Saturday, May 5, 2012

நினைவுகள் - 2

முதலாம் ஆண்டு கணிப்பொறி வகுப்பில் படிக்கும்போது மொத்தம் இருபத்தி ஏழு மாணவர்களாக இருந்தோம். முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஆகஸ்ட் 27 ந் தேதி ஆயிற்று. நானோ கல்லூரியில் அட்மிஷன் போட்டுவிட்டு ஜூலை மாதம் வாக்கில் வகுப்புகள் ஆரம்பித்துவிடும் என்று ஆர்வமாக இருந்தேன். அது என்னடா என்றால், ஆகஸ்ட் மாத இறுதியாகிவிட்டது. பல்கலைக்கழகத் தேர்வுகள் நவம்பர் மாதமே ஆரம்பித்துவிடும் என்பதால், பேராசிரியர்கள் அனைவரும் பாடங்களை விரைவாக நடத்த ஆரம்பித்தார்கள்.

கணித மேதை ஸ்ரீநிவாச இராமனுஜம் 
என்னுடைய வகுப்பில் சேர்ந்த இருபத்தி ஏழு மாணவர்களில் இரண்டு பேர் இரண்டே வாரங்களில் கல்லூரியை விட்டு விலகி, வேறு கல்லூரிக்கு போய்விட்டார்கள். ஈரோட்டிலுள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படித்த கதிரவன் ஒருவர். நாமக்கல் ஊரைச் சேர்ந்த தனலட்சுமி என்ற இன்னொரு மாணவி. முதலாமாண்டு முடித்து இரண்டாமாண்டு ஆரம்பிக்கும்போது, கோவை பயோனியர் கலை அறிவியல் இளநிலை படித்த எனது ஆருயிர் நண்பன் செல்வகுமார் படிப்பை நிறுத்திவிட்டான். சில நண்பர்களுடன் சேர்ந்து BPO நிறுவனம் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தான். இன்றுவரைக்கும் அலைபேசியில் பேசிக்கொள்கிறோம். ஆனால் நேரில் சந்திக்க முடியவில்லை. என்ன ஒரு வினோதமான காலங்கள்..!! ஆக இரண்டாமாண்டு படிக்கும்போது வகுப்பில் இருபத்தி நான்கு மாணவர்கள் இருந்தார்கள்.

முதலாமாண்டு முதற்பருவத்தில் Discrete கணிதப் பாடத்தை எடுக்க கணிதத்துறை பேரா.Dr.கார்த்திகை செல்வி அவர்கள் வந்தார். அற்புதமாக பாடம் நடத்தக்கூடிய பேராற்றல் இருந்தது. மூன்று மணி நேரம் கணிதப் பாடத்தை நடத்தினாலும், ஏதோ அற்புதமான திரைப்படம் பார்ப்பது போன்ற 
ஒரு பிரமிப்பு ஏற்படும். மாணவர்களுக்கு சோர்வு ஏற்படாத வண்ணம் கணித முறைகளைக் கையாள்வார். பாடம் நடத்தும்போது இடையிடையே நகைச்சுவையான கணிதம் சம்பந்தப்பட்ட விசயங்களை சொல்லுவார். கடினமான இவருடைய பாடத்தில் பல்கலைகழகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றேன்.

சகுந்தலாதேவி 
பேரா.கார்த்திகை செல்வி அவர்களை நான் கணிததுறைக்குச் சென்று சந்திக்கும்போது, Reborn of Srinivasa Ramanujam, Living legend of NGP College Sakunthaladevi Madam என்று கூறிவிட்டு, வணக்கத்தை தெரிவித்துக் கொள்வேன். வாப்பா செந்தில்குமாரு, பவர்புல்லான வார்த்தைகளை சொல்லி ஆளுகள கிளீன் போல்டாக்குறது எப்படின்னு தெரிஞ்சு வச்சிரிக்கிறியே. எதிரகாலத்துல பெரிய பிரசங்கியா வருவேன்னு நினைக்கிறேன். உங்களோட வாக்கு உண்மையாச்சுன்னா, என்னோட வாழ்நாள் முழுவதும் உங்க பேர எங்க போனாலும் சொல்லிகிட்டே இருப்பேன் மேடமுன்னு ஒரு நாள் சொன்னேன்.

கோவை மேயருடன்
பேரா.கார்த்திகை செல்வி அவர்கள் கணிதத் துறையில் துறைத்தலைவராக இருந்தார். கல்லூரி ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகி ஆரம்ப கால கட்டமாதலால், கல்லூரியின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தார். நான் தினசரி படித்த ஏதாவது புதிய விசயங்கள் குறித்து துறையில் பத்து நிமிட நேரம் அவருடன் பகிர்ந்து கொள்வேன். ஏதேனும் புதிய விசயங்களை பேராசிரியர் என்னுடன் பகிர்ந்து கொள்வார். இப்படியாக கணிதத்துறை பேராசிரியர் Dr.கார்த்திகை செல்வி அவர்கள் என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு வகுப்பில் புதியதொரு அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். நான் முதுகலை வகுப்பு படித்த பிறகு, பேராசிரியர் அவர்கள் NGP கல்லூரி -யிலிருந்து விலகி வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டார். மாதத்திற்கு ஒருமுறை பேராசிரியரை அலைபேசியில் அழைத்து இன்று வரைக்கும் நான் பேசிக்கொள்வேன். நான் சமூகத்தில் பணியாற்றும் பல்வேறு களப்பணிகளுக்கு முதுகெலும்பாகவும், கிரியா ஊக்கியாகவும் பேராசிரியர் அவர்கள் இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment