Sunday, July 28, 2013

வைரம் பட்டை தீட்டியது!!

கோடம்பாக்கத்தின் மாசுகுறையாத கறுப்புத் தங்கமே!!


வெளியிட்ட எட்டே மாதங்களில் ஒன்பதாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்' நூலுக்கு மேலும் ஒரு மகுடம்.இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றிருக்கிறது இந்த நாவல்.விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் "காவிரி டெல்டா பகுதிகளில் பரிதவித்து தற்கொலை செய்துகொண்ட 11 விவசாயிகள் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் வீதம் 11 லட்சம் தரப்போகிறேன்!" என்று அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

நூலுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச வரவேற்பு நீங்கள் எதிர்பார்த்ததா?

    "மகிழ்ச்சி.அதற்கு காரணம்.இது சர்வதேசப் பிரச்சனையைக் கையாள்வதுதான்.இது ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல.உலகப் பிரச்சனை.வானத்தின் கீழ் இருக்கும்,வானத்தை நம்பி இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இந்த நாவல் பொருந்தும்!".

நூலுக்கு கிடைத்த கவனித்தக்க பாராட்டுகளில் உங்கள் மனம் நெகிழவைத்தது?

இந்த நாவல் வெளியீட்டு விழாவில் கலைஞர் இந்த நாவலுக்காக 32 பக்கம் ஆய்வுரை செய்து,'வைரம் பட்டை தீட்டியது' என்கிற பெயரில் அதை அச்சடித்து விமர்சன நூலகா வெளியிட்டார்.நூலின் வெளியீட்டு விழாவிலேயே அந்த நூலுக்கான விமர்சன நூலும் வெளியிடப்பட்டது இதுதான் முதல்முறை.அதுதான் எனக்கு கிடைத்த முதல் பெரிய அங்கீகாரம்.

விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் எண்ணம் எப்படி வந்தது?

 "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்பதுதானே மரபு.உண்டி கொடுத்தோர் உயிர் விடுத்தோர் என்னும் புதிய மரபு உருவாவதை என்னால் தாங்க முடியவில்லை.அதுவும் இந்தியாவுக்கே சோறுபோடும் நமது காவிரிப் பாசனப் பகுதியில் இருப்பவனுக்கே சோறு இல்லை என்பதும் வாழ்வாதாரம் இன்றிச் சாகிறான் என்பதும் எவ்வளவு பெரிய துயரம்?காவிரிப் பாசனப் பகுதியில் ஒரு கூட்டம் போட்டு,பாதித்த விவசாயிகளின் குடும்பளுக்கு உதவி அளிக்க ஆசைப்பட்டேன்.ஆனால்,அதற்குள் இந்த விருது அறிவிக்கப்பட்டதால்,இங்கேயே அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று அறிவித்தேன்.

அடுத்த ஆண்டு அகவை அறுபதைத் தொடவிருக்கிறீர்கள்...அடுத்த திட்டம் என்ன?

"எழுத்துக்கு ஏது வயது?எனது அடுத்த படைப்பு ஈழக் காவியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.அதற்க்கான களப் பணிகள் மிகப் பெரியவை என்பதால் இலங்கைக்கே சென்று சில காலம் இருக்க ஆசைபடுகிறேன்.அந்த மண்ணையும்,காற்றையும்,நிலத்தையும்,நீரையும்,மனிதர்களையும் தொட்டு உணராமல் படைத்தால்,அது முழுமையான படைப்பாக இருக்காதே?"

வலைப்பூ:www.kavinar-vairamuthu.blogspot.com

No comments:

Post a Comment