Friday, July 26, 2013

காஞ்சிப் புதினம்


புராதானக் காஞ்சிக்குப் புராணமுண்டு
நீயோ-புதிய காஞ்சியை
புதினமாய் எழுதவந்தாய்!

எங்களுக்கும் புகழ்படைத்த -
காஞ்சி புனித இடமாயிற்று!
நிலா,இரவில் பிறந்ததுபோல்
நீ பிறந்த காரணத்தால்.

காஞ்சித் திணையென்றால்
நிலையாமை என்றது
புறப் பொருள் இலக்கணம்.

காஞ்சித் துறை நீயோ - காஞ்சிதான்
நிலைக்குமென்று காட்டினாய்!

புரட்சிசெய்ய வந்த புதியவனே!
புறத்தில் 'காஞ்சி' என்றால் இறப்பு
உனக்கோ அது பிறப்பு!
ஆம்-இறப்பிலே உனக்குப் பிறப்பு!

நங்கையர் அணியும்
நகைகளிலே 'காஞ்சி'யென்றால்
உடுக்கை இடையிலுள்ள
உடுக்கை குலையமால்
தடுக்கின்ற நகை என்பார்.
அதுவோ,உன்னால்
தமிழகத்தின் இடைவுடையைக்
காக்கும் நகை ஆயிற்று!

காயாமல் கணிந்தவன் நீ
காஞ்சியிலே பிறந்ததாலும்
காஞ்சிரங்காய் காய்க்காத
கனிமரம் நீ!தோப்பான தனிமரம் நீ!

மதப்பித்துக் கொண்டவரை மாற்றினாய்;
காஞ்சியைப் புதிப்பித்து
அறிவுக்கோர் புதுக்கோயில்
எழுப்பினாய்!

வலைப்பூ:www.arinaranna.blogspot.com

No comments:

Post a Comment