Tuesday, April 15, 2014

மாவட்ட ஆட்சித் தலைவர்களை (கலெக்டர்கள்) உருவாக்கும் மதிப்பிற்குரிய அருமைப் பேராசிரியர்.கனகராஜ் அவர்கள்..

கோவை மாநகரமான சித்ரா பகுதியிலிருந்து நகர்மண்டபத்தை நோக்கி எனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த மாலை வேளையில் ஹோப்ஸ் பகுதியிலிருந்து கொடிசியா மைதானத்தை நோக்கி பேராசிரியர்.கனகராஜ் அவர்கள் நடைபயணமாக வந்து கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தை CIT தொழில்நுட்பக் கல்லூரி முன்பு நிறுத்தி விட்டு, எதிரில் வந்த பேராசிரியருக்கு வணக்கம் தெரிவித்தேன். சும்மா மாலை நேரங்குறதால அரை மணி நேரம் நடக்கலாம்னு வந்தேன் செந்தில்குமார் என்றார். பேராசிரியர் பணிபுரியும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணிப்பொறித் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக படித்துக் கொண்டிருந்த காலகட்டம். இத்தகைய தருணங்களில் பேராசிரியரின் துறைக்குச் சென்று உலக அரசியல் குறித்து மணிக்கணக்காக உரையாடும் அனுபவம் நேர்ந்தது. உலக சரித்திரங்கள்ல மிகுந்த ஆர்வம் இருக்குற நீங்க நேரடியா வரலாற்றுத் துறையை தேர்ந்தெடுத்து படிச்சிருக்கலாமுன்னு சில ஆசிரிய நண்பர்கள் கேட்டாங்க. அப்பதான் சொன்னேன், இங்கதான் நாம தப்பு பண்றோம். தமிழ் படிச்சவங்கதான் தமிழ்ல பேசணும், வரலாறு, அரசியல் அறிவியல் படிச்சவங்கதான் கலெக்டரோ, அரசியல்வாதியா ஆகணும்னு ஒரு கோடு போட்டு வச்சிருக்காங்க. எந்த துறையில படிச்சிருந்தாலும் நாம எதுல சாதிக்கணும்னு நினைக்குறோமோ அதுல வெற்றியடையுறதுதான் பெரிய விஷயம். நாமலே ஒரு கோடு போட்டுக்கிட்டு இதுதான் இதுதான்னு ஒரு எல்லைய வரையறுக்கக் கூடாதுன்னு அவங்ககிட்ட சொன்னப்ப, வித்தியாசமான பதிலுக்கு வியப்பா பாத்தாங்க. ஆனா நாமா புதுசா பண்ண நினைக்கிறதை அவ்வளவு சீக்கிரம் இந்த சமுதாயத்துல செய்யவிட மாட்டாங்க குமார் சாருன்னு ஒரு விசயத்தை அவங்க சொன்னப்ப, அதுதான் ஒளிபெற்ற சமுதாயமுன்னு நான் சொன்னேன். என்னையவே நிறைய பேரு, ஒரே விசயத்துல கவனம் செலுத்து. இல்லேன்னா வாழ்க்கையில செட்டில் ஆகுறதுக்கு லேட்டாயிரும்னு சொல்லி பயமுறுத்துவாங்க. இப்படி எல்லாரும் நினைச்சி நினைச்சிதான் சமுதாயமே ஒரு பாதுகாப்பு இல்லாம, எல்லாரும் பயத்துல வாழ்ந்துகிட்டு இருக்காங்க. இங்க எல்லாருமே அப்படி நினைச்சா, இந்த சமுதாயத்துல யாராலயும் எதையுமே மாத்த முடியாது. சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடமா நெருப்பாற்றுல நடக்காம எந்த ஒரு மாற்றத்தையோ, இலட்சியத்தையும் அடையமுடியாதுங்கிறதை வரலாறு சொல்லுதுன்னு ஆசிரியர் நண்பர்கள்கிட்ட மனம் திறந்து பேசுனது...

அவினாசி சாலையில் உள்ள CIT தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பு பேராசியரை புகைப்படம் எடுத்த வேளையில்...


பயிற்சி மையத்தில் மாணவர்களுடன் பேராசிரியர்.கனகராஜ் அவர்கள்...


திரும்பிய இடமெல்லாம் சுவரொட்டிகள், எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்.. என அடுத்த அறுவடைக்குத் தாயாராகிவிட்டன கல்வி நிறுவனங்கள். அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கமான இது, கல்வி நிறுவனங்களுக்கான பொற்காலம். அட்மிஷன்களுக்கு கோடிக்கணக்கில் பணம் குவியும்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போல, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான பயிற்சிகளுக்கும் மாணவர்கள் பெரிய தொகையைக் கட்டணமாகச் செலவிடுகிறார்கள்.

இந்தச் சூழலில் பேனர், விளம்பரம் என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஒரு துளிக்கட்டணமும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பேராசிரியர்.கனகராஜ் அவர்கள். கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றுகையில், மதியம் 2 மணிக்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கோவையில் மாநகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் உயர் கல்வி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

பேராசிரியர் அவர்கள் தன்னுடைய பணி அனுபவங்கள் குறித்து பேசிய வேளையில்...

ஸ்கூல்ல படிக்கும்போது இருந்தே நான் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அந்தக் கனவுலதான் படிச்சேன். ரெண்டு முறை நேர்முகத் தேர்வு வரை போய் ஐ.ஏ.எஸ். வாய்ப்பை இழந்தேன். அதுல கிடைச்ச அனுபவம் மூலமாதான் இந்த இலவசப் பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி என் சொந்த ஊர். பள்ளிப் படிப்பு தஞ்சாவூர்ல, கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் மேல் படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படிச்சேன். பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் படிச்சேன். அப்போது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களோ, புத்தகங்களோ இல்லை. இருந்தாலும், ரொம்ப தீவிரமா படிச்சேன். ரெண்டு முறை இண்டர்வியூ வரைக்கும் போய், ஐ.ஏ.எஸ். ஆகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டேன்.

அதுக்கு அப்புறம் அரசியல் அறிவியல் துறையில முனைவர் பட்டம் பெற்று, 1998 - ல் கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசியரா சேர்ந்தேன். நான் ஐ.ஏ.எஸ். படிச்சதைக் கேள்விப்பட்டு 2006 ம் ஆண்டுல எட்டு பேர் ஐ.ஏ.எஸ். படிப்புக்காக எங்கிட்ட வந்தாங்க. அவங்களுக்கு என் வீட்டுல வெச்சு இலவசமா கிளாஸ் எடுத்தேன். அதில் ரெண்டு பேர் ஐ.ஏ.எஸ்.ஆனாங்க. ஒருத்தர் அஜிதா பேகம். தமிழகத்த்திலிருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண். இப்ப திருவனந்தபுரத்துல காவல் துறை துணை ஆணையரா இருக்கார். இதுவரைக்கும் எங்கிட்ட பயிற்சி பெற்ற 35 பேர் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுல ஜெயிச்சி, கலெக்டராகவும் காவல் துறை அதிகாரிகளாகவும் நாடு முழுக்க இருக்காங்க..

இதுக்கு அப்புறம் நிறைய பேர் என்கிட்ட படிக்க வந்தாங்க. நாங்க இருந்தது வாடகை வீடு. நிறைய பேர் வந்ததால அங்கே அவங்களுக்கு கிளாஸ் எடுக்க முடியல. அதனால 2008 ம் வருஷத்துல இருந்து கோவை அரசுக் கல்லூரியில் உள்ள எனது அறையிலேயே வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். கல்லூரி முடிந்த உடனும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சி எடுத்தேன். அங்கு பயிற்சி எடுத்தபோது 14 பேர் தேர்ச்சி பெற்றாங்க.

2011 - ல கோவை மாநகராட்சி கமிஷனரா இருந்த அன்சுல் மிஸ்ரா, பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவர்கள் எல்லாம் கிழே உட்கார்ந்து படிக்கிறதைப் பார்த்துட்டு, மாநகராட்சி கட்டடத்துல உயர் கல்வி மையக் கட்டடத்துல பயிற்சியைத் தொடங்கலாம்னு சொன்னாரு. 2011 ல இருந்து அங்கே பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். இப்போ ஜூனியர் பேட்ச், சீனியர் ஸ்டுடன்ஸ், அட்வான்ஸ்டு குரூப்னு மொத்தம் 300 பேரு எங்கிட்ட படிக்கிறாங்க. நாலு ஞாயிற்றுக்கிழமைதான் நான் விடுமுறை எடுத்திருக்கேன். அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தால்தான்...

இதுவரை என் பயிற்சி மையத்தில் படித்த பலர் ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். நானே கலெக்டாராகி இருந்த்தால்கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருக்க மாட்டேன் என்று சொன்னபோது, இவரை நினைத்து பெருமை கொண்டேன். உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் பேராசிரியர்.கனகராஜ் அவர்களே..! மேன்மேலும் தொடரட்டும் உங்கள் கல்விச் சேவை..! இனி அடுத்த 50 ஆண்டுகளில் கோவை மாநகரின் கல்வித் தந்தை என்று போற்றப்படுவீர்கள்..!

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி 
எழு பிறப்பும் ஏமாப்புடைத்து - குறள் 

நல்லதொரு மனிதரை நண்பராகப் பெற்றதால் தினம் தினம் உற்சாகத்தோடு ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது. சமூகம், அரசியல், உலகில் நடைபெறப்போகும் பொற்கால சரித்திரம் குறித்து அறிவை விரிவு செய்து கொண்டே போவதற்கு பேராசிரியரின் நட்பு துணைபுரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவு 2006 - 2010 ம் ஆண்டு வரைக்கும் மனதில் இருந்தது. மூன்று தேர்வுகள் எழுதியும் ஏனோ முதன்மை தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. மனது முழுவதுமே இலக்கியங்களிலும், வரலாற்று ஆராய்ச்சிகளிலுமே மூழ்கிக் கிடந்தது. அதனால் மேடைப் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்வதிலும், கணிப்பொறி முனைவர் பட்ட ஆராச்சியிலும் கவனம் செலுத்துவத்திலே நாட்கள் பயணம் செல்கிறது...
KamalHaasan.tumblr.com

No comments:

Post a Comment