Sunday, April 13, 2014

இயக்குநர் ராஜூமுருகன் அவர்களை சந்தித்தபோது - 13.04.14 - கோவை


கோவையிலுள்ள "கங்கு" இலக்கிய அமைப்பின் சார்பில், சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற "குக்கூ" திரைப்படத்தின் இயக்குநர் ராஜூமுருகன் அவர்களுக்கு ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை அரங்கில் வைத்து பாராட்டு விழா நடந்தது. எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கங்கு இலக்கிய அமைப்பிலுள்ள நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்துக் கூறினார். மாலைப்பொழுது சரியாக 4.45 மணிக்கு அண்ணாமலை அரங்கிற்கு சென்றேன். நண்பர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். சில பேருடன் பேசிக்கொண்டிருந்தேன். 5.40 மணி வரைக்கும் ராஜுமுருகன் வராததால், வெளியில் சென்று தேநீர் அருந்திவிட்டு வரலாம் என்று கிளம்பி படியில் இறங்குகிறேன், எதிரில் சில நண்பர்களுடன் ராஜுமுருகன் வந்துவிட்டார். சிறிது புன்னகையுடன் என்னுடைய பேரைச்சொல்லி அறிமுகம் செய்துகொண்டு, உங்களுடைய படைப்புக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள் என்று சொன்னேன். ராஜுமுருகன் மிகவும் நன்றி என்று கூறினார்.

ராஜுமுருகன் அவர்கள் ஆனந்தவிகடனில் சுமார் 80 வாரங்கள் தொடராக எழுதி வெளிவந்த "வட்டியும் முதலும்" தொடர் வாசகர்களின் பலத்த வரவேற்ப்பை பெற்றது. தொடரைப் படித்து எனக்குள் ஒரு பரவசமே ஏற்பட்டது. ஏனெனில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை, ஒளிவு மறைவு இல்லாமல் எழுதிய விதம் பிரமிக்கச் செய்தது. இந்த தொடர் ஏற்படுத்திய சிறு தாக்கத்தால் நாமும் வாழ்க்கையில் பத்திரிகை துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. அதனாலேயே வெற்றிப்பாதை மாத இதழில் எழுத்தாளராகவும், விற்பனை மேலாளராகவும் பணியில் சேர்ந்து, கடந்த 6 மாதங்களாக பணியாற்றுகிறேன்...

ராஜுமுருகன் அவர்கள் ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுத்தாளராக சேர்ந்து பணியாற்றி, பின்னர் இயக்குநர் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். குக்கூ திரைப்படம் வெளியான அன்று நான் மாலை வேளையில் சென்ட்ரல் திரையரங்கில் பார்த்தேன். அற்புதமாக கண் தெரியாதவர்களின் உலகை, இயல்பான நேர்த்தியில் சொல்லிய விதம் மனதை நெகிழச்செய்தது. இந்தி மொழியில் இயக்குநர் சஞ்சய்லீலா பான்சாலியின் "பிளாக்" திரைப்படம் மாபெரும் சகாப்தம் என்றால்,தமிழ்த்திரை உலகில் குக்கூ திரைப்படமும் ஒரு மைல்கல்தான். 

இயக்குநர் ராஜுமுருகனிடம் சொன்னேன் - நானும் ஒரு காலத்தில் இளங்கலை பட்டம் பெற்றுவிட்டு, சினிமாக் கனவுகளோடு 2002 ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் இயக்கிக்கொண்டிருந்தபோது, ராமேஸ்வரம் அருகில் உள்ள ஊரான பாம்பனில் அவருடைய திரைப்படக் குழுவில் இணைந்து, ஐந்து மாத காலம் பணியாற்றிய நாட்களை பகிர்ந்துகொண்டேன். என்னுடைய அப்பாவின் விருப்பமில்லாமை காரணமாக விலகிக் கொண்டேன். அங்கே தான் நான் ஒரு புதிய சவாலான உலகத்தைக் கற்றுக்கொண்டேன் என்று கூறினேன். அதன்பிறகு என்னுடைய இலக்கு நிஜ வாழ்க்கையான சமூகம் என்று தீர்மானித்து பணியாற்ற என்னை அர்பணித்துக்கொண்டேன். நீங்களும் வாழ்க்கையில் பல வலிகளுடன்தான் பயணித்திருக்கீறீர்கள் என்று ராஜுமுருகன் என்னிடம் கூறியபோது, உங்களுடைய அனுபவத்தால் சரியாகக் கணித்துக் கூறியதற்கு மிகவும் சந்தோசம் என்று கூறினேன்...
நாம் இருவரும் வேறு வேறு துறையில் பயணித்தாலும், கால மாற்றத்தில் சகாப்தம் படைத்தவர்களாக சரித்திரம் படைக்க வேண்டும் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.

இங்கே கோவை மாநகருக்கு சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் வருவார்கள். குறிப்பிட்ட சில நபர்களைத் தவிர்த்து எல்லோரையும் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே வராது. ஆனால் நான் உங்களைப் பார்த்து அற்புதமான திரைப் படைப்பிற்காக வாழ்த்து சொல்லவேண்டும் என்று மனம் துடித்தது. தொடர்ந்து இதுபோன்ற படைப்புகளை தமிழ் திரை உலகிற்கு நீங்கள் கொடுத்து, புதிய பரிணாமத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறியபோது, நிச்சயமாக செய்கிறேன் என்று இயக்குநர் ராஜுமுருகன் கூறினார்..!!திரைப்படத்தில் கதாநாயகிக்கு சகோதரனாக நடித்தவர் பேசியபோது...


எழுத்தாளர் பாமரன் அவர்கள் இயக்குநரைப் பாராட்டி சிறப்புரை  ஆற்றிய வேளையில்...


இயக்குநர் ராஜுமுருகன் அவர்கள் திரைப்படம் குறித்தும், தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது...கலகம் என்ற மாத இதழை அறிமுகம் செய்தார்கள்...

No comments:

Post a Comment