Sunday, May 11, 2014

வெற்றிப்பாதை மாத இதழுக்கு (ஏப்ரல் 2014) எனது ஆருயிர் நண்பர் கோவை சினி ஆர்ட்ஸ் ஓவியர் ஜீவா அவர்கள் அளித்த நேர்காணல்

வண்ணமே வாழ்க்கையாய்..! 

வண்ணங்கள் குழைத்து வரைந்தது இவரது வாழ்க்கை. தூரிகை இவரது துணை. கற்பனையை கணந்தோறும் காணும் கலைஞன். ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் வரையும் திறன் பெற்றவர். வினோதம்.. 1980-1990 களில் வானத்தை அண்ணாந்து பார்த்த திரைப்பட ஓவிய பேனர்களை, கோவை திரையரங்கு வாசலெல்லாம் வரைந்து தள்ளிய ஓவியன். இளம் ஓவியர்களுக்குச் சிறகுகள் தரும் சித்ரகலா அகாடமியின் தலைவர்... உலகத் திரைக்காவியங்களை அலசித் தீர்த்த "திரைச்சீலை" எனும் சினிமா நூலை எழுதி, இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்ற கோவைத் தமிழன். இப்படி
57 வயதிலும் கலை வாழ்வையே தன் கண்களாய்க் கொண்டு முழு மூச்சுடன் இயங்கிவரும் ஓவியர் ஜீவா அவர்களைச் சந்தித்து உரையாடியபோது...

Jeevartist/facebook.com

ஓவியர் ஜீவா அவர்களுடன் அவருடைய இல்லத்தில்
கேள்வி: உங்கள் ஓவியர் பணியின் ஆரம்பகாலம் பற்றிச் சொல்லுங்கள்? 

பதில்: என் அப்பா வேலாயுதம்பிள்ளை அவர்கள் ஓவியர். அவர் ஓவியம் வரைவதை அருகிலேயே பார்த்து வளர்ந்தவன் நான். பள்ளி நாட்களிலேயே ஓவியம் எனக்கு இயல்பாகவே வரைய வரும். அப்பா சினிமா பேனர்களை வரையும்போது கூர்ந்து கவனிப்பேன். அந்தச் சூழலிலேயே வளர்ந்து வந்ததால் ஓவியம் என் வாழ்வில் இணைந்தது. ஓவியமே மூச்சாய் வாழ்ந்த என் தந்தையை 1981 ம் வருடம் இழக்க நேரிட்டது. தொடர்ந்து நான் அப்பாவின் வழியில் அப்பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன்...

வேலாயுதம்பிள்ளை 
கைகளால் தூரிகை பிடித்து வளர்ந்த காலம் அது. இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. ஒரு நாளில் 20, 25 பேனர்களை வரைவோம். நாங்கள் வரைவதை நிறைய இளைஞர்கள் கூட்டம் வேடிக்கை பார்க்கும். கோவையின் திரையரங்குகளில் எங்களது ஓவிய பேனர்கள் கோலோச்சிய காலம். பெயிண்டில் கையால் வரைந்த காலம் இனிமையானது. ரசனை, வண்ணக் கலவை, கவர்ச்சி இவற்றின் கலவையாய் ஓவியம் வருவதைக் காண்பதே மகிழ்ச்சி. இன்றைய பிளக்ஸ் பேனர்களில் நிற அடர்த்தி, கவர்ச்சி குறைவு மற்றும் தரமும் சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை.

Oratorkumar/twitter.com

கேள்வி: ஓவியர்களுக்கான மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதா? 

பதில்: தொழில் முறை ஓவியர்கள், இயல்பான ஓவியர்கள் என வகைப்படுத்தும்போது சுவர் ஓவியம், பேனர் எழுதுதல், போர்டு வரைதல் எனத் தொழில் முறை ஓவியர்களுக்கு வேலை இருந்தது. ஆதிமூலம் போன்ற சீனியர் ஓவியர்களின் மனவெளி ஓவியங்களும், டிராட்ஸ்கி மருது  போன்றோரின் டிஜிட்டல் ஓவியப் படைப்புகளும் புதிய பரிணாமத்திற்கு, பார்ப்போரை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். இன்று புகைப்படம், ஓவியம், குறும்படம் என நிறைய இளைஞர்கள் புகுந்து புறப்படுவது வரவேற்கத்தக்கது.

விர்ச்சுவல் உலகத்தில் இளைய சமுதாயம் தற்போது வாழ்ந்து வருகிறது. அவர்கள் சமூக ஓட்டத்தில் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது. திறமையான இளம் ஓவியக் கலைஞர்களைத் தற்போது காணமுடிகிறது.

கேள்வி: சித்ரகலா அகாடமி எனும் ஓவிய அமைப்பைப் பற்றி...

பதில்: 37 வருடங்களாக சித்ரகலா அகாடமி மூலம் ஓவியக் கண்காட்சியை நடத்தி வருகிறோம். இளம் ஓவியர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கிறோம். நான் சிறுவயதில் மாணவனாகச் சேர்ந்து நானே தற்போது முன்னின்று உறுப்பினர்களோடு நடத்தி வருகிறேன். பிரகாஷ்சந்திரா, கோபாலகிருஷ்ணன், சுசீலா வில்லியம்ஸ் போன்ற சீனியர் ஓவியர்களைக் கண்ட அமைப்புதான் சித்ரகலா அகாடமி. தற்போது கலை இயக்குநர்களாக இருக்கும் மணிராஜ், முத்துராஜ் இங்கு பயின்றவர்களே..!

சித்ரகலா அகாடமி 
கேள்வி: ரசனை மிகுந்த கலைப்படங்களை ரசிக்கும் ஆர்வம் மற்றும் உங்களது திரைப்படம் குறித்த திரைச்சீலை புத்தகம் குறித்து...


பதில்: கலை ஆர்வத்தில் ஓவியம் கற்றுக் கொள்ளும் போதே நிறைய அயல்நாட்டுப் படங்களை காணும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழிப்படங்களைப் பார்ப்பதும், அது சார்ந்த விஷயங்களை மற்றவர் களுடன் பகிர்வதும் தொடர்ந்தது. இந்த அனுபவங்களை தொடராக ரசனை மாத இதழில் எழுதினேன். இதை "திரைச்சீலை" எனும் தலைப்பில் புத்தகமாக்கினேன். இந்த நூலுக்கு 2011 ம் ஆண்டுக்கான தேசிய விருது திரைப்பட நூலுக்கான பிரிவில் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்.

கேள்வி: ஓவியம் மற்றும் ஓவியர்களுக்கான எதிர்காலம் எப்படி உள்ளது?


இந்தப் புகைப்படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் அதிபருடன்  உள்ளார். கனடா நாட்டு அரசின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறப்பு விருந்தினாராக கலந்த கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

பதில்: கணினி யுகத்தில் ஓவியத்திற்கான சந்தை சிறப்பாகவே உள்ளது. நிறைய இளம் தலைமுறை யினருக்கு வாய்ப்பும் வசதியும் நிறைய கிடைக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் இளம் தலைமுறை -யினருக்கு ஊக்குவிப்பு அவசியமாகப் படுகிறது.

ஓவியக் கலைக்கும் சிற்பக்கலைக்கும் தொன்று தொட்டு முக்கியத்துவம் தந்த பாரம்பரிய நாடு இது.. கலைகளின் மூலமே உலகம் உயிர் பெறுகிறது. புது வடிவம் கொள்கிறது. அக்கலையை நாள்தோறும் பரப்பி வரும் ஓவியர் ஜீவாவை வாழ்த்தி விடைபெறுவோம்..!!

Senthilkrisnan/facebook.com

No comments:

Post a Comment