Sunday, May 26, 2013

பேராசிரியர்.தனபால் அவர்கள்


எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியில் 1988 ம் ஆண்டு கணிப்பொறிப் பாடப்பிரிவு தொடங்கப்பட்டபோது, கணிப்பொறித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர். 1997 ம் ஆண்டிலிருந்து 2002 ம் ஆண்டுவரையிலான ஐந்து ஆண்டு காலம், கல்லூரியிலிருந்து விடுமுறை பெற்று அமெரிக்காவில் மென்பொருள்துறை தயாரிப்பு வல்லுனராக பணியாற்றியவர். ஆகையால் நான் இளங்கலை படித்த 1999 - 2002 ம் ஆண்டுகளில் இவரிடம் பாடம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய தந்தையாருடன் உடன்பிறந்த சகோதரியின் மகன் ஒத்தையால் கணேஷ்குமார் அவர்கள் 1991-1994 வருடங்களில் கல்லூரியில் படிக்கும்போது, பேரா.தனபால் அவர்கள் பாடம் எடுத்திருக்கிறார். அப்போதைய கல்லூரி அனுபவங்களை அடிக்கடி என்னிடம் கணேஷ்குமார் அவர்கள் பகிர்ந்து கொள்வார். 1998 ம் வருடங்களிலிருந்து கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மாமா கணேஷ்குமார் அமெரிக்காவில் மென்பொருள்துறையில் தயாரிப்பு வல்லுனராக பணிபுரிகிறார். பேராசிரியர் தனபால் அவர்கள் அமெரிக்காவிற்கு பணியில் இருந்தபோது, இருவரும் அடிக்கடி சந்தித்து நிறைய பேசிக்கொள்வோம் என்று கணேஷ்குமார் என்னுடைய தந்தையாரிடம் ஊருக்கு வரும்போது சொல்லிக் கொண்டிருப்பார். 

என்னுடைய இளங்கலை வகுப்பின் மாணவர்கள் வழியனுப்பு விழா நாளன்றுதான் பேரா.தனபால் அவர்களை நான் முதலும், கடைசியுமாகப் பார்த்தது. அதன்பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பேரா.தனபால் அவர்களின் மரணச் செய்தியை கேட்டபோது, ஒருகணம் இதயமே அதிர்ச்சியடைந்தது போல் உணர்ந்தேன். பேரா.தனபால் அவர்களின் மரணம் எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரிக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்புதான்...
இந்த வலைப்பூவில் பேரா.தனபால் அவர்களின் புகைப்படத்தை பிரசுரம் செய்வதற்காக பலரிடம் கேட்டபோது, அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. கோவில்பட்டியின் பிரபல வழக்கறிஞரும், எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியின் முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினருமான என்னுடைய பெரியப்பா அய்யலுசாமி அவர்களின் புதல்வி, மருத்துவர் கமலா(அ)மாரியம்மன் அவர்களின் கணவருக்கு உறவினர் பேரா.தனபால் அவர்கள். ஆகையால் இறுதியாக சென்னையில் வசிக்கும் அவருடைய துணைவியாரிடமிருந்து இந்த புகைப்படத்தைப் பெற்றேன். புகைப்படத்தை வாங்கி கையில் வைத்து பார்த்தபோது கண்களிலிருந்து சிறிது கண்ணீர்த்துளிகள் வந்தது. அந்த அளவிற்கு இவரிடம் பாடம் படிக்கவில்லை என்றாலும், எங்கோ தொலைவிலிருந்து ஏதோ ஒரு வகையில் என்னிடம் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தியவர் பேராசிரியர்.தனபால் அவர்கள்...


எழுஞாயிறு விழுமுன் 
எண்ணிலடங்கா நல்லெண்ணங்களை 
மாணவர்களுக்கு பல்லாண்டுகளாக அளித்த 
எஸ்.ஆர்.என்.எம். கணிப்பொறித்துறை தலைவர் 
பேரா.கே.தனபால் அவர்களுக்கு 
இந்த 2014 கணிப்பொறித்துறையின் 
வெள்ளி விழா (1988-2014) ஆண்டில் 
புகழ் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்...!!
விதைபோல் விழுந்து 
விதையின் விருட்சமாக 
ஆலம் விழுதுகளை பரப்பி 
உலகெங்கும் கணிப்பொறித்துறையில் 
சகாப்தம் படைக்கும் ஆயிரக்கணக்கான 
மாணவர்களை உருவாக்கிய 
கணிப்பொறித்துறையின் காலத்தால் அழியாத 
வரலாற்றின் சகாப்தம் நீங்கள்...!!
வாழ்க உங்கள் கல்விப்பணி..!! வளர்க பேராசிரியரின் புகழ்..!!

No comments:

Post a Comment