Tuesday, May 13, 2014

செல்லுலாய்ட் - 2013 ம் ஆண்டில் இந்திய அரசின் தேசிய விருது பெற்ற மலையாளப் படம்


செல்லுலாய்ட் என்ற வாழ்க்கை வரலாறு மலையாளப் படம் பிப்ரவரி 15, 2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சிறந்த படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றது. நடிகர் பிருத்திவிராஜ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படத்தின் DVD யை வாங்கிப் பார்த்தேன். இந்தப் படம் வெளிவந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது. திரைப்படம் வெளியானபோது  கோவையிலுள்ள கர்னாடிக் திரையரங்கில் போய் பார்க்கலாம் என்று சென்றபோது, படத்தை எடுத்து விட்டார்கள். அதனால் என்ன, இப்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தில் இரண்டு நாட்களில் youtube ல் பதிவேற்றம் செய்து விடுவார்கள். பெரும்பாலான படங்களை youtube ல் இருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பேன். ஆனால் செல்லுலாய்ட் திரைப்படம் 1930 ம் ஆண்டுகளில் சினிமாவை தெய்வீகமாக நினைத்து, மலையாள திரைப்பட உலகில் தான் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைத்த J.C.டேனியல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைக்காவியம். அதனால் ரூ.120/- மதிப்புள்ள DVD யை வாங்கிப் பார்த்தேன். திரைக்காவியம் என் இதயத்தையே உலுக்கிவிட்டது. மலையாள திரைப்பட உலகில் சகாப்தம் படைத்த ஒரு மனிதர் J.C டேனியல்..!


கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள், தீண்டாமை எனும் கொடிய சாதி வெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி வாகை சூடினார். அப்போது இருந்த பிரிட்டீஷ் காலனி  ஆதிக்கத்தில் இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித் -தாடியது. நாடெங்கிலும் பல தலைவர்கள் தீண்டாமையை ஒழிக்கப் போராடினார்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழலில் கேரள மாநிலத்தில் ஒரு தலித் பிரிவைச் சேர்ந்த ரோசி என்ற பெண்மணியை கதாநாயகியாக டேனியல் நடிக்க வைக்கிறார்.

ஜே.சி.டேனியல் 
அகஸ்தீஸ்வரம் ஜே.சி.டேனியலின் சொந்த ஊர். பல் மருத்துவரான இவருக்கு சினிமா எடுக்கும் ஆர்வம் வருகிறது. அப்போதைய படங்களில் ஒலி அமைப்பு கிடையாது. சலனப்படங்கள்தான் எடுக்க முடியும். ஊரிலுள்ள நண்பர்களுடன் தன்னுடைய அபிலாஷைகளை சொல்லுகிறார். பொருட்செலவு அதிகமாகுமே என்று சொல்லும்போது, கடன்வாங்கி படம் எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையாக சொல்லுகிறார். அழகான மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக வாழும்போது, எதற்காக கடுமையாகப் போராடி படம் எடுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொல்லும்போது, பம்பாய் பட்டணத்தில் தாதா சாகேப் பால்கே, மதராசப் பட்டணத்தில் நடராஜ முதலியார் போன்றோர் சினிமா எடுக்கிறார்கள். நாமும் அதைப் போன்று சினிமா எடுத்து, கேரள மாநிலத்திற்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறும்போது, J.C.டேனியலாக பிருத்திவிராஜ் நன்றாக உரையாடல் செய்கிறார். 


பம்பாய் பட்டணத்திற்குச் சென்று தாதா சாகேப் பால்கே அவர்களை சந்திக்கிறார். தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகிறார். அவருடன் சில நாட்கள் தங்கி படம் எடுப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். படத்தில் நடிக்க கதாநாயகியை பம்பாயிலேயே தேர்வு செய்கிறார். அந்தக் கதாநாயகியை கேராளாவிற்கு அழைத்து வந்த பின்பு, அது வேண்டும், இது வேண்டும் என்று  ஏகக்கெடுபிடி செய்கிறார். உங்களுடைய சாகவாசமே வேண்டாம் என்று அவர்களை அனுப்பிவிட்டு, அங்கேயே ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த P.K.ரோசி என்ற பெண்ணைத் தேர்வு செய்கிறார்.


P.K.ரோஷி 
தன்னுடைய முதல் சலப்படத்திற்கு விகதகுமாரன் (The Lost Child) என்று பெயர் வைத்து, பிரித்திவிராஜ் கதாநாயகனாகவும், அவருடைய சிறுவயது மகனும் நடிக்கிறார்கள். படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த பிறகு, திருவனந்தபுரத்திலேயே காட்சிப்படுத்த கிராமம் கிராமமாக சென்று விளம்பரம் செய்கிறார்கள். ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், திவான்கள், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கான பேர் படத்தைப் பார்க்க வருகிறார்கள். அப்போது முதல் காட்சியைப் பார்க்க கதாநாயகியாக நடித்த ரோசியும் வருகிறார். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் பெண்ணும் எங்களுடன் சரிசமமாகப் அமர்ந்து படம் பார்க்ககூடாது என்று ரகளை செய்கிறார்கள். பிருத்திவிராஜ் அவர்களை சமாதானப்படுத்தி சினிமாக் கொட்டகையில் அமரவைக்கிறார். கதாநாயகியிடம் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி, நாம் அடுத்தக் காட்சியில் பார்க்கலாம் என்று சொல்லும்போது, கதாநாயகி ரோசி கண் கலங்குகிறார்..!!


ஒரு வழியாக அனைவரும் அமர்ந்து சலனப்படத்தை பார்க்கும்போது, ரோசிப் பெண் நாயர்குலப் பெண்ணாக நடித்த காட்சிகள் வருபோது சினிமா கொட்டகையில் களேபரம் ஆரம்பமாகிறது. ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சினிமாக் கொட்டகையை அடித்து நொறுக்குகிறார்கள். கதாநாயகியாக நடித்தப் பெண்மணி அலறி அடித்து ஓடுகிறார். தான் நடித்தப் படத்தைக் கூட பார்க்க முடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி அழுகிறார். கதாநாயகி தன்னுடைய தந்தையாருடன் வசிக்கும் வீட்டைத் தீவைத்து கொளுத்துகிறார்கள். ஊரை விட்டே அந்தக் குடும்பம் சென்றுவிடுகிறது. திரைப்படம் பார்ப்பவர்களின் இதயத்தையே உருக்கிவிடும் காட்சிகள்..!!


அதன்பிறகு ஜே.சி.டேனியல் சோகமாக வீட்டில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய சிறுவயது மகன்ஆத்திரத்தில் படத்தின் பிலிம் ரோலை தீயிட்டுக் கொளுத்துகிறார். நெஞ்சை உருக்கவைக்கும் காட்சி..!! பின்னர் தன்னுடைய இயல்பான வாழ்க்கையைத் தொடக்கி டேனியல் பல் மருத்துவம் பார்க்கிறார். 
தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகரான பி.யூ.சின்னப்பாவை தற்செயலாக சந்திக்கிறார். J.C.டேனியல் திரும்பவும் படம் எடுப்பதற்கான ஆசையைத் தூண்டிவிடுகிறார். J.C.டேனியல் மதராசப்பட்டினம் வந்து மீண்டும் படம் எடுத்து, சொத்துக்கள் அத்தனையையும் இழக்கிறார். ஒரு சினிமா பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர், J.C.டேனியலை சந்திக்க வரும்பொழுது தன்னுடைய சோகமான, பரிதாபகரமான முடிவைக் கூறுகிறார். ஏப்ரல் 25, 1975 அன்று ஜே.சி.டேனியல் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்..! 

1930 ம் ஆண்டில் வெளியான படத்தில் வரும் ஒரு காட்சி ..!
2000 ம் வருடத்தில் திரைப்பட விழா கேரளாவில் நடக்கிறது. ஜே.சி.டேனியலின் புதல்வர் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய தந்தையாரின் கடுமையான போராட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். தான் அந்த சிறுவயதில் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்பட்டு, தந்தையார் எடுத்த அந்த முதல் படத்தின் பிலிம் ரோலை தீயிலிட்டுக் கொளுத்திவிட்டேன். இதன் மூலம் கேரளா சினிமா உலகிற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைத் தேடிக்கொடுத்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு, நானே முழுப்பொறுப்பு..! அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர் மல்க பேசுகிறார். இந்தக் காட்சி உணர்ச்சிகரமாக இருந்தது. 

J.C.டேனியல் 
ஆக ஒரு மாபெரும் கனவுலகவாதியான J.C.டேனியலின் வாழ்க்கை என்னுள் சோகத்தை ஏற்படுத்தவில்லை. எவரொவரும் செய்ய ஆரம்பிக்காத ஒரு விஷயத்தை, நாம் செய்ய முயலும்போது, மதி நுட்பத்துடன் செய்யும் பட்சத்தில், பலத்த எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில், வெற்றிகரமாக செயலை முடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. இதே போன்று தமிழ்த்திரை உலகிலும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாரதி, பெரியார் போன்றோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். இவருடைய "சீனிவாச ராமனுஜம்" வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்..!!

ரா.செந்தில்குமார்...

No comments:

Post a Comment