Sunday, March 30, 2014

கொடைவள்ளல் கோவை குணசேகரன் அவர்களை சந்தித்த வேளையில் - 29.03.14

நான் அடிக்கடி பவர் ஹவுஸ் சாலை வழியாக சிவானந்த காலணிக்கோ, பூ மார்க்கெட் சாலைக்கோ செல்வது உண்டு. சென்டரல், கனகதாரா திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டோ, ஆர்.எஸ்.புரத்திலுள்ள மைய நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படித்துவிட்டோ, பாரதிய வித்யாபவன் அரங்கில் ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கலந்துவிட்டோ, கிக்காணி மேல்நிலைப் பள்ளி அரங்கில் ஏதேனும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துவிட்டோ, இந்த பவர் ஹவுஸ் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வருவது உண்டு. 

பொன்விழா நுழைவு வாயிலுக்கு முன்பாக இடது புறத்தில் ஒரு பப்பாளி பழக்கடை உள்ளது. வெகு நாட்களாக இந்தக் கடையில் பப்பாளி சாப்பிடுவது உண்டு. கோவை மாநகரில் எங்கு பப்பாளி பழம் விற்கும் கடையைப் பார்த்தல், அங்கே நின்று பழம் சாப்பிடமால் போகமாட்டேன். அடிக்கடி இந்த தமிழ்நாடு மின்சார நுழைவு வாயில் முன்பு உள்ள பப்பாளி பழக்கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு உயரமான மரம் உள்ளது. அந்த மரத்தடியில் அழுக்குத் துணியுடன் ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பார். யாரிடமும் பிச்சை போடு என்று கேட்க மாட்டார். ரொம்ப நாளாகவே இவரைப் பார்த்திருக்கிறேன். 
பாவம் என்ன கஷ்டமோ என்று நினைத்துக் கொள்வேன். 

இப்படித்தான் இன்று அந்தக் கடையில் நின்று பழம் சாப்பிடச் சென்றபோது, இவரைப் பற்றி பப்பாளிக் கடைக்காரரிடம் கேட்டேன். கடைக்காரர் சொன்னார் - தம்பி அவரு பேரு குணசேகரன். ரொம்ப வசதியான குடும்பத்துல பிறந்து வாழ்ந்தவரு. நிறைய பேருக்கு பொருளாதார ரீதியா உதவி செஞ்சிருக்காரு. அவரு கேட்ட நேரம் மனைவியும், குழந்தைகளும் இறந்துட்டாங்க. சொத்தை எல்லாம் உறவினர்கள் அபகரிச்சிட்டதா சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மை அப்படின்னு தெரியல. கிட்டத்தட்ட 10 வருசமா இங்கேயே தான், இந்த மரத்து நிழல்ல தான் இருக்காரு. 

இவரு நல்லா வசதியா இருந்தப்போ யாருக்கெல்லாம் உதவி செஞ்சாரோ, அவங்கெல்லாம் தினம் வந்து இவரு கேட்காமலே கையில 100, 200 ரூபான்னு கொடுத்துட்டு போவாங்க. அவங்க கொடுத்தா மட்டுமே வாங்கிப்பாரு. புது ஆளுக யாரு வந்து என்ன கொடுத்தாலும் வாங்கமாட்டாரு என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. நானும் பாருங்க புதுத் துணி கொடுத்தா வாங்க மாட்டாரு. யாரு கூடயும் அதிகமா பேசமாட்டாரு. கொசு என்ன கடிச்சாலும் சரி, இந்த மரத்துக்கு கீழேயே தூங்கிருவாரு என்று சொல்லி முடித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து நான் பப்பாளி பழம் சாப்பிட்டுவிட்டு, இவரிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். அய்யா உங்க பேரு என்னது. பதில் சொல்லவில்லை. உடனே என்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து ஒரு போட்டோ உங்களை எடுக்கனும்னு கேட்டேன். எடுத்துட்டுப் போ என்றார். 
தீடிரென்று என்னை எதுக்குப்பா போட்டோ எடுத்த என்று கேட்டு விட்டு, திரும்பிக் கொண்டார். பிறகு திடீரென திரும்பி அதான் கேட்டேன்லே, பதில் சொல்லுப்பா, ஏன் என்னை போட்டோ எடுத்தே என்று மீண்டும் கேட்டார். 
நான் சொன்னேன் - நீங்க ரொம்ப அழகா இருக்கேங்க. அதனால எடுத்தேன் என்றார். நான் யாரு மாதிரி அழகா இருக்கேன் சொல்லு. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மாதிரினு சொன்னேன். அட போப்பா அவரு எங்கே, நான் எங்கே. போப்போ வேலையைப் பாத்துகிட்டு. சும்மா பேச வந்துட்டாங்க என்று கடிந்து கொண்டார். அது சரி பழம் சாப்புடுறீங்களா. வேண்டாம் என்று சொன்னார். வேற என்ன கொடுத்தா வாங்கிக்குவேங்க. அடுத்த தடவை வரும்போது கேளு, எனக்கு என்ன வேணும்னு சொல்றேன் என்றார். இப்ப என்ன வேணும் என்று கேட்டேன். ஏய் தம்பி இங்க பாரு, நான் நிறைய பேருக்கு வேணுங்கிறத கொடுத்துருக்கேன். எனக்கு அவங்க தேவைப்படுறத தருவாங்க. எனக்கு ஒன்னும் வேண்டாம், போப்போ.. என்று சொன்னார். பிறகு தூரத்தில் சென்று புகைப்படம் எடுத்தேன். கையை நீட்டி போப்போ என்றார். இறைவா இது என்ன சோதனை என்று, எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். சாதாரண மனிதர்களிடம் கூட நாம் பேசி விடலாம். இவர்களிடமிருந்து மட்டும் நமக்கு வேண்டிய பதிலைப் பெற முடியாது.

பழக்கடைக்காரர் என்னிடம் கேட்டார் - எதுக்கு தம்பி அவர போட்டோ எடுத்தேங்க. நான் ஒரு எழுத்தாளருங்க. இவங்கள மாதிரி ஆளுகள எங்காவது பார்த்தா போட்டோ எடுப்பேன் என்று நான் எடுத்த சில புகைப்படங்களை காட்டினேன். அதைப் பார்த்து விட்டு ரொம்ப சந்தோசம் தம்பி. இத்தனை வருசத்துல இவரை போட்டோன்னு எடுத்த முதல் ஆளு நீங்கதான். அதான் ஏன் எடுத்தேங்கனு கேட்டேன். புதுசா பழம் சாப்பிட வந்தவங்கள்ள, இவரைப் பத்தி விவரங்கள் அதிகமா கேட்டது நீங்கதான். எதுக்காக, ஏதாவது அதிகாரிங்களா நீங்க. இல்லை அண்ணா என்று சொல்லிவிட்டு, நான் அரசுக் கலைக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக இருக்கும், அடையாள அட்டையை காண்பித்த பிறகுதான் நம்பினார், நான் இயல்பானா ஆள் என்று. இவரு கிட்ட பக்கத்துல போயி 10 ரூபா நோட்ட நீட்டிகிட்டு, கொஞ்ச நேரம் நின்னேங்கான, அவரு எப்ப வாங்குவாருனு தெரியாது. தீடிர்னு வாங்குவாரு. வாங்கமலேயும் போகலாம். ஆனா இவருக்கு பணம் கொடுக்க வர்றவங்க, இவரு பணம் வாங்குவரைக்கும் வந்து கொடுத்துகிட்டே இருப்பாங்க. ஆனா இவரு சொத்து பத்தல்லாம் இழந்து அனாதையா நின்னப்போ, யாருமே எந்த உதவியும் செய்ய வரலே. இப்படி ரோட்டுல வந்து வாழ்க்கையே வெருத்துட்டு, கந்தல் கூலமா நிக்கிறத பாத்துட்டு, இவரு கிட்ட பணம் காசு வாங்குனவங்க எல்லாம் மனசு தாங்கமா உதவி செய்றாங்கா என்று சொன்ன போது, பொல்லாத உலகமப்பா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்து பழம் சாப்புட வர்றப்ப, பாப்போம் அண்ணா  என்று சொல்லி விட்டு, கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.


இவரைப் பொருத்தவரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் வெளியே இருக்கிறார். நாமெல்லாம் வெளியே இருந்து கொண்டு, உள்ளுக்குள் நிறைய எதிர்பார்ப்புகளோடு தினம் தினம் சிறு சிறு ஏமாற்றங்களோடு, சிறு சிறு இன்பங்களோடு, முடிந்தால் சுயநலத்திற்காக மற்றவர்களின் முதுகில் குத்தும் இயல்போடு, சிறு வஞ்சகத்தோடும், சிறு சிறு பொறாமைக் குணங்களோடும் திருப்தியடைந்தவர்களாக இருக்கிறோம்...

தமிழ்நாடு மின்சார வாரியம் - பொன்விழா நுழைவு வாயில் குணசேகரன் நீடுடி வாழ்க!!உன் கொடை வாழ்க!!

தர்மம் தலை காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது...இவர் வாழ்க்கையில் நிரூபணமான ஒன்றாகிவிட்டது...


முல்லைக்குத் தேரும் 
மயிலுக்குப் போர்வையும் 
புறாவிற்கு தன் தசையையும் 
அரிந்து கொடுத்து 
எல்லை நீர் ஞாலத்து இசை ஒழிய 
தொல்லை இரவமால் ஈந்த அந்த 
இறைவர் போல் நீயும் 
கறவாமல் ஈகைக்கடன்!!

No comments:

Post a Comment