Friday, May 16, 2014

நினைவுகள் - 10

இளங்கலை வகுப்பு கல்லூரி வாழ்க்கையில் இன்பமயமான சுற்றுலா செல்வதற்கு உதவிகரமாக இருந்த நண்பன் பாலகிருஷ்ணனுக்கு நன்றிகளை சொல்லியாக வேண்டும். பாலகிருஷ்ணனிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். மறுநாள் விஜயாபுரி வெங்கடேஷிடம் சென்று, நானும் சுற்றுலா வருகிறேன் என்று சொன்னபோது, பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு துறைத்தலைவரிடம் கொடுத்துவிட்டேன் என்று கூறினார். நீ செந்தில்குமாரு, கிருஷ்ணவேணி மேடத்தைப் பார்த்து சொல்லி பேரைக் கொடுத்துரு. மேடம் என்ன சொல்றாங்களோ தெரியலை. நாளைக்கு வேற ரயில்வே நிலையம் போயி, Students Concession form வாங்கிட்டு வரச்சொல்லியிருக்காங்க. அதனால இன்னைக்கே போயி மேடத்தை பார்த்து உன்னோட பேரைக் கொடுத்துருப்பா என்று வெங்கடேஷ் சொல்லிவிட்டு போய்விட்டார். சரியாப் போச்சு, இனி கிருஷ்ணவேணி மேடத்தை வேற பார்த்து சொல்லணுமா. ஒன்னும் பிரச்சினையில்ல..! சுற்றுலா வர்றேன்னு சொல்லப் போறோம். இதுல என்ன ஆயிரப்போகுது என்று அடுத்த அரைமணி நேரத்தில் பேராசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்றேன். கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில்தான் பேராசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறை இருக்கும்.


துறைக்குச் சென்று பேரா.கிருஷ்ணவேணி அவர்களிடம் பேசினேன். அப்படியா செந்தில்குமாரு, பேரைச் சேர்த்துக்கலாம். ஏன்? உன்னோட ரூம் மேட் போத்திராஜ், சிவகுமாரு, டேஸ்காலர் சுரேஷ்குமாரெல்லாம் வரலை.
தெரியல மேடம். வரணுமா..? வேண்டாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்..!! சரியான காரணம் எனக்குத் தெரியல மேடம். நானும் ரெண்டு நாள் கழிச்சு பெயர் பட்டியலை இறுதி செய்யலாம்னு இருந்தேன். சுற்றுலா போற தேதிய ஒரு வாரம் முன்கூட்டியே மாத்துனதுல, அவசர அவசரமா செய்ய வேண்டியதா போச்சு. அருணேஷ் சாரைப் பாத்து சொல்லிட்டுப் போயிரு செந்தில்குமாரு என்றார். பேரா.அருணேஷ் சாரைப் பார்த்து நானும் சுற்றுலா வருகிறேன் என்று சொன்னபோது, சரி செந்தில் குமாரு, ரொம்ப சந்தோசம். நீதான் சுற்றுலால கதாநாயகனா இருக்கப்போற. சுற்றுலா வந்துகிட்டு எங்களைப் பார்த்துகிட்டு பயந்துகிட்டு எல்லாம் இருக்கவேணாம். சாதரணமா எங்க கூட பேசலாம். சுற்றுலா போயிட்டு வந்தோமுன்னா, நம்ம வாழ்நாள் இறுதிவரைக்கும் மறக்க முடியாத நினைவுகளா இருக்கணும் செந்தில்குமாரு. சரி சார் நான் வகுப்புக்கு போறேன்னு சொல்லிட்டு, சடையம்பட்டி முக்குரோட்டுக்கு போயிட்டேன்.
வரலாறு, கணிதம், வணிகவியல், இயற்பியல், ஆங்கில இலக்கியத் துறைன்னு ஒவ்வொரு வகுப்பிலேயும் குறைஞ்சது பத்து பேராவது எனக்கு நெருங்கிய நண்பர்களா பழகி வச்சிருந்தேன். நண்பர்கள்கிட்ட எல்லாம் சுற்றுலா போனா எப்படியெல்லாம் மகிழ்ச்சியா இருக்கலாமுன்னு ஒருவாரமா ஒரே விவாதம். என்னோட மனசுல எல்லையில்லாத ஒரு சந்தோசம் உருவாச்சு..!!


மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் 
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தன் இணையடி நிழலே..!!

அந்த வார இருதியில ஊருக்குப் போயி எங்க அப்பாகிட்ட சொன்னேன். இந்த மாதிரி பெங்களூரு, மைசூருக்கு எங்க துறையிலிருந்து கூட்டுபோறாங்க. அவசியம் நான் போயாகணும். இப்போதைக்கு பணம் தேவையில்லை. நான் கூடப்படிக்கிற ஒரு பையன்கிட்ட கடன் வாங்கியிருக்கேன். சுற்றுலா போயிட்டு வந்து கொடுக்குறேன்னு சொல்லி இருக்கேன். என்ன சொல்றேங்க அப்பான்னு கேட்டேன். சரி செந்தில்குமாரு கவனமாப் போயிட்டு வா. ஏழரைச் சனி நடக்குறதால, நீ படிச்சி வைச்சிருக்கிற சனீஸ்வரன் மந்திரத்தை ஒரு நாளைக்குப் பத்து தடைவையாவது சொல்லிரு. ஞாபகம் வச்சுக்கோ. நான் சமீபமா பத்து வருசத்துக்கு முன்னாடி மைசூருக்கு ஒரு வேலை விசயமா போனப்ப, வெளியில சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை நடந்துருச்சு. நம்ம குடும்பத்தை பொறுத்த அளவுக்கு மைசூரு ராசியில்லாத ஊரு. நம்ம குடும்பம் நாலு தலைமுறைக்கு முன்னாடி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கறதுக்கு முன்னாடி ஆந்திரா மாகாணத்துல இருந்துருக்கோம். நம்ம முப்பாட்டன் காலத்துல யாரோ ஒருத்தரு, ஆந்திராவோ ஹைதராபாத் சமாஸ்தானத்துலயோ போர்வீரனாக இருந்து, நூற்றுக்கணக்கான பேரை மைசூர் மகாணத்துல நடந்த ஏதோ ஒரு போர்ல வாளால வெட்டி வீழ்த்தியிருக் காருன்னு, என்னோட வரதராஜ் தாத்தா எங்க அப்பா ராமசாமிகிட்ட சொல்லி இருக்காரு. சில தாய்மார்களோட சாபம் இருக்குதுன்னு எங்க அப்பா இராமசாமி அடிக்கடி என்கிட்டே சொல்லுவாரு. இந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மையா இருக்குமுன்னு எனக்குத் தெரியல..!! ஆனா எங்க அப்பா ராமசாமி அய்யா வருசத்துல ஒரு தடவை மைசூருக்குப் போயி, ஏதோ ஒரு சாமியார்கிட்ட நேர்த்திகடன் செஞ்சிட்டு வருவாரு. அப்படி ஒரு தடவை நானும் அந்த சாமியாரப் பார்க்க பத்து வருசத்துக்கு முன்னாடி போனப்பதான், சில அசம்பாவிதங்கள் நடந்து, உயிர்தப்பிச்சி வந்தேன். அந்த சாமியார ரெண்டு மூணு நாள் தேடியும் என்னால கண்டுபிடிக்க முடியல. அதுக்குப் பிறகு திரும்பவும் போயி தேடாலம்முன்னு இருந்த யோசனையை மாத்திகிட்டேன். இந்த விஷயத்தை இப்பதான் உன்கிட்டே சொல்றேன். மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். எங்க அம்மாவுக்கு பிறந்த முதல் குழந்தை நாராயணசாமி செக்கசெவேருன்னு அப்படி அழகா இருப்பாராம். சின்ன வயசுலேயே காலமாகிட்டாரு. எங்க தாத்தாவோட பிறந்த அண்ணனும் கொஞ்ச வயசுலேயே இறந்துட்டாரு. என்கூட பிறந்த மூத்த அக்காவோட முதல் பையன் மனோகரனும் இளம்பிள்ளைவாதம் நோய்தாக்கி இருபது வயசுலேயே மரணமடைஞ் சுட்டாரு. நீ கூட உங்க அம்மாவுக்கு ரெண்டாவதா பொறந்த குழந்தைதான். உங்க அம்மாவுக்கு முதல் குழந்தை பிறக்கும்போதே உசிரு இல்லாமத்தான் பொறந்துச்சு. நான் அன்னைக்கு கதறி அழுதேண்டா. அந்த மாதிரி நான் வாழ்க்கையில எப்பவுமே அழுதது இல்லை. உங்க அம்மாவ மதுரை அரசாங்க ஆஸ்பத்திரியில ரெண்டாவது பிரசவத்துக்கு கொண்டுபோனப்ப, பொறக்கப் போற குழந்தையை காப்பாத்துறது பத்து சதவிகிதம்தான் வாய்ப்பு இருக்குது. தொண்ணூறு சதவிகிதம் அந்த மதுரை மீனாட்சி கையிலயும், அந்தக் கோயில்ல இருக்குற சிவபெருமான் கிட்டயும்தான் இருக்குதுன்னு டாக்டர் என்கிட்டே சொன்னப்ப, மூச்சே நின்னுபோச்சுடா. உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்காம எங்க சோலையம்மா, இராமசாமி அப்பா, சின்னம்மா ஆதியம்மாள், ஜெயராமச்சந்திரன் மாமா, இன்னும் கூட வந்த நாலு பேருகிட்ட சொன்னேன் - பத்திரமா இங்க நீங்க பாத்துக்கோங்க. நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயி ஆண்டவன்கிட்ட பிரார்த்தனை பண்ணப் போறேன். எதுநடந்தாலும் நாம மனச தளரவிட வேண்டாம். நான் இரவு பத்து மணிக்குள்ள வந்துருவேன்னு சொல்லிட்டு கோயிலுக்கு உள்ள போயிட்டேன். மீனாட்சி அம்மன் கோயில்ல இருக்கிற சிவலிங்கம் முன்னாடி உட்கார்ந்து திருவாசகத்தையும், சிவபுராணத்தையும் கண்ணமூடிகிட்டு பாட ஆரம்பிச்சேன். கோயில் நடையை இரவு பத்து மணிக்கு சாத்துனாங்க. இரவு பண்ணிரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு வந்துட்டேன். கழுகுமலை போத்திராஜ் டாக்டரு பிராக்டீஸ் டாக்டரா அப்ப இருந்தாரு. நம்ம சொந்தக்காரருதான். தைரியமா இருக்கனும்ன்னு ஆறுதல் சொன்னாரு. திரும்பவும் நான் மருத்துவமனை யிலேயே சிவபெருமானோட சிவபுராணத்தை மனசுக்குள்ளேயே பாடுனேன். அன்னைக்கு ஆவணி 15 வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நீ எந்தப் பிரச்சினையும் இல்லாம, உங்க அம்மாவோட வயித்த கிழிச்சிகிட்டு இந்த உலகத்துல ஜனனம் ஆயிட்டே. நீ பொறந்துட்ட விஷயத்தை ஜெயராமச்சந்திரன் மாமாதான் ஓடிவந்து என்கிட்டே சொன்னாரு. என்னோட கண்ல இருந்து அப்பதான் ஆனந்தக் கண்ணீர் வந்துச்சு. சிவபெருமான கும்புட்டதாலதான் நீ பொறந்தேன்னு சொல்ல முடியாது. அப்பா இருந்த கடுமையான சூழ்நிலையில ஆண்டவனை நம்பி வேண்டிகிட்டேன். சிவபெருமானலா அருள் கிடைச்சதுன்னு ஒரு நம்பிக்கை எனக்கு வந்துச்சு. இனிமே நம்ம குடும்பத்துக்கு சிவபெருமானோட அனுக்கிரகம் எப்பவுமே இருக்கும் செந்தில்குமாரு. நீ பொறந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வைராக்கியம் வந்துச்சு. எனக்குள்ள ஒரு ஆன்மீகபலம் இருக்குறதா உணர்ந்தேன்..! இனிமே நாம வாழ்க்கையில பயந்துகிட்டே இருக்ககூடாது. நாம இந்தப் பூமியில வாழ்ற நாள்ல ஊருல இருக்குற மக்களுக்கு உதவியா இருக்கணும். நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு சுயநலமா இருக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அதனால ரொம்ப கவனமா போயிட்டு வரணும். உங்க அம்மாகிட்ட சுற்றுலா போறத பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். தினமும் என்னைய கேள்வியா கேட்டு பாட படித்திருவா..!

சாமியார் ஸ்ரீபதி பாபா - மைசூரில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் புகைப்படம் எடுத்தது - மே மாதம் 2009 ம் வருடம்..!!


எங்க அப்பா அன்னைக்குத்தான் இவ்வளவு விசயத்தையும் சொன்னாரு. அதுக்கு முன்னாடி இவ்வளவு நடந்ததை சொல்லல. எல்லாத்துக்குமே ஒரு நேரம், காலம் வந்துச்சுனாத்தான் சில ரகசியங்கள் வெளிய வரும் போலன்னு நினைச்சுகிட்டேன். அதுக்குப் பிறகுதான் மைசூர் வரலாறப் பத்தி அக்குவேறு ஆணிவேரா தேடிப் பிடிச்சு புத்தகங்களை படிச்சேன். மைசூருக்கே அடிக்கடி போயி நிறைய இடங்களை சுத்திப் பார்க்க ஆரம்பிச்சேன். இறைவன் கருணை மிக்கவன்..!!  நிறைய அதிசயங்களை எனக்கு காட்ட ஆரம்பிச்சான். அமானுஷ்யமான மனிதர்களை அறிமுகப்படுத்தினான். எங்க தாத்தா ராமசாமி அய்யா மைசூர்ல நேர்த்திக்கடன் செய்யுற சாமியார கண்டுபிடிச்சேன். ஸ்ரீபதின்னு பேரு உள்ள அந்த சாமியாரு என்கிட்ட இருக்குற ஆன்மிக பலம் என்ன..? என்னால இந்த உலகத்துல என்ன மாதிரியான செயல்களை செய்யமுடியும்..? இந்த உலகத்துல மாயமான முறையில கண்ணுக்குத் தெரியாம புதைக்கப்பட்டு  இருக்குற சக்தியை நாம எப்படி பயன்படுத்தணும்..? இந்த பழம்பெரும் பண்பாடு, கலாச்சாரம் உள்ள சிவபெருமான் வாழுற பாரத பூமியை உலகத்துலேயே உன்னதமான ஒரு நாடாகவே உருவாக்கலாம். உலகத்தையே ஆட்சி செய்யக்கூடிய வல்லமை நம்ம பாரத பூமிக்கு இருக்குன்னு அவரு சொன்னப்ப, எனக்கு மிகைப்படுத்தி பேசுறாரோன்னு தோணுச்சு. அவருகிட்ட ஆசி வாங்கிகிட்டு கிளம்பலாமுன்னு எந்திரிச்சேன். அந்த நேரத்துல ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னாரு..!தம்பி..!! உன்னால இந்த உலகத்துல ஒரு மாபெரும் சரித்திரத்தை படைக்கவும் முடியும். சரித்திரத்தை எழுதவும் முடியும். உங்க அப்பா இந்த உலகத்தை விட்டு போனதுக்கு அப்புறமா நான் சொன்ன எல்லாமே நடக்கும். என்ன சாமி சொல்றேங்க..!! எனக்கு எழுத வெல்லாம் வராது. ஏதோ புத்தகங்களை படிப்பேன். அப்படி உன்னைய படிக்க வக்கிறதே ஒரு சக்திதான். இந்த உலகத்துல நடக்கபோற ஒவ்வொரு விசயமும் தீர்மானிக்கப்பட்டது. யாராலயும் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தை மாத்தமுடியாது. கம்பியூட்டர் படிச்ச நானு, அதுல புரோகிராம் எழுதவே பிடிக்கலை. எப்படி சாமி இது எல்லாம் சாத்தியம்.!! நடக்க வேண்டிய நேரத்துல எல்லாம் நடக்கும் தம்பின்னு கன்னடமும், தெலுங்கு மொழியும் கலந்த பாசையில பேசுனாரு. அவர நான் பார்த்த இடத்துக்கு பேரு கண்டகேசவரு மலைன்னு சொன்னாங்க. சரியா ஞாபகம் இல்ல. சொல்லிட்டு ஒரு ருத்திராட்சை மாலையை போட்டோக்குன்னு சொல்லி கொடுத்துட்டு போயிட்டாரு. இனிமே என்னை சந்திக்க வரவேண்டமுன்னு சொல்லிட்டாரு. அதுக்கு பிறகு நானும் போகலை. அந்த சாமியார நான் கண்டுபிடுச்சு பேசுனது 2009 ம் வருஷம் மே மாதம். அப்ப எல்லாம் எனக்கு Photography ல ஆர்வம் இருந்துச்சு. புகைப்பட கருவியோடதான் எங்கேயும் போவேன். உங்களை புகைப்படம் எடுத்துக்கிறேன் சாமின்னு சொன்னப்ப, முறைச்சுப் பாத்தாரு. சாமியாரை புகைப்படம் எடுத்தேன். அதுக்குப் பிறகுதான் சில விசயங்களை சொன்னாரு. மதுரை எனக்கு சொந்த ஊரு. உங்க தாத்தாவும் நானும் மதுரைக்கு மகாத்மா காந்தி வந்தப்ப தற்செயலாக பார்த்து சந்திச்சிகிட்டோம். நான் சுதந்திர போராட்ட வீரன். குடும்பம் குழந்தை வேண்டாமுன்னு இந்த மைசூருக்கு வந்து சாமியாரா ஆகிட்டேன். இந்தியா தேசம் முழுக்க கோயில் குளமுன்னு சுத்துற ஆளுன்னு சொல்லிட்டு அடையாள அட்டையை காமிச்சாரு. அதையும் புகைப்படம் எடுத்துகிட்டேன். அன்னைக்கு அவரு கொடுத்த ருத்திராட்ச மாலையை போட்டுக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் கழட்டவே இல்ல. என்னோட குருநாதர் யாருன்னு, முக்கடலும் சந்திக்கிற குமரிமுனையில இருக்குற சுவாமிஜிய சொன்னாரு. அவரு ஏன் மேற்குபக்கம் பார்த்து தவம் பண்றாரு தெரியுமா..? தெரியல சாமி..! இந்தியா உலகத்தையே ஜெயிக்கணும். அதுதான் அவரோட வாழ்வின் இலட்சியமா இருந்தது. அந்த இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியால இருக்காங்க. ஆனா அவங்களோட ஆன்மாவை தட்டி எழுப்பக் கூடிய சக்தி யாரோ ஒருத்தருக்கு மட்டும்தான் இருக்குமுன்னு அவரோட புத்தகங்கள்ல பல இடங்கள்ல சொல்லி இருக்காரு.!! நானும் நாடு முழுக்க அலைஞ்சி திரிஞ்சி தேடிகிட்டுத்தான் இருக்கோம். நீ இலட்சக்கணக்கான இளைஞர்கள்ல ஒருத்தனா இருக்கப் போறாயா..? இல்லையான்னு நீதான் முடிவு பண்ணனும்னு அவரு சொன்னப்ப, சரி என்னமோ சொல்றாருன்னு கேட்டுகிட்டே இருந்தேன்..!!


பேரா.புஷ்பராஜ் 
இவ்வளவு விசயத்தையும் சொல்றதுக்கு முக்கிய காரணம் - மைசூரு ரயில்நிலையத்துல மரணத்தோட எல்லை வரைக்கும் போயி உயிர் பிழைச்சதுதான். கண்ண மூடி கண்ணத் திறக்குறதுக்குள்ள எல்லாமே நடந்துருச்சு. ரயில்வே பிளாட்பாமுள்ள நின்னுகிட்டு இருந்த ரயில்ல ஏறி முகத்தைக் கழுவப் போனேன்.  கையில இருந்த கடிகாரத்தை கழட்டி சட்டைப் பையில வச்சிட்டு முகத்தைக் கழுவுனேன். இந்தக் கடிகாரம் சாதரணமான கடிகாரம் இல்ல. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 1999 ம் வருஷம் பாராளுமன்ற  தேர்தல் பிரச்சாரம் பண்ணதுக்கு  அன்பளிப்பா கொடுத்தது. முகத்தை கழுவிகிட்டு இருக்கும்போது கடிகாரம் கீழவிழுந்து ரயில்வே தண்டவாளத்துக்கு அடியில போயிருச்சு. அய்யயோ..! கடிகாரம் கீழ விழுந்துருச்சேன்னு உடனே கீழே போயி தேடி எடுத்துட்டேன். அடுத்த நிமிஷம் ரயில் கிளம்பி நகர ஆரம்பிருச்சிருச்சு. ஒரு இரும்பு ராடு என்னோட தலையில அடிக்கும்போதுதான் ரயில நகர்ந்ததே தெரிய ஆரம்பிச்சுது. சுய நினைவு இல்லாமேயே மெதுவா நகர்ந்து வந்து வெளிய வந்துட்டேன். சைடுல இருக்குற ஜல்லிக் கல்லுல உருண்டு கீழ உருண்டுட்டேன். 45 நிமிஷம் சுயநினைவு இல்லாம கிடந்தேன். புஷ்பராஜ் சாருதான் என்னடா போன பையன வேறக் காணோம். ரயில் வேற கிளம்பி போயிருச்சு. எங்க போயிருப்பானோன்னு தேட ஆரம்பிச்சு கண்டுபிடிச் சிட்டாரு. முகத்துல தண்ணி ஊத்தி மயக்கத்தை தெளிய வச்சாரு. கையில அடிபட்டதுல ஒரே இரத்தமா வருது. அய்யயோ..! என்னடா செந்திலு எப்படிறா இப்படி ஆச்சு. நடக்க வாய்ப்பே இல்லையே. நான் விஷயத்தை சொன்னேன். ஓங்கி ஒரு அறை கண்ணத்துலேயே விட்டாரு. பெரிய இவனாம்மா, கடிகாரத்தை எடுக்கப் போனாரம்மா..!! ஏம்பா இப்படி இருக்கேங்க. கடிகாரம் போன போய் தொலையுதேன்னு விடவேண்டியதுதானே. சரி சரி வா மேல போகலாம். யாருகிட்டயும் இதைப் பத்தி சொல்ல வேணாம். பிரச்சினை ரொம்ப பெரிசாகிரும். கிருஷ்ணவேணி மேடம் சுற்றுலாவை ரத்து செஞ்சிட்டு ஊருக்கு கிளம்புவோம்முன்னு சொல்லிருவாங்க. ஆர்வக் கோளாறுல எதையும் பேசிறாத செந்தில்குமாரு. சரி சார் அமைதியா இருக்குறேன்ன்னு சொன்னேன்..!

ஹைதராபாத் லும்பினி பூங்கா - மாணவர்களுடன் 
2008 ம் வருசம் நான் உதவிப்பேராசிரியரா NGP கலை அறிவியல் கல்லூரியில வேலையில இருந்தேன். மாணவர்களோட ஹைதராபாத் சுற்றுலா போனப்ப, ஏரி பக்கத்துல இருந்த லும்பினி பார்க்குலேயும், லேசர் காட்சி நடந்த இடம், Imax திரையரங்குல தீவிரவாதிகள் வச்ச குண்டு வெடிச்சப்ப, நான் மயிரிலையில உயிர் தப்பிச்சேன். ஹைதராபாத் மாநகரத்துக்குள்ள Gokul Chat உணவு விடுதியிலயும் குண்டு வெடிச்சு மனித உயிர்கள் பலியாச்சு. கிட்டத்தட்ட அன்னையிலருந்து உயிர் மேல இருக்குற ஆசையே எனக்கு போயிருச்சு. என்னடா வாழ்க்கை இது..! எங்க போனாலும் தரித்திரியம் பிடிச்ச மாதிரி உசுரோட விளையாட வேண்டியிருக்குது. ஆனா ஏதோ ஒரு சக்தி இது மூலமா நமக்கு ஏதோ சொல்லவருதுன்னு மட்டும் தெரிய ஆரம்பிச்சது. முதல்ல அந்த சக்தியை கண்டிபிடுச்சு ஆகணும். அதற்குப் பிறகுதான் நான் சில உண்மைகளைத் தேடி மைசூர் மாநகருக்கும், அதை சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களுக்கும் பயணமானது..!


இந்திய நாட்டின் பொற்கால ஆட்சியை மே 16, 2014 நாளான இன்றிலிருந்து நரேந்திரமோடி அவர்கள் ஏற்படுத்துவார்..! பாரத தேசத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதவல்ல வல்லமையை இறைவன் நரேந்திரமோடிக்குத் தருவார். வந்தேமாதரம் என்போம்..! எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம்!!

அனைவருக்கும் இனிய சித்ரா பவுர்ணமி நாள் வாழ்த்துக்கள்..!!

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment