Sunday, April 20, 2014

எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களின் தமிழகக் கோட்டைகள் புத்தக அறிமுக விழா - 20.04.14

எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுடன்...


அதிகாலை 5 மணிக்கு நானும், எழுத்தாளர் சந்திரக்குமார் அவர்களும் நடைபயிற்சி ஒரு மணிநேரம், அரை மணிநேரம் சிலம்பு பயிற்சியை முடித்துவிட்டு, அவருடைய வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.
இன்றைக்கு ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள ஆருத்ரா மகாலில் அருவி இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ள, எழுத்தாளார் விட்டல்ராவ் அவர்களின் தமிழகக் கோட்டைகள் புத்தக அறிமுக விழா நடைபெற உள்ளது அண்ணா என்றேன். அதேபோல் மரக்கடை சாலை செல்லும் வழியில் உள்ள நரசிம்மலுநாயுடு பள்ளியில் வைத்து களம் இலக்கிய அமைப்பு சார்பில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானை நாவல் குறித்து திறனாய்வு நடைபெற உள்ளது. எதற்கு அண்ணா செல்லலாம் என்று கேட்டேன். முதலில் ஆருத்ரா மகாலுக்குச் செல்வோம். அதன் பின்னர் முடிவு செய்யலாம் என்றார். சரியாக 9.50 மணிக்கு சென்றோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத்தாளராக பணியாற்றக்கூடிய ஆருயிர் நண்பர் மீனாட்சிசுந்தரம் அவர்களும் வந்திருந்தார். தமிழக கோட்டைகள் குறித்து புத்தக அறிமுக விழா என்பதால், திப்புசுல்தான் குறித்து நான், சந்திரக்குமார் அண்ணன், எழுத்தாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் டணாய்க்கான் கோட்டை நாவல் குறித்தும், ஆங்கில எழுத்தாளர் பிரான்சிஸ் பெக்கான் எழுதிய திப்புசுல்தான் வரலாற்று புத்தகம் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம்.

சரியாக 10.25 மணிக்கு லியனார்டோ டாவின்சியின் ஓவியங்கள் குறித்து அரை மணி நேர டாக்குமெண்டரி படம் காட்டப்பட்டது. அதன்பிறகு எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களின் நதிமூலம் நாவல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நாவல் 15 வருடங்களுக்கு முன்பு எழுத்தப்பட்டது. பின்பு தமிழகக் கோட்டைகள் நாவல் அறிமுகம் செய்யப்பட்டு, கோட்டைகளை நோக்கிய தன்னுடைய பயண அனுபவங்களை நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

எழுத்தாளார் விட்டல்ராவ் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். பயண அனுபவங்களை கேட்டபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. 2004 ம் ஆண்டு நான் வடமொழி எழுத்தாளர் ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை நதி வரை  நாவலை படிக்கும்போது என்ன பிரமிப்பை அடைந்தேனோ, அதே பிரமிப்பை இவர் பேசும்போது உணர்ந்தேன். தமிழின் முன்னோடி எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் "கோடுகள் இல்லாத வரைபடம்" என்ற பயணக் கட்டுரை புத்தகத்தை ஒரு வருடத்திற்கு முன்பு படித்தபோது, நாம் வாழும் வாழ்நாளுக்குள் உலகை சுற்றிவர முடியாவிட்டாலும், இந்திய தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் காலடித் தடத்தை பதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய எனது இந்தியா  மற்றும் மறைக்கப்பட்ட இந்தியா  குறித்து எழுதிய கட்டுரையை படித்தபோது, எனது ஆன்மாவையே உலுக்கி எடுத்துவிட்டது. எத்தனையோ நாட்கள் தன்னிலை மறந்தவனாக இருந்தேன். நாம் வாழும் வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா..? எத்தனையோ மகத்தான விசயங்களை நமது முன்னோர்கள் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் வாழும் இந்திய தேசத்திற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லையே என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. இன்றைய தினம் விழா முடிந்து எனது அறைக்கு வந்தபிறகு நான்கு மணிநேரத்தில் தமிழகக் கோட்டைகள் நூலை வாசித்து முடித்தேன். கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது. எப்படி ஒரு மகத்தான மனிதராக விட்டல்ராவ் அவர்கள், தனது சிறுவயதிலிருந்து கோட்டைகள் மீதிருந்த தீராத காதலால் வருடக்கணக்காக ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பது பிரமிப்பாக இருந்தது. நான் அவரிடம் அலைபேசி என்னையும், வீட்டின் முகவரியையும் வாங்கிக் கொண்டேன். தற்பொழுது பெங்களூரில் வசிக்கிறார். அடுத்த உங்களது கோட்டைகளை நோக்கிய பயணத்தை தொடங்கும்போது என்னையும் ஒரு சீடனாக சேர்த்துக்கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை விடுத்தேன் .கேட்பதற்கே மிகவும் சந்தோசமாக உள்ளது. நிச்சயம் நான் எனது பயணத்தை தொடங்கும்போது அலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறினார். நான் செல்லும்பொழுது என்னுடன் எழுத்தாளர் ஆட்டோ.சந்திரக்குமார் அவர்களும் வருகிறேன் என்றார். பிறகு நானும், சந்திரக்குமார் அண்ணனும், மீனாட்சிசுந்தரம் அவர்களும் மற்றும் சில நண்பர்களோடு, ஞாயிற்றுக்கிழமை போல் எப்போதும் நாங்கள் சந்தித்து நிறைய விசயங்கள் குறித்து விவதாம் செய்யும் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதிக்கு சென்றோம்.

(இடமிருந்து) தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன், நான், எழுத்தாளர் மற்றும் ஓவியர் விட்டல்ராவ் அவர்கள்...விட்டல்ராவ் அவர்கள் பேசிய வேளையில்...


தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன் அவர்கள் பேசிய வேளையில்...கோட்டைகளை நோக்கிய பயணத்தின்போது விட்டல்ராவ அவர்கள தன்னுடைய புகைப்படக் கருவியைக் கொண்டு எடுத்த சில புகைப்படங்கள்... 
அவர் PPT Presentation செய்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்கும் -போது நான் என்னுடைய புகைப்படக் கருவியைக் கொண்டு புகைப்படம் எடுத்தேன்...

No comments:

Post a Comment