Tuesday, January 28, 2014

நான் அ.ஞா.பேரறிவாளன்...

மதிப்பிற்குரிய அம்மா - அய்யா! வணக்கம்!
                 நான் அ.ஞா.பேரறிவாளன்.ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன்.எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதில் அடைக்கப்பட்ட நான் 39 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 20 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும் துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன்.


        வயதின் முதிர்ச்சியும் உயிர்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால் மரணத்தை வெல்வேன் என்ற
நம்பிக்கை உண்டு.
        எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகவும் 2005 மார்ச் திங்களில் ஒய்வு பெற்றவரான திரு.ரகோத்தமன் 31-07-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும்:'ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம்
ஏதாவது உண்டா? 'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது.தனு தனது இடுப்பில் கட்டி
இருந்த வெடிகுண்டு பெல்டைச் செய்து கொடுத்த நபர் யார்? என்கிற
விசயம்தான்!- ஆம்.இதுவரை வெளிவராத கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான் எனது வாழ்வும்
கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்கு கயிற்றில் நிறுத்தி
இருக்கிறது.எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையில்தான் 1991 ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.

           என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல் நாளே சிறப்பு
புலனாய்வுத் துறையின் அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டடத்தின்
முதல் மாடியில் இருந்த டி.ஐ.ஜி. ராஜு அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது
அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார்.நான் மின்னணுவியலில் மற்றும்
தகவல் தொடர்பியலில் பட்டயப்படிப்பு படித்தவன் என்றபோது 'நீதான் குண்டு
தாயாரித்துத் தந்தவனா? - என்று கேட்டார்.

              எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்து எனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர்.எனது பெற்றோரின் உழைப்பாலும் எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத் துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்துத் தூக்கு மேடையில் நிறுத்தப் பயன்பட்டது.

              அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம்(பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில்
இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்? 'உண்மை' அரசின் வழக்குக்கு
முற்றிலும் புறம்பானதாகவும் கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல் வசதி இந்த எளியவனுக்கு கிடையாது.


          "கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை;உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது' என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதால்
நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை.இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.

              இறுதியில் வள்ளுவனின் உலகப் பொதுமறை ஒன்றோடு என் முறையீட்டை நிறைவு செய்கிறேன்.

              எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
              மெய்ப்பொருள் காண்பது அறிவு.

-தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் நூலிலிருந்து...

தனிநபரின் உடலுக்குப் புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் 'அரசியல் சமூக' த்திற்கு மரண தண்டனையும்.இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இதுதான்.புற்றுநோயின் அவசியம் பற்றி யாரும் இதுவரை
பேசியதில்லை.மாறாக மரண தண்டனையை ஒரு வருந்தத்தக்க அவசிய நிகழ்வாக,முன்வைப்பதில் எந்த தயக்கமும் காட்டப்படுவதில்லை.
         - நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யு...

No comments:

Post a Comment