புதுசு இல்ல. ரொம்ப வருசமா பழகிப்போன ஒண்ணு. நீங்க இப்படி சத்தம் போட்டு பேசுனதுக்கு அப்புறம், எங்க அப்பா காலேஜ்ல வந்து என்னை பாக்குறதுக்கே பயப்படுறாரு மாமா.

அது சரி மாமா, இன்னைக்கு வழி அனுப்பு விழாவுல என்ன பேசலாம்னு இருக்கிறேங்க. தெரியல செந்திலு, அந்நேரம் என்ன தோணுதோ பேசலாம்னு இருக்கிறேன். நீ என்ன பேசலாம்னு முடிவு பண்ணி இருக்குற செந்திலு. தெரியலை மாமா. கண்ல இருந்து கண்ணீர்தான் வருது. ஆனா, 
ரெண்டு வார்த்தை பேசலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் மாமா...

நா மூணு வருஷம் படிச்சதுல, துறைத் தலைவர் கிருஷ்ணவேணி மேடத்துகிட்ட மூனே தடவைதான் நல்லா பேசியிருக்கேன். அதுல நான் முதல் தடைவையா பேசுனத, அவங்க வாழ்க்கையிலேயே மறக்க மாட்டேன்னு, அவங்களே என்கிட்ட சொன்னாங்க. அதான் மாமா, சம்பந்தப்படதா ஒரு காதல் விவகாரத்துல, என்னைப் புரிஞ்சிக்காத இந்த உலகத்தை விட்டே போயிரலாம்னு இருக்குறேன் மேடம்னு சொன்னது. அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடிய வார்த்தையா அது. அவங்க அனுபவத்துல யாருமே இப்படி பேசுனது இல்லையாம். இனிமே யாரும் இப்படி பேசப் போறதும் இல்லையாம். அதனால மாமா, இந்த வழியனுப்பு விழாவுல நான் பேசப் போற ரெண்டே வார்த்தை இதுதான் மாமா...

உன்னை அறிந்தால் நீ 
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் - உலகத்தையே ஆளலாம்..!!

கவியரசு கண்ணதாசனின் இந்த இரு பாடல் வரிகளை வழியனுப்பு விழாவில் பேசியபோது, செந்திலா இப்படி பேசுறாப்புல என்று அனைவரும் கை தட்டினார்கள். கிருஷ்ணவேணி மேடம் என்னைப் பார்த்து புன்னைகைப் பூத்தார். நாலாவது வார்த்தையா நான் இருக்கும்போது செந்திலு, நல்லா பேசுனே செந்தில்குமாரு என்று ஒரு வருடம் கழித்து, Convocation சான்றிதழை வாங்க கணிப்பொறித்துறைக்கு சென்றபோது, கிருஷ்ணவேணி மேடம் அவ்வளவு ஞாபகம் வைத்து என்னிடம் சொன்னபோது, அந்த வார்த்தையையே என்னுடைய வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டேன். மேலும் சொன்னார், நம்மள புரிஞ்சிக்காத இந்த உலகத்தை விட்டு போறதுக்கு பதிலா, இந்த உலகத்துலேயே வாழ்ந்து, உலகமே நம்மள திரும்பி பாக்குறமாதிரி நீ வாழனும் செந்தில்குமாரு என்று சொன்னபோது, அவர் என்னிடம் இவ்வளவு பெரிய வார்த்தையை கூறுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் இப்படி பேசுவேன்னு நீ எதிர்பாக்கலை செந்திலு. நானும் நீ என்கிட்ட இதே மாதிரி பேசுறப்ப, எதிர்ப்பார்க்கலை என்று சொன்னார். அவர் கூறியது ஒவ்வொரு நிமிடமும் காதுகளில் ஒழித்துக் கொண்டே இருக்கிறது.

மாமா போத்திராஜ் உள்ளத்தை உருக்கும் ஒரு கவிதை வரியை வழியனுப்பு விழாவில் சொன்னார். மெய்சிலிர்த்துப் போனேன். இன்று வரைக்கும் என்னால் இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை.


தமிழ் திரைப்பட இயக்குநர் ரா.பார்த்திபன் சினிமா வாய்ப்பு தேடி, சென்னைக்குச் சென்றார். 5, 6 வருடங்களாக உதவி இயக்குநராகும் வாய்ப்போ, படத்தில் நடிகனாக நடிக்கும் வாய்ப்போ கிடைக்கவில்லை. இதனால் மனதில் விரக்தி ஏற்பட்டு ரா.பார்த்திபன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ஆர்பரிக்கும் கடலை நோக்கிச் செல்கிறார். ஒரு கவிதை வரிகளோடு கடற்கரை மணலில் துண்டு சீட்டு கிடப்பதைப் பார்க்கிறார் பார்த்திபன். எடுத்துப் படிக்கிறார்...

வாழ்ந்து என்ன சாதித்தோம் 
செத்துப் போகலாம்!
செத்து என்ன சாதித்தோம் 
வாழ்ந்து காட்டலாம்!!

இந்த வரிகளை எழுதும்போதே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இந்த வரிகளைப் படித்த பார்த்திபன், தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு, திரும்பி சென்னை மாநகரை நோக்கி கம்பீரமாக நடந்து செல்கிறார். அடுத்த சில வருடங்களில் கம்பீரமான தமிழ் திரை உலகின் இயக்குநராக உயர்கிறார் என்று உணர்ச்சிப் பூர்வமாக, மாமா போத்திராஜ் சொல்லி முடித்தபோது, அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது...

இதைக் கேட்ட எனக்கு கண்ணீர்த் துளிகள், கன்னத்தில் வழிந்தோடி நெஞ்சை நனைத்தது. அந்த நான்கு வரிகளைச் சொல்லி, என்னுடைய மாமா போத்திராஜ், என் வாழ்வையே மாற்றிப் போட்டுவிட்டார்...

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment