Friday, March 14, 2014

கோவை மாநகரின் புகழ் பெற்ற ஓவியர் சினி ஆர்ட்ஸ் ஜீவா அவர்களுடன் - 11.03.14 - செவ்வாய்

திரைச்சீலை என்ற சினிமா நூலுக்காக 2011 ம் ஆண்டின் தேசிய விருதை வென்றவர் சினி ஆர்ட்ஸ் ஓவியர் ஜீவா அவர்கள்...


ஓவியர் ஜீவானந்தன் அவர்களுடன் அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளையில்...


கோவை மாநகரில் நகர் மண்டபத்தில் வசிக்கும் ஓவியர் ஜீவா அவர்கள் சினிமா வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட மனிதர். இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், புத்தக வாசிப்பாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்று இவருடைய இல்லம் தேடி வரும் நண்பர்களின் கூட்டம் ஏராளம். இலக்கியவாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகம் அடையாளத்துடன் கோவை மாநகரில் வசிக்கும் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நடத்திய ரசனை என்ற இதழில் உலகத் திரைப்படங்கள் குறித்து, சினி ஆர்ட்ஸ் ஜீவா அவர்கள் தொடராக எழுதினார். இந்தத் தொடர்களை திரிசக்தி பதிப்பகத்தார் "திரைச்சீலை" என்ற தலைப்பில் புத்தமாக வெளியிட்டது. இந்த நூல் 2011 ம் ஆண்டுக்காண தேசிய விருதை திரைப்பட நூலுக்காக பெற்றது. எழுத்தாளர் அரந்தை நாராயணன் எழுதிய "சினிமாவின் கதை" என்ற நூல் 1982 ம் ஆண்டு தேசிய விருது பெற்றது. கிட்டத்தட்ட 29 வருடங்கள் கழித்து ஓவியர் ஜீவா அவர்கள் இந்த விருதை பெற்று கோவை மாநகருக்கும், தமிழ் திரை உலகுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ் சினிமாத் துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கும் பட்சத்தில், ஓவியர் ஜீவா அவர்களின் திரைச்சீலை சினிமா நூல் தேசிய விருதை பெற்றது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

இவருடைய சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள பூதப்பாண்டி. பிறப்பு மார்ச் 15, 1956. கம்யூனிஸ்ட் தலைவர், இலக்கியப் பேராசான் ஜீவா அவர்கள் பிறந்த ஊர் என்பதாலோ, இவருடைய தந்தையார் தன்னுடைய மகனுக்கு ஜீவா என்று பெயர் வைத்துள்ளார். உடன் பிறந்தவர்கள் 5 பேர். உடன்பிறந்த கடைசித் தம்பி வீ.மணிகண்டன் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக உள்ளார். தமிழ் திரை உலகின் இயக்குனர் ஜாம்பவான்கள் மணிரத்னம், சங்கர் இருவரிடமும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அந்நியன் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றவர். ராவணன் திரைப்படத்திற்காக அப்சரா விருதை வென்றவர். ஓவியர் ஜீவா அவர்களின் புதல்வரும் தமிழ் சினிமாத் துறையில் ஒளிப்பதிவாளராக உள்ளார். விண்மீன்கள், நவீன சரஸ்வதி சபதம் என்ற இரு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவை மாநகரில்தான். ஓவியர் ஜீவா அவர்களின் தந்தையார் ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர். கோவை மாநகரில் இவர் வரைந்த ஓவியங்கள் பல புகழ் பெற்றவை. தந்தையாருடைய
ஓவியக் கலைத்திறன் இவருக்கும் நெருப்பாக பற்றிக் கொண்டதில் வியப்பேதுமில்லை.

1980 ம் ஆண்டுகளில் இருந்து 2005 ம் ஆண்டு வரைக்கும், திரைப்படங்கள் கோவை மாநகரின் திரையரங்குகளில் வெளியாகும் நாளன்று, திரையரங்குகளின் முன்னாள் இவருடைய வண்ணங்களின் தூரிகையால் உருவான பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும்.


இதைப் பார்ப்பவர்களுக்கு ஒரு வித பிரமிப்பை ஏற்படுத்தும். இவருடைய பிரமாண்ட பேனர்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் திரையரங்கின் முன்னாள் இருக்கும். கோவையில் இவருடைய ஓவியத்திற்க்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒரு வெறித்தனமான ரசிகன். இவர் வரையும் ஓவியங்கள் உயிரோட்டமுடன், ரசனை மிகுந்ததாக இருக்கும். வீட்டின் முன்னாள் அமைக்கப்பட்ட செட்டில் சினிமா படத்திற்கு பேனர்கள் வரையும்போது, அதைப் பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் கூடிவிடுமாம்.

தமிழ் திரை உலகின் மார்க்கண்டேயன் சிவக்குமார் அவர்கள் இவருடைய தீவிர ரசிகர். ஜீவா அவர்கள் கொடுத்த ஊக்கத்தினாலே சிவக்குமார் துணிச்சலாக சினிமாத் துறைக்குச் சென்றுள்ளார். தற்போது 57 வயதாகும் ஓவியர் ஜீவா அவர்கள், உயிர்ப்புடன் கூடிய ஓவியங்களைப் படைத்துக் கொண்டே இருக்கிறார்.

வெற்றிப்பாதை மாத இதழின் உதவி ஆசிரியர் சுரேஷ் ஆதித்யா ஓவியர் ஜீவா அவர்களுடன்...


கோவை மாநகரில் நடக்கும் பல இலக்கியக் கூட்டங்களில் இவரை சந்தித்துள்ளேன். ஆனால் அறிமுகமாகி பேசியது இல்லை. அற்புதமான எளிய மனிதர். வெற்றிப்பாதை மாத இதழின் உதவி ஆசிரியர் சுரேஷ் ஆதித்யா அவர்களுடன் இவருடைய இல்லத்திற்கு சென்றிருந்தேன். வெற்றிப்பாதை மாத இதழில் சிறப்புக் கட்டுரை வெளியிடுவதற்காக சுரேஷ் ஆதித்யா நேர்காணல் செய்தார். அப்போது தன்னுடைய வாழ்வின் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தந்தையார் வேலாயுதம் பிள்ளை அவர்கள்...


பொருளாதார அறிவியலில் முதுகலைப் பட்டமும், இளங்கலையில் சட்டப் படிப்பும் படித்துள்ளார். தமிழ்வழிக் கல்வியில் பயிலவில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் படித்து பட்டம் பெற்றுள்ளார். ஆனந்த விகடனும், தினத் தந்தி நாளிதழும்தான் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்று கூறினார். இவருடைய தந்தையார் வேலாயுதம் பிள்ளை அவர்கள் 1981 ம் ஆண்டில் காலமெய்தியதால், சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் மீது இருந்த ஆர்வத்தால், சினிமா படங்களுக்கு ஓவியம் வரைவதை தன்னுடைய வாழ்வின் லட்சியமாக மாற்றிக்கொண்டாராம்.

திரைச்சீலை நூலில் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக உலக சினிமா குறித்தும், இந்திய சினிமா குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.


கோவையிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் உருவ ஓவியத்தை வரைந்து சாதனை படைத்திருக்கிறார். கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக
கலந்து கொள்ளும் போது, அங்குள்ள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வரைந்து கொடுப்பாராம். அதிகபட்சமாக தத்ரூபமாக வரைவதற்கு 5 நிமிடங்கள் போதுமானது என்று கூறும்போது வியப்பு மேலிடுகிறது.


2010 ம் ஆண்டு தேசிய விருது பெற்றவர்களை விஜய் தொலைகாட்சி நிறுவனம், சென்னை மாநகரில் விழா எடுத்து சிறப்பித்தபோது, ஓவியர் ஜீவா அவர்களுக்கு அழைப்பு கூட வைக்கவில்லையாம். விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களையும் பாரபட்சமின்றி சிறப்பிப்பதுதானே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும். சென்னை மாநகர்தான் தமிழகம் என்ற போக்கு சினிமாத்துறையில் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் உள்ளது.

வியர் ஜீவா அவர்கள் தன்னுடைய இளம் வயதில்(இடமிருந்து முதல்)


கனடா நாட்டின் அரசாங்க அழைப்பிற்கு இணங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஓவியக் கலையின் மகத்துவத்தை அங்குள்ள கல்லூரி மாணவர்களிடம் பறைசாற்றியுள்ளார். இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இவரிடம் சிறிது நாள் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின்
கோவை மாவட்ட பிரபலங்களுக்கு ஆசானாக இருந்துள்ளார்.


2002 ம் ஆண்டு நான் கோவை மாநகரிலுள்ள பூ.சா.கோ. தொழில் நுட்பக் கல்லூரியில் விடுதிக் காப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது திரையரங்குகளின் முன்னாள் வைக்கப்பட்ட இவருடைய வண்ணம் தீட்டிய ஓவிய கட் அவுட்டைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். 2003 - 2005  ம் ஆண்டுகளில் கோவை மாநகரிலே முதுகலைப் பட்டம் பயிலும்போது, இவருடைய தீவிர ரசிகர் ஆனேன். இன்றைய தினம்தான் ஓவியர் ஜீவா அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் பாக்கியம் கிடைத்தது. இவருடனான நட்பு என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உள்ளுணர்வு சொல்லியது இன்று... இனிவரும் நாட்களில் சினி ஆர்ட்ஸ் ஓவியர் ஜீவா அவர்களுடனான பசுமையான நினைவுகளை வலைப்பூவின் மூலம் பகிர்ந்து கொள்வேன்...


                    தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் 
                    தோன்றலின் தோன்றாமை நன்று...

1 comment: