Thursday, October 2, 2008

நினைவுகள் - 5

என்னுடைய வகுப்பு மாணவர்களுடன் வழியனுப்பு விழாவிலேயே இருக்கிறேன்...

அவள் வர மாட்டாள் 
என்று தெரிந்திருந்தும் 
அவளது நினைவுகளோடு 
அவளுக்காக மணிக்கணக்கில் 
காத்துக்கொண்டிருந்தேன் 
பேருந்து நிறுத்தத்தில்...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

போத்திராஜ் மாமா மூணாவது ஆளாக பேசச் சென்றார். இதுக்கு முன்னாடி பதிவுல போத்திராஜு கடைசியா பேசுனது. தொடக்கத்துல பேசும்போது, பல கனவுகளோட இந்தக் கல்லூரிக்கு நான் படிக்க வந்தேன். இப்ப மேலும் பல கனவுகளோட டிகிரிய முடிச்சுட்டு போகப் போறேன். என்னோட கனவுல ஒண்ணு, இந்தக் கல்லூரியில இளங்கலை கணிப்பொறித் துறையில பட்டம் பெறப்போவது. எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சி, IAS தேர்வுல ஜெயிச்சு, மாவட்ட ஆட்சித் தலைவரா வரணும்ங்கிறது, என்னோட வாழ்நாள் லட்சியம். ஒரே கைதட்டல்...! ஏன்னா, இப்படி மனசுல நினைக்கிற லட்சியத்த எல்லாரும் முன்னாடி சொல்றதுக்கே ஒரு கட்ஸ் வேணும், மனசுல ஒரு வெறி வேணும். அவங்கதான் இப்படி வெளிப்படையா பேசமுடியும். மாமா போத்திராஜு இந்த கலெக்டர் லட்சியத்தை எல்லாரும் முன்னாடியும் போட்டு உடைப்பார்னு, நான் நினைச்சுக் கூட பாக்கல. நீங்க Great மாமா அப்படின்னு, என்னோட மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.

தொடர்ந்து மாமா பேசுனப்ப, கம்பியூட்டரு கோர்ஸ் படிச்சா, கம்பியூட்டரு வேலையிலதான் போய் சேரணும்னு எல்லாரும் நினைக்காதிங்க. இந்த படிப்பை ஒரு அடிப்படையா வச்சுகிட்டு, கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு, உங்ககிட்ட என்ன மாதிரி திறமை இருக்குனு கண்டுபிடிச்சு, அந்தத் துறையில நீங்க சாதிச்சீங்கனா, உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும். இந்தக் கல்லூரிக்கும் நீங்க பெருமைத் தேடித் தரலாம்.

இப்படி நாம பலவகையில சிந்திச்சாலும், நம்ம வகுப்பிலேயே, கல்லூரியில இருக்கிற எல்லாராலயும் பேசப்படுற, என்னோட உயிர் நண்பன் மற்றும் என்னோட ரூம் மேட் கழுகுமலை செந்தில்குமாருக்கு, வாழ்க்கையில ஒரு பெரிய லட்சியம் இருக்கு. நாம யாருமே நினைச்சுப் பாக்காத அரசியல் துறையில சாதிக்கணும்னு துடியா துடிக்கிறாரு. அவரோட இலட்சியம் வெற்றி பெற நாம் அனைவரும் வாழ்த்துவோம் என்று மாமா போத்திராஜ் எல்லாரும் முன்னாடி சொன்னதுல, நான் அய்யயோனு தலையில கையை வச்சுட்டேன்.

அந்த அரங்கத்துல இருக்குற எல்லோரும் கைதட்டுனாங்களோ இல்லையோ, நல்லா விழுந்து விழுந்து எல்லாரும் சிரிச்சாங்க. எப்பவுமே 
புதுமையான சிந்தனைக்கும், முயற்சிக்கும் கேலி, கிண்டல், நையாண்டி இல்லேன்னா, மாற்றுச் சிந்தனைக்கு மதிப்பே இல்லாம போயிடும். அவங்க சிரிச்சத நான் பெரிசா எடுத்துக்கல. மாமா போத்திராஜ நினைச்சு பெருமைப்பட்டேன். போத்திராஜுக்கு முன்னாடிதான் நான் பேசிட்டு வந்தேன். என்னோட மனசுல உள்ளத அந்த சமயத்துல சொல்ல முடியல.

போத்திராஜு சொன்னதால, இப்படியாச்சும் நாம நினைக்குற விஷயம் மத்தவங்களுக்கு தெரிஞ்சதேனு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அதுக்குப் பிறகுதான் போத்திராஜ் மாமா, என்னை அழ வைக்கிற மாதிரி, இயக்குநர் 
பார்த்திபனைப் பத்தி பேசுனது. 

இந்த வழியனுப்பு விழா நடக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், பேராசிரியர் தனபால் சாரு, அமெரிக்காவுல இருந்து திரும்ப வந்து, கணிப்பொறித்துறையில திரும்பவும் துறைத் தலைவரா பொறுப்பு ஏத்துக்கிட்டது. அதனால இந்த விழாவுல கிருஷ்ணவேணி மேடம் துறைத்தலைவர் பதவியிலிருந்து, உதவிப் பேராசிரியரா மாறிட்டாங்க. 
நான் கடைசியா பேசும்போது கூட, முன்னாள் துறைத்தலைவர் கிருஷ்ணவேணி மேடத்துக்கு நன்றினுதான் சொன்னேன்.

அப்புறமா கலிங்கப்பட்டி ஊரு கோபிகிருஷ்ணன் பேச வந்தான். கொஞ்ச நேரம் பேசிகிட்டே இருந்தவன், சசிகலா மேடமுன்னு ஆரம்பிச்சான். திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டான். எங்களுக்கெல்லாம் என்னடா இது, கோபி இப்படி அழுகுறான்னு பேசிகிட்டோம். சசிகலா மேடம் கலிங்கப்பட்டி ஊருக்காரங்க. அதான் மதிமுக தலைவர் வை.கோபால்சாமியோட ஊரு. கோவில்பட்டியில கதிரேசன் கோவில் சாலையில, சொந்தமா வீடுகட்டி குடியிருந்தாங்க. எங்களுக்கு Visual Basic பாடத்தை கடைசி பருவத்துல நடத்துனாங்க. எங்க வகுப்புல ரொம்ப பாசமா இருப்பாங்க. கோபம் வந்துச்சுன்னா, தாங்கவே முடியாது. திடீர்னு அன்பா பேச ஆரம்பிச்சிருவாங்க. கோபி ஒரு பொண்ண, சின்சியரா லவ் பண்றதால, பிரிவுத் துயரம் தாங்காம அழுகுறான்னு பக்கத்துல உக்காந்துக்கிட்ட இருந்த, நாகலாபுரம் சுரேஷ்குமாரு சொன்னான். காலேஜ் வாழ்க்கையில லவ்வுன்னு ஒன்னு இல்லன்னா, என்ன மாப்பிளே பிடிப்பு இருக்கும். நான் சொன்னேன் சுரேஷ்குமாருகிட்ட - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment