Wednesday, April 30, 2014

நினைவுகள் - 9

நாடார் மேல்நிலைப்பள்ளி - என்னுடைய எட்டாம் வகுப்பில் - 1995 ம் வருடம்... 

முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிலிருந்து பின்னால் முதல் வரிசையில் வலமிருந்து ஐந்தாவதாக நான் உள்ளேன். நான்காவதாக சீனிவாச ராஜசேகரன், ஆறாவதாக தீர்த்தங்காலைச் சேர்ந்த  பி.முருகேசன். இவர்கள் இருவரும் என் உயிருக்கு உயிரான நண்பர்கள்...


நான் நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1995 ம் வருடம் எட்டாம் வகுப்பு படிக்குபோது பள்ளி ஆண்டு மலருக்காக எடுக்கப்பட்ட புகைப்படம். நான் இந்த கல்லூரி வலைப்பூவில் முதல் இரண்டு தொடர்களில் பள்ளி அனுபவங்களை சொல்லி இருந்தேன். ஆனால் புகைப்படம் எதையும் பிரசுரம் செய்யவில்லை. 
அரும்பாடுபட்டு ஒரு மாத காலம் என்னுடைய வீட்டில் சல்லடை போட்டுத் தேடி 1994-1995 ம் ஆண்டு பள்ளி மலரை கண்டுபிடித்தேன். சில விசயங்களை செய்ய நினைக்கும்போதுதான் தேடல் அதிகமாகிறது. நான் இந்த வலைப்பூவில் பதிவு செய்த புகைப்படங்களுக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு, நிறைய இடங்களுக்கு புகைப்படங்களைத் தேடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. 1984-1985 ம் ஆண்டு எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி மலரை பெறுவதற்காக இரண்டு மாத காலம் பயணம் செய்தேன். தற்செயலாக நான் என் நண்பர்களுடன் ஹைதராபாத் சென்றிருந்தபோது, நமது கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியரிடமிருந்து 1985 ம் ஆண்டு மலர் கிடைத்தது. அந்த மலரிலிருந்து புகைப்படத்தை பிரசுரிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி ஏற்பட்டது.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 
இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு!!
உடல் மண்ணாக உயிர் தமிழாக 
தமிழனின் வீரத்தை 
உணர்த்திக் காட்டுவோம் உலகுக்கு!!
வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால் 
வாளால் வெட்டி வீழ்த்தி 
விருந்து வைப்போம் விண்ணுக்கு...!!

என்றென்றும் என் இதயத்தில் வாழும் இந்திய திரை உலகின் நட்சத்திர இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான இருவர்  படத்திலுள்ள இந்த வீர வசனத்தை அடிக்கடி நான் சொல்லிக் கொள்வேன்..!!

என்னுடன் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த சீனிவாச ராஜசேகரன் ஆறாம் வகுப்பிலிருந்தே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று வாங்குவான். எனக்கு வியப்பாக இருக்கும். பள்ளியில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் சீனிவாச ராஜசேகர் பரிசு வாங்க செல்லும் போது, பரிசை வாங்கிட்டு வர்றேன் செந்திலுன்னு சொல்லிட்டுப் போவான். எனக்கு பெருமையா இருக்கும் சீனிவாசனை நினைச்சு. பரிசு வாங்கிட்டு வந்து எங்கிட்ட கொடுத்துருவான். நீயே வச்சுக்கோ செந்திலுன்னு. பிரார்த்தனை கூட்டம் முடிஞ்சு வகுப்புக்கு போனதுக்கு அப்புறம் வர்ற வாத்தியாருங்க சீனிவாசனை போட்டியில பேசுன பேச்சை பேசச் சொல்லுவாங்க. ஒரு நாள் பராசக்தி படத்துல வர்ற வசனத்துல இருந்தும், மனோகரா படத்துல வர்ற வசனத்தையும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல பேசுற வசனத்தையும் சும்மா கம்பீரம சிம்மக் குரல்ல பேசுனப்ப, அப்படியே வாத்தியாரும், மாணவர்களும் சதம்பிச்சு போயிட்டாங்க.
வகுப்புல ஹீரோ மாதிரி ஆயிட்டான். நான் சீனிவாசன் கிட்ட கேட்டேன். சீனிவாச எனக்கும் உன்னை மாதிரியே பேசுறதுக்கு கத்துக்கொடு. ரொம்ப ஆசையா இருக்குது. நல்லா என்னைய மாதிரி பேசணும்னா செந்திலு, நல்ல கதை புத்தகங்களை படிச்சிட்டு, வெறித்தனமா வெட்ட வெளியில பேசிப் பழகணும். நம்ம உடம்புல ஓடுற இரத்தத்துல தமிழ் மொழியோட வீரியம் கலக்கணும். நாம சிந்திக்கறது, பேசுறது, நினைக்கிறதுன்னு தமிழோட அப்படியே ஐக்கியமாகி, நம்மள சுத்தி இருக்குற பிரபஞ்சத்தோட பேச ஆரம்பிச்சோமுன்னா, தமிழ்த்தாய் நம்ம நாக்குல வந்து உட்காந்துகிட்டு, உலகத்தையே நம்ம பக்கம் திரும்பி பார்க்க வச்சுருவா...


*என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு...
 நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை...!!

*இருளைப் போக்கும் விளக்குக்குத் தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை...  இதுதான் இயற்கை...!!

*சாதிக்க முடியாத சாதனைகள் எல்லாம் துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  செய்தது... மனதைத் தளர விடாதே..!! 

--நாடோடி மன்னன் திரைப்பட வசனம்... 


நானு சிவாஜி கணேசனோட மனோகரா, பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் இன்னும் நிறைய படங்களைப் பார்த்து பரவசப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி மாதிரியே பேசணும்னு வெறித்தனமா தமிழப் படிச்சேன். அதுமாதிரி நீ யாரையாவது முன்மாதிரியா எடுத்துகிட்டு, நிறைய படிச்சி பேசிப் பாரு செந்திலு. நல்லாப் பேசலாம். அதே சமயம் எங்க அப்பாவும், அம்மாவும் நிறைய ஒத்துழைப்பு இருக்குறதுனாலையும் என்னால நல்லா பண்ண முடியுது செந்திலுன்னு ஒரு நாள் மரத்தடியில நின்னு பேசிகிட்டு இருந்தோம். அப்புறந்தான் நானு கண்ணதாசனோட நாடோடிமன்னன் கதை வசனம் புத்தகத்தை செண்பகவல்லி அம்மன் கோயில் கிட்ட இருக்குற கடையில வாங்கி, மனப்பாடம் பண்ணி பேச ஆரம்பிச்சேன். ஆனா அப்ப சீனிவாச ராஜசேகர் அளவுக்கு பேச முடியாட்டாலும், ஒன்பதாம் வகுப்புல பேச்சுப் போட்டியில கலந்துகிட்டு மூணாவதா பரிசு வாங்கினேன். அப்படியே ஒரு மாசம் காத்துல ரெக்கை கட்டி பறக்குற மாதிரி இருந்துச்சு. சீனிவாச ராஜசேகர் கிட்ட நான் பரிசு வாங்குனத கொடுத்து, என்னோடத நீயே வச்சுக்க ராஜசேகரான்னு கொடுத்தப்ப, அவன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்துருச்சு. ரொம்ப சந்தோசமா இருக்குது செந்திலுன்னு இராஜசேகர் சொன்னான். நான் சீனிவாசன் கிட்ட சொன்னேன், நீ வர்ற காலத்துல பெரிய பேச்சாளர வரணும். அதை பார்த்து நான் அப்படியே பிரமிச்சுப் போகணும். நான் ஏதோ உன்னைப் பாத்து பரவசமாகி, பரிசு வாங்கணுமேன்னு பேசுனேன். மத்தபடி ஒண்ணும் இல்ல சீனிவாசா. இப்படி நாங்க உணர்வுகளை பகிர்ந்துகிட்டோம். ஆனா இப்படி எனக்குள்ள நெருப்பை பத்தவச்ச சீனிவாச ராஜசேகரன் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, அமெரிக்காவுல வேலை செய்றான்னு கேள்விபட்டப்ப, அப்படியே கொஞ்சம் மனசு விட்டுருச்சு.

2005 ம் வருஷம் நான் படிச்ச நாடார் மேல்நிலைப் பள்ளிக்குப் போயி, நாங்க பேசுன அதே மரத்தடிக் கீழ போயி நின்னுகிட்டு, உன்னோட பங்களிப்பை இந்த உலகத்துல நான் செஞ்சிக் காட்டுறேன் சீனிவாச ராஜசேகரான்னு ரொம்பக் கத்திப் பேசுனேன். கண்ல இருந்து கண்ணீர் வந்துச்சு. அது ஆனந்தக் கண்ணீர்தான். அன்னைக்கு பள்ளி விடுமுறை.. ஹாஸ்டல்ல புது வார்டன்கள் இருந்தாங்க. பள்ளிக்குப் பக்கத்துல எனக்கு அறிவியல் பாடம் சொல்லிக்கொடுத்த அருணாச்சலம் சாரு வீட்டுக்குப் போயி, நலம் விசாரிச்சுட்டு, கொஞ்ச நேரம் பேசிட்டு ஊருக்கு வந்துட்டேன். அதுக்கு பிறகுதான் என்னோட மனசு நிம்மதியா இருந்துச்சு. இலக்கியம், வரலாறு, சமூகம், அரசியல் தலைவர் வைகோன்னு என்னோட வாழ்க்கை பயணத்தை 2006 ம் வருசத்துல பேராசிரியர் பணியோட தொடங்குனேன். தொடர்ந்து பயனிச்சிகிட்டே இருக்குறேன்...

எனது இரு சகாப்தங்கள் 
எனக்கு பக்கத்துல இருக்குற முருகேசன்தான் வாழ்க்கைன்னா என்ன..? அப்படீங்கிறத கத்துக் கொடுத்தான்... ஒரு விவசாயக் குடும்பத்துல இருந்து படிக்க வந்தவன். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலதான் அவங்க அப்பா படிக்க வச்சாரு. சரியா படிக்கலேன்னா அவங்க அப்பா  பள்ளிக் கூடத்துக்கு வந்து, வகுப்புல அத்தனை மாணவர்கள் முன்னாடி அடிப்பாரு. ஒரு நாள் எனக்கு அளவுக்கு அதிகமா கோபம் வந்து, முருகேசனை அடிச்சிகிட்டு இருக்குறப்ப, என்னை அடிச்சிட்டு உங்க பையனை அடிங்கேன்னு குறுக்கால போயி நின்னேன். தம்பி போப்பா. அவனை இங்க வச்சு அடிச்சாத்தான் படிப்பான். சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குறான்னா. உங்க பையனை நான் படிக்க வக்கிறேன்ன்னு சொன்னப்ப, ரொம்ப சந்தோசம் தம்பி. அவன் உங்களை குட்டிச் சுவராக்கிருவான். நம்பாதீங்க. முதல்ல இங்கிருந்து நீங்க போங்கன்னு நான் சொன்னேன். என்னோட வாத்தியார் செல்வாராஜ் சார் என்னப்பா செந்திலு, இதுல எல்லாம் நீ போயி பேசாதன்னு சொன்னாரு. ஆமா சார், அவன் அவமானம் தாங்கமா உயிர் போச்சுன்னா நீங்க குடுப்பீங்களான்னு கேட்டேன். அமைதியாகிட்டாரு. அதுக்குப் பிறகு ஹாஸ்டல்ல வந்து அழுதான். இப்படி யாருமே வந்து நான் அடி வாங்குறப்ப எனக்காக பேசுனது இல்ல செந்திலு. இனிமேலாவது நான் படிக்கிறதுக்கு முயற்சி பண்றேன்னு சொன்னான்.  1997 ம் ஆண்டு SSLC தேர்வுல முருகேசன் 435 மார்க் வாங்குனத அவங்க அப்பா ஸ்கூல் போர்டுல பாத்துட்டு ரொம்ப சந்தோசப் பட்டாரு.  நானு 400 மார்க்குக்கு அஞ்சு மார்க் கம்மி. என்னைப் பார்த்து முருகேசன் அப்பா, ரொம்ப சந்தோசமா இருக்குது செந்திலு. உன்னை வாழ்நாள்ல மறக்கமுடியாதுன்னு சொன்னப்ப, எங்க அப்பா பக்கத்துல இருந்தாரு. பள்ளிகூடத்து வயசுல வாழ்க்கைன்னா என்னான்னு எனக்கு முருகேசன் கத்துக் கொடுத்த மாதிரி, இன்னைக்கு வரைக்கும் யாருமே கத்துக் கொடுக்கல..!!

No comments:

Post a Comment