Wednesday, October 31, 2012

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்...

தெற்காசியாவில் அமெரிக்க மேலாண்மையைக் கேள்விகளே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்...

விடியல் பதிப்பகத்தின் வெளியீடாகத் தமிழில் வந்திருக்கும் ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் சுயசரிதை நூல் சமீபத்தில் வெளிவந்துள்ள அரசியல் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இந்திய அரசியல்வாதிகளில் பலரும் இத்தகைய வாக்குமூலங்களை அளிப்பதற்குத் தகுதியானவர்கள்தாம். ஆனால், மிஸ்டர் கிளீன்களாகவும் தியாகிகளாகவும் மாவீரர்களாகவும் தம்மைக் கற்பனை செய்துகொண்டிருக்கும் அவர்களுக்கு இது போன்ற ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான மன உறுதியும் சமூகப் பொறுப்பும் குற்ற உணர்வின் உறுத்தல்களும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

 ஐரோப்பியர்களின் நீண்டகாலச் சுரண்டலில் இந்திய உடல்களும் விளைச்சல்களும் மட்டுமே கொள்ளையிடப்பட்டன. ஆனால், அமெரிக்கர்கள் நமது மூளைக்குள் குடியேறி நம் இருப்பை, எதிர்காலத்தைப் பேரம்பேசி எடுத்துக் கொள்கின்றனர். இது ஒருவகை அரூபத்திருட்டு. இதை யார் எங்கே, எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதையெல்லாம் யாராலும் தெளிவாக உணர முடியாது. ஆனால், இது நடந்துகொண்டே இருக்கும். நம்மை விற்பதைப் பரவசத்தோடு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இது வினோதமானதல்ல. நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் அடிமைக் குணத்தின் இயல்பான செயல்பாடு என்றே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். இது சராசரி இந்தியனுக்கு மட்டுமல்ல, அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ஊதிப்பெருக்கப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்து கொண்டே போகிறது. இது இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தையும் நுகர்வுப் பொருள்களின் வணிகத்தையும் இலக்காகக் கொண்டது. விவசாய வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றால், நம் பணத்தின் யோக்யதையை அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு பார்க்கலாம். தெற்காசியாவில் அமெரிக்க மேலாண்மையைக் கேள்விகளே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

புனைகதையாளனுக்குரிய சிரத்தையோடு ஜான் பெர்கின்ஸ் விவரிக்கும் நேர்த்தியில் சுரண்டல் குறித்த, கடனாளியாகும் தேசம் குறித்த துயரம் கவிகிறது. ஈக்வடர், கொலம்பியா, இந்தோனேனியா, பனாமா, ஈராக், சவுதி, ஆப்கானின் நிலக்காட்சிகள், தேசங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவி ஆகியன ஒரே சீராக விவரணை செய்யப்படுகின்றன. லாப நோக்குமிக்க அரசியல்வாதிகளும் அவர்களால் அபாயத்தை உணராத அப்பாவி மக்களும் அடுத்தடுத்து வருகின்றனர். ராஸி, பிடல் போன்ற வெகுளி நண்பர்களும் அவர்களிடம் ஜானின் நடத்தையும் "மெய்ன்" சகாக்களோடு அவரது உறவும் அவரது இரட்டை வாழ்வின் பதிவுகள்.

No comments:

Post a Comment