Sunday, November 4, 2012

சிறுவாணித் தண்ணீர்

சிறுவாணி என்றால் கோவைக்காரர் களுக்கு பெருமையாய் இருப்பது போலவே மற்ற மாவட்டத்துக் காரர்களுக்கு இந்த சொல்லை எழுதிப் படித்தாலே இனிக்கும். 28 ஆண்டுகளு க்கு முன்னாள் தமிழக அரசு கேரளாவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பண்ட மாற்று முறையில் நாம் மின்சாரம் தர, அதற்க்கு மாற்றாக அவர்கள் சிறுவாணித் தண்ணீரைத் தர, மாநகரெங்கும் அது விரிவாகக் கிடைக்க வழிசெய்யப்பட்டது என்பதுதான்
பலருக்கு தெரியும்.

ஆனால் அதற்கு முன் 40 ஆண்டு காலமாக 95,000 பேர் குடிக்கும் அளவுக்கு
சிறுவாணித் தண்ணீர் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது என்பதும்,அது இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்னரேயே வரையப்பட்ட திட்டம் என்பதும் அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த திட்டத்தை 1889 ஆம் ஆண்டு வரைந்து கொடுத்தவர் - இன்று கோவை மில் ரோட்டில் மரக்கடை வீதி பிரிவுக்கு முன்புறம் குளிர்ந்த மரங்களுக்கி டையே உள்ள மகளிர் உயர்நிலைப்பள்ளி யார் பெயரை தாங்கி உள்ளதோ...
அப்பெயருக்குரிய பெரிய மனிதர் சே.ப.நரசிம்மலு நாயுடு தான் அவர்.பெண்ணடிமைத்தனத்தை உடைக்க வங்காளத்தில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் எனும் சீர்திருத்தப் பெரியாரால் கவரப்பட்டு,நரசிம்மலநாயுடு
இப்பள்ளியை முதலில் பிரம்ம சமாஜம் பெண்கள் பாடசாலையாகவே நிறுவினார்.பக்கத்திலேயே ஓர் அச்சகம் அமைத்து கலாநிதி என்ற பத்திரிகையை நடத்தி ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களை பரப்பி வந்தார்.
பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் வாரக் கூட்டங்களை நடத்தினார்.
தென்னிந்திய சரிதம்,பலிஜவாறு புராணம்,தளவரலாறுகள்,ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்களைத் தமிழிலும்,தெலுங்கிலும் எழுதி வெளியிட்ட
இவர்,சிறந்த பேச்சாளரும் கூட.

இவரது திட்ட வரவை 33 ஆண்டுக் காலம் நகரசபை கண்டு கொள்ளவே இல்லை.சுலபமான,செலவு குறைந்த சில திட்டங்களையே ஆராய்ந்து வந்தார்கள்.ஆனால்,அக்காலத்தில் அசுர வேகத்தில் பரவி வந்த பிளேக் என்னும் விசக்காய்ச்சல் சுகாதரக் குடிநீரின் அவசியத்தை உணர்த்திய தால் 1922 - ல் இத்திட்டத்தை பரிசீலிக்கத் தொடங்கினார்கள். நேரடியாகவே இடத்துக்குச் சென்று சாத்தியக் கூறுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டே அதனை நுட்பத்தோடு தீட்டியிருந்த்தார் நரசிம்மலு நாயுடு.

சிறுவாணி என்பது கேரளாவில் முத்திக் குளம் என்னுமிடத்தில் உற்பத்தியாகி,
இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையே பல சிற்றோடைகளுடன் சேர்ந்து
வடக்கே 25 மைல் ஓடி,பவானியோடு கலக்கும் ஒரு சிற்றாறு.உயர்ந்த
மலைகளிலே பெய்யும் மழையினால் அந்த ஆறு எப்போதும் வற்றாமல் ஓடுகிறது.கோவைக்கு மேற்கே 21 மைலில் பொரத்தி அடிவாரத்திற்கு சென்று
அம்மலை ஏறி மறுபக்கம் இறங்கினால் சிறுவானியை அடையலாம்.

சிருவாணிக்குச் செல்லும் வழி மிக அழகாக இருக்கும்.சிருவாணியை வேறுபடித்தி நிற்கும் மலை பொரத்தி மலையாகும்.அதனைக் குடைந்து நீண்ட
துவாரம் ஆக்கி,அதன் வழியாய் வரும் சிருவாணிக்கு ஓர் அணையைக் கட்டி
வைத்து,தேக்கின் நீரை ஓடவிட்டால்,அந்நீர் மலைச் சரிவில் ஓடுகிற
ஆணையாற்றில் வந்து விழும்.அவ்வாற்று நீரைத் தொட்டிகளில் நிரப்பி,
குழாய் வழியக் 21 மைல் தொலைவிலுள்ள நகரத்திர்க்குக் கொண்டு வரச்
செய்தலே இந்த திட்டம் ஆகும்.அதன்படி மலையில் தோண்டப்பட்ட துவாரம்
ஒரு மைல் நீளம்.நீர் மிகச் சுத்தமானது.ஆணை அப்போது 23 அடி உயரம். குழாய் 18 அங்குலம் குறுக்களவு.

திட்டம் நிறைவடையும்போது ஏற்பட்டிருந்த செலவு ரூ.48 லட்சம்.நகருக்கு
வந்து சேர 1928  ம் ஆண்டுக்குள் 30 மைல் தூரத்திற்கு குழாய் போடப்பட்டது. 1929 ம் ஆண்டு மலையில் 390 அடி நீள துவாரம் தோண்டியிருந்த போது வேலை தடைபட்டு நின்றிருந்தது.பிறகு ஒரு வங்காளி அவ்வேலையை
முடித்துத் தர ஒப்பந்தம் செய்து ஓராண்டிற்குள் விரைவாக முடித்துத் தந்தார்.
இதற்கிடையில் 1929 - ல் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியதால்,கோவை மக்கள் பெரும் கிளர்ச்சிகளில் இறங்கினார்கள்.ஆணையாறு எனும் ஆற்று
நீரை எடுத்துக் கொள்ள அனுமபதிப்பதற்க்கு சென்னை அரசாங்கம் அதிக
அவகாசம் எடுத்துக் கொண்டதே தாமதத்திர்க்குக் காரணம்.உடனே
ரத்தினசபாபதி முதலியார் அரசாங்கத்தை அணுகி விரைவாக அனுமதி
பெற்றதும்,நீர் கொண்டு வரப்பட்டது.

முதன் முதலாய் சிறுவாணித் தண்ணீரை குழாய் வழியாகச் சுவைத்த மக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு தொட்டி ஊருக்கு வடக்கே வனக்கல்லூரியை அடுத்த மேட்டில் கட்டப்பட்டது.அதன் உயரம்
கடல் மட்டத்திலிருந்து 1450 அடி.நகரின் மற்ற பகுதிகள் இதைவிடத் தாழ்வானவை.ஆகவே,நீர் சிரமமின்றிப் பாய்கிறது.அத்தொட்டிக்கருகே
அப்போது அன்றைய கவர்னரின் பெயரில் உண்டாக்கப்பட்டதே கோஷன்
பூங்கா-இப்போது பாரதி பூங்கா.இத்திட்டம் நிறைவேற பெருந்துணை செய்தவர் புலியகுளம் ஜமோதார் சின்னமருதாச்சலப் பண்ணாடி என்றொரு குறிப்பு உண்டு.புளியகுளத்தில் இன்னும் சின்னமருதாசலம் பெயரில் ஓர்
வீதியும் உண்டு.

No comments:

Post a Comment