Friday, July 26, 2013

அரசியலில் ஓர் அதியசம்


அண்ணா!அரசியலில் நீ ஓர் அதிசயம்
கூவத்தில் ,மலர்ந்த குங்குமத் தாமரை
சந்தையில் ஒலித்த சங்கீதம்.

ஒரு - ரத்த நதிக் கரைக்குப்
பூ விதைகளோடு - வந்தவன் நீ!
நீயோர் இசைத்தட்டு
ஊசிகள் உன்னைக் கீரியபோதும்
இசை பாடியவன் நீ!

நீ - பாம்பின் பல்லிலும்
பாலைக் கரைந்தாய்.
வேம்பின் கிளையிலும்
தேன்கூடு கட்டினாய்!

வசந்தமாக நீ வந்தபோது
கொடிமரக் காட்டிலும்
பூக்கள் மலர்ந்தன.

பொன் பிறப்பால் வளம்பிறக்கும்
மின் பிறப்பால் மழைபிறக்கும்
உன் பிறப்பால் நாம் பிறந்தோம்!

இறந்த காலத்தை - எழுத்தால்
எழுப்பினாய்;
நிகழ் காலத்தின் நிஜங்களை
படம்பிடித்தாய்;
வருங்காலப் பூக்களுக்கு
வார்த்தை விதை தூவினாய்.
மூன்று வகைக் காலத்தை
முடிச்சிட்டு வைத்திருந்த
வினைத் தொகை நீ!

காற்றில் அலைக்கழியும்
காகிதமாய் நாமிருந்தோம்
நீதான் என்னைப் பட்டமாக
பறக்கவிட்டாய்.

அண்ணா!உன் பெயரிலே-நீ
உறவு கொண்டுவந்தாய்.

அதை உச்சரித்தவர்கள் - உன்
உடன் பிறப்பாய் ஆயினர்.

இடுகுறிப் பேரை - நீ
காரணப் பேர் ஆக்கினாய் -
உன்னைப் பேர் சொல்லி அழைத்தோம்.
எங்கள் மரியாதை கூடியது!

ஏடுபல படித்து நீ
அறிஞன் ஆனாய் - உன்னைப்
படித்து நாம் அறிஞர்கள் ஆகிவிட்டோம்!

அழுகின்ற போதும்
மேகம் போல் அழுதவன் நீ!
விழுகின்ற போதும் - என் இதயத்தில்
விதை போல் விழுந்தவன் நீ!!

வலைப்பூ:www.arinaranna.blogspot.com

No comments:

Post a Comment