Wednesday, November 21, 2012

எதையும் சாதிக்கும் தமிழ்த் தேசியமே!

மெய்மைத் தமிழர் மகிழ்ச்சி மீதுற
தைமகளே நீ தப்பாது வருகிறாய்
மார்கழிச் சந்தனம் மார்பில் பூசிச்
சிறடி வைத்துச் சில்லென்று வருகிறாய்...

பனிமுக் காட்டுப் பார்வை விலக்கி
நனைந்த மலர்களில் வண்டுகள் நாட்டியம்
பேசுங் கிளிகளின் பெருவிரல் நோக
வாசல் முழுவதும் பூசனிக் கோலம்...

நெடுவர லாற்றின் நிலைத்த புகழுக்கு
அடையாள மான தமிழ்இன்று அழிவில்
உயர்நெம் மொழியாம் உயர்நீதி மொழியாம்
மயக்குறு புகழில் மண்ணாய்ப் போகிறோம்.
கனித்தமிழ் பேசிய மலர்க்காம் புகளின்
நுனிநாக் கெல்லாம் ஆங்கில நோய்க்குறி...

செந்தமிழ் வளர்ச்சித் திட்டங் களுக்கு
இந்திக் காரனிடம் ஏன்மடிப் பிச்சை?
ஆட்சி உரிமை அளிக்கத் துப்பில்லை
காட்சிப் பொருளாய்க் கழிசடை நாடகம்...

வயிற்றுக்குச் சோறு வழங்கிய உழவன்
கயிற்றில் தொங்கிக் கடனில் சாகிறான்
அயலவன் வந்து கொழுத்துப் பெருக்கச்
சிறப்புப் பொருளியல் மண்டலம் தேவையா?

எல்லா நிலையிலும் இயற்கை அழித்துப்
பொல்லாங்கே செயப் புதுப்புதுக் கேடர்கள்
மண்ணே இங்கு மலடாய்ப் போகுமோ?
கண்ணி வெடிகளை விதைக்கரு தாங்குமோ?

நெல்லுக்கும் கரும்புக்கும் மட்டு மல்ல
அல்லல் பட்டே உழவன் அழுத
கண்ணீ ருக்கும் கட்டாயம் விலையுண்டு
மோதிப் பார்க்கட்டும் மூடர்கள்
சாதிக்கும் எதையும் தமிழ்த் தேசியமே!...

No comments:

Post a Comment