Sunday, April 6, 2014

பேராசிரியர் G.சுப்பிரமணியன் அவர்களை நான் அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளையில் - 05.04.14

பேராசிரியர்.சுப்பிரமணியன் அவர்கள் தற்பொழுது கோவில்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சுபா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய இரண்டு புதல்வர்களும் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கிறார்கள். நான் SRNM கல்லூரியில் சேர்ந்தபொழுது, கல்லூரி வாழ்வின் முதல் வகுப்பை இவர்தான் எடுத்தார். Digital Electronics பாடத்தை நடத்தினார். நான் மாணவராக இருக்கும்போது, எனது வகுப்பிலுள்ள மாணவர்களிடம் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். எனது சீனியர் மாணவர்களிடம் இவருக்கிருந்த செல்வாக்கை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவர் கல்லூரியில் பேராசிரியாராக பணியில் சேர்ந்தது 1991 ம் வருடம். அப்போதைய கணிப்பொறித் துறையின் தலைவர் தனபால் அவர்கள். 1992 ம் ஆண்டு கல்லூரிக்கு பேருந்தில் வந்து, கல்லூரி வளாகத்தின் முன் இறங்கும்பொழுது, பேருந்தின் பின்னால் வந்த சார்லஸ் என்ற பேருந்து, இவர் வந்த பேருந்தின் மீது மோத, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் துன்புற்றார். 1992 ம் ஆண்டிலிருந்து 2007 ம் ஆண்டு வரைக்கும் காலில் ஏற்பட்ட காயத்தைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்விப் பணி ஆற்றினார். 2007 ம் ஆண்டு இவருக்கு காலில் மருத்துவ சிகிச்சை சென்னை மாநகரில் செய்யப்பட்டு, தற்போது மிகுந்த நலமுடன், முன்பைவிட மிகவும் உற்சாகமாகக் உள்ளார். இவரின் மருத்துவச் செலவுகளை முன்னாள் மாணவர்களே முழுவதும் செய்தார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அந்த முன்னாள் மாணவர்களுக்கு எல்லாம், இந்தக் கல்லூரியின் வலைப்பூவின் மூலம் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ சிகிச்சை நடைபெற்ற பொழுதும், அதற்கு பின்பும் உடனிருந்து கவனித்துக் கொண்ட, எனது சீனியர் மாணவர் செவக்குளம் சுப்புராஜ் மாம்ஸ் அவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நான் வெகுநாட்களாக பேராசிரியரை சந்திக்க நினைத்தும், நாட்கள் தள்ளிக்கொண்டே போனது. அலைபேசியில் அழைத்து வெகுநாட்களாக நலம் விசாரித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தேன். இன்றைய தினம் பேராசிரியரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த வலைப்பூவை பேராசிரியர் பார்த்துவிட்டு, அற்புதமான முயற்சி என்று பாராட்டினார். மேலும் இந்த வலைப்பூவில், நான் எழுதிய கட்டுரைகள் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய நேர்த்தியுடன் இருப்பதாக கூறியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மேலாண்மை பொன்னுச்சாமி என்ற சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரின் நடையைப் போன்று இருப்பதாக சொன்னார். எனது மதிப்பு மிக்க பேராசிரியடமிருந்து, இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த பாராட்டுக்கள் என்னை மேன் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க உத்வேகமளிக்கிறது. 

இனி வரும் நாட்களில் பேராசிரியர்.சுப்பிரமணியன் அவர்களும் இந்த வலைப்பூவில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதன் மூலம் என்னுடைய வலைப்பூவிற்கு அவர் பெருமிதம் சேர்க்கிறார். முன்னாள் மாணவர்களும், இவரிடம் பேரன்பு கொண்ட மாணவர்களும் இவருடைய மலரும் நினைவுகளை படிப்பதன் மூலம், கடந்த கால பசுமையான நினைவுகளை தெரிந்து கொள்வதோடு, காலத்தால் அழியாத படைப்பாகவும் இருக்கப்போகிறது. நமது SRNM கல்லூரிக்கென்று ஒரு தனிச்சிறப்பு மிக்க வரலாற்று ஆவணத்தை உருவாக்கிய நிறைவும் கிடைக்கப்பெருமானால், இதை விட ஒரு மிகச்சிறந்த பேறு எனக்கு இருக்கப்போவதில்லை.


(இடமிருந்து)  புதல்வர் குருபிரசாத், பேரா.சுப்பிரமணியன், நரேன் சந்த்ரு 


பேராசிரியருடன்...

No comments:

Post a Comment