Tuesday, June 10, 2008

நினைவுகள் - 2

என்னுடைய பள்ளிக்கூட வாழ்கையின் நினைவுகளை எழுதி முடித்த பிறகுதான், எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியின் வாழ்க்கையினூடாக பயணிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஏனென்றால் நான் படித்த நாடார் மேல்நிலைப் பள்ளிக்கும், எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரிக்கும் நிறைய ரத்த சொந்தம் இருக்கிறது. இந்த ரத்த பந்தத்தை என்னவென்று கல்லூரியின் பசுமையான நினைவுகளை பதிவு செய்யும் போது பிரதிபலிக்கும்.

நான் என்னுடைய பள்ளிக்குச் செல்கிறேன்... 


காலச் சக்கரம் எப்படி சுழன்று ஓடுகிறதோ, அதன் பாதையில்தான் நமது வாழ்க்கையும் செல்கிறது. சக்கரத்தைப் பாருங்கள், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என்று மாறி மாறி சுழல்கிறது. இதில் கால அளவைப் பொருத்து ஒவ்வொரு -வருக்கும் ஏற்ற இறக்கங்கள் அமையும். இதை ஆருடத்தில் சகடயோகம் என்பார்கள். சகடயோகம் உள்ளவர்கள் வாழ்வின் இறுதிக் காலத்தை நெருங்கும்போது, வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்திருப்பார்கள். என்னுடைய தந்தையார் 44 வயதிற்குள்ளாகவே வாழ்வில் பல இடர்பாடுகளை சந்தித்தவர். ஆகையால் எந்தவொரு விசயத்திலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார்.

அப்படித்தான் என்னுடைய கல்வி விசயத்திலும் முடிவெடுத்தார். எனது கிராமத்திலிருந்து 18 கீ.மீ தொலைவில் உள்ள கோவில்பட்டியிலுள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பில் சேர்த்து விடுவது என்று. தமிழ் வழி பாடப் பிரிவில் மாணவர் விடுதியில் தங்கிப் படிப்பதென்று. 1992 ம் வருடத்தில் பள்ளியில் சேருவதற்குண்டான கட்டணம் ரூ.300/-. விடுதியில் சேருவதற்கு வருடத்திற்கு ரூ.2000/-. மாத உணவு செலவு ரூ.210/- தான். பள்ளியானது மாநில அரசின் நிதி உதவி பெற்று பல்வேறு நிர்வாகக் குழு உறுப்பினர்களால் நிர்வாகம் செய்யப்படுவது. பிரமாண்டமான கட்டிடங்களையும், வகுப்பு அறைகளையும், மைதானத்தையும் கொண்ட பள்ளி. பள்ளிக்கு எனது அப்பாவுடன் சென்ற முதல் நாள் மனம் ஏனோ படபடவென்று அடித்துக் கொண்டது. பள்ளிக்குள் 9,10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் நல்ல உயரமாக, கட்டு மஸ்தான உடம்புடன் திபு திபு வென்று இருந்தார்கள்.

பள்ளி சீருடையை மாணவர்கள் அணிந்திருந்ததால் ஆசிரியர்களையும், மாணவர்களையும் அடையாளம் காண முடிந்தது. இல்லையென்றால், ஆசிரியரையும், மாணவரையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. 1992 ம் வருடத்தில் இருதயராஜ் அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் தலைமை ஆசிரியராக இருந்த காலங்கள் பள்ளிக்கு ஒரு பொன்னான காலங்கள் என்றே சொல்லலாம். இவரைப் போன்ற சிறந்த கல்வியாளரையும், கம்பீரமான நிர்வாகத் திறமை கொண்ட ஆசிரியர்கள் சில பேர்தான் இருப்பார்கள்.

விடுதிக் காப்பாளர்களகா வரலாற்று ஆசிரியர் சேர்மக்கனி, விலங்கியல் துறை ஆசிரியர் அனந்தகிருஷ்ணன், இயற்பியல் துறை ஆசிரியர் வெங்கடேஷ் என்ற மூன்று பேர் இருந்தார்கள். இவர்களில் ஆசிரியர் சேர்மக்கனியைத் தவிர்த்து மற்ற இரண்டு பேர்களும் கண்டிப்புக்கு பேர் போனவர்கள். சிறு தவறு செய்தாலும் கையில் மூங்கில் கம்பால் அடிப்பார்கள். இப்படி இவர்களிடம் நான் பல தடவை அடிவாங்கி, அடிவாங்கி கையே மரத்துப் போய்விட்டது. நானும் சில மாணவர்களும் ஒரு சிறு குறும்பு செய்துவிட்டு மூங்கில் கம்பால் அடிக்கும்போது, கொள்ளென்று சிரித்து விட்டோம். இரு ஆசிரியர்களும் அப்படியே ஆடிப் போனார்கள். என்ன செந்தில்குமாரு, கிருஷ்ணகுமாரு, முருகேஷா, ராமமுர்த்தி - சேட்டையும் செஞ்சுட்டு, அடியும் வாங்கிட்டு சிரிக்கிறீங்க. எல்லாருக்கும் என்ன என்.எஸ்.கிருஷ்ணன் நினைப்பா, இல்ல சார்லின் சாப்ளினு நினைப்பா. இனிமே சிரிச்சீங்க, முதுகெலயும், முட்டிக்குக் கீழேயும்தான் அடிப்போம் என்று சொன்னதும், திரும்பவும் எங்கள் அனைவருக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டோம். இனிமே நாங்க உங்களை ஏதாவது கேட்டோம்னா, நீங்க பிரம்பால எங்களை அடிக்கலாம். இதுக்கு மேல உங்ககிட்ட பேசுறதுல பிரயோசனம் இல்ல என்று சொல்லிவிட்டு, சட்டென்று அவர்களுடைய அறைக்குச் சென்றுவிட்டார்கள்.

நாங்கள் செய்த தவறு என்னவென்றால், விடுதியில் மாலை நேர படிப்பு நேரமான 6 மணியிலிருந்து 8 மணிப் பொழுதில் தலையணை, பாயோடு சென்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒரு ஓரமாக மரத்தடியில் சென்று உறங்கிவிட்டோம். கொசு அதிகமாக கடிக்கும் என்பதால், அதற்கென்று உள்ள எண்ணையை தடவி, போர்வையை நன்றாக இழுத்து மூடி தூங்கிவிட்டோம்.
மாணவர்களின் வருகையை சரி செய்யும்போது இரு ஆசிரியர்களும் எங்களை காணாமல் தேடியபோது, உடன் படிக்கும் செண்பகராமன் நாங்கள் தூங்கும் இடத்தை சொல்லிவிட்டான். அப்போது இரு ஆசிரியர்களும் சொல்லியிருக் -கிறார்கள் - எந்தக் கவலையுமில்லாத ஞானம் பெற்ற ஞானிகளப்பா. நாங்களும்தான் தூங்கிப் பாக்குறோம், எங்க தூக்கம் வருது. இரவு 2 மணிக்கு மேலதான் தூக்கமே வருது. கும்பகர்ணன் கிட்ட போயி தூங்குற வரம் வாங்கிகிட்டு வந்துருப்பாங்க போல தெரியுது. சரி நாங்க பாத்துக்கிறோம் என்று பேசியிருக்கிறார்கள். அதன்பிறகு நீங்க போயி படிங்க என்று சொல்லிவிட்டு இரு ஆசிரியர்களும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஜெயபிரகாஷ் என்பவரை அழைத்துக் கொண்டு, எங்களைத் தேடி வந்தார்கள். மறு நாள் காலை வேளையில் செண்பகராமன் இதை எங்களிடம் சொல்லி சொல்லி வயிறு குலுங்க சிரித்தான்.

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment