Tuesday, April 1, 2014

வனவளம் தீயில் அழிவதிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்போம்!

ரு நாட்டில் வனவளம் இருந்தால்தான், அங்கே மழைவளம் பெருகும். மழைவளம் பெருகினால்தான், அந்த நாடு செழிப்பானதாக இருக்கும். அந்த வகையில், உலகம் முழுவதிலும் வனவளம் பெருகவேண்டும் என்பதில் ஒரு பெரிய அக்கறையும், உத்வேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாடு, அல்லது மாநிலம் என்றாலும் சரி, அங்கு 33 சதவீதம் வனவளம் மற்றும் மரஅடர்த்தி பரப்பு இருக்கவேண்டும். இந்தியாவின் தேசிய வனகொள்கையும் அதைத்தான் தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் வனவளம் 22 சதவீதம்தான். அதாவது, தமிழ்நாடு 22,877 சதுர கிலோமீட்டர் வனப்பரப் -பைத்தான் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரிக்க, தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்துவருகிறது.



“பசுமை கலாம்“ என்ற திட்டத்தின் கீழ், நடிகர் விவேக், ஒரு லட்சம் கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு, இதுவரையில் 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்து இருக்கிறார். சிறு, சிறு துளியாக மரக்கன்றுகளை நட்டு, வனவளத்தை பெருக்கும் முயற்சியில் அரசும், மற்றவர்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, ஒட்டுமொத்தமாக ஓட்டைபோட்டு தண்ணீரை வெளியே தள்ளும் நிலைபோல, இப்போதெல்லாம் அடிக்கடி நமது வனப்பகுதிகளில் தீவிபத்து நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு மரக்கன்றை நட்டு, அது பெரிய மரமாக வளர்ந்து, நன்மைபயக்க 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், நமது காடுகளில் ஒரு நொடியில் ஏற்படும் தீ, அதை முழுமையாக அழித்துவிடுகிறது.


தமிழ்நாட்டில், ஊட்டி தொட்டபெட்டா பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதால், ஏராளமான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் தீவிபத்து ஏற்பட்டதால், அங்கு அடர்ந்து வளர்ந்திருந்த மூலிகை செடிகளும், பலன்தரும் மரங்களும் தீயில் கருகின. திருவண்ணாமலை கிரிவலபாதையில் அடிக்கடி தீவிபத்து நடக்கிறது. ஏலகிரி மலையில் தொடர்ந்து தீவிபத்துக்கள் நடக்கின்றன.
தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்களாகிய நாமும் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கி, வனவளம் காப்போம்...


நடிகர் விவேக் அவர்களின் பசுமைப் புரட்சி இந்திய தேசத்தில் மேன்மேலும் வெற்றியடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment