Thursday, May 8, 2014

நினைவுகள் - 3

NGP கலை அறிவியல் கல்லூரி வாழ்க்கையோடு கோவை மாநகரமும் எனக்கு இமாலயக் கனவுகளைத் தோற்றுவித்தது. முதலாமாண்டு முதற்பருவம் படிக்கும்போது, கல்லூரியின் சூழல் இதயத்தில் மன எழுச்சியை ஏற்படுத்தியது. நான் இளங்கலை படித்த கல்லூரியில் இருபாலர் கல்வி முறைதான் என்றாலும், மாணவிகளுடன் சகஜமாகப் பேசமுடியாது. வகுப்பறையில் படிக்கும் மாணவர்களோடு மனரீதியாக ஏதோ ஒரு பிளவு உள்ளதுபோல நினைவுகள் இருக்கும். கோவை மாநகரம் முற்றிலும் நகரச் சூழலாதலால், கல்லூரியில் மாணவ, மாணவிகள் சகஜமாகப் பேசிக்கொள்வதில் எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்கவில்லை. அதனால் மாணவ நண்பர்களிடையே நிறைய வாழ்வியல் விசயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

முதற்பருவத்தில் என்னுடைய கணிப்பொறியின் துறைத்தலைவர் பேராசிரியர் மணிமொழி அவர்கள் Computer Network என்ற பாடம் எடுக்க வந்தார். பேரா.மணிமொழி அவர்கள் கோபிசெட்டிபாளையத்திலுள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் 1990 - 1992 இடைப்பட்ட ஏதோ ஒரு ஆண்டுகளில் MCA பட்ட மேற்படிப்பு படித்தவர். கோவையிலுள்ள ஜி.ஆர்.தாமோதரன் கலை அறிவியல் கல்லூரியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர். NGP கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்ட 1997 ம் ஆண்டுகளில் துறைத்தலைவராக பணியில் சேர்ந்துள்ளார். 


2003 ம் ஆண்டு ஆகஸ்ட் 27 ன் தேதி முதல்நாள் என்னுடைய முதுகலை கணிப்பொறி வகுப்புக்கு வந்தபோது, தன்னைப் பற்றிய விவரங்களை கூறினார். அவர் கூறிய விவரங்களைத்தான் நான் மேலே குறிப்பிட்டது. 
பேரா.மணிமொழி அவர்கள் பெரும்பாலும் காலை வேளையிலேயே எங்கள் வகுப்பில் பாடம் நடத்திவிடுவார். ஒரு மணிநேர வகுப்பில் வாரம் இருமுறை 20 நிமிடங்கள், வகுப்பிலுள்ள ஏதேனும் ஐந்தாறு மாணவர்களை பொதுவான விஷயங்கள் பேசச் சொல்லுவார். பாடப் பகுதியிலிருந்து ஒவ்வொரு மாணவருக்கும் Seminar கொடுப்பார். இந்த மாதிரியான தருணங்களில்தான் என்னுடைய வகுப்பில் பொதுவான விசயங்களை பேசவும், பாடங்களை வகுப்பில் நடத்தவும் கற்றுக் கொண்டேன். 

பேராசிரியர் அவர்கள் நிறுத்தி நிதானமாக எளிமையான ஆங்கிலத்தில் பேசும்போது, நாமும் நன்றாக ஆங்கில மொழியில் பேசவேண்டும் என்ற 
ஆவலை உருவாக்கினார். அடிக்கடி கல்லூரியில் உள்ள நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், மாத இதழ்களைப் படிப்பது, குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. இதே போல் நானும் அடிக்கடி நூலகங்களுக்குச் சென்று தினசரி மற்றும் வார, மாத இதழ்களையும், ஏதேனும் புத்தங்கள் படிப்பதையும் பழக்கப்படுத்திக் கொண்டேன். பேரா.மணிமொழி அவர்கள் பல நேரங்களில் என்னை நூலகத்தில் பார்ப்பார். ஒரு நாள் செந்தில்குமார் என்று என்னை அழைத்து, பரவாயில்லை செந்தில்குமார், அடிக்கடி நூலகம் வந்து படிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னுடன் யாரேனும் இரண்டு, மூன்று பேரை நிரந்தரமாக அழைத்து வந்து பழக்கப்படுத்து என்று கூறினார். 

இளங்கலை வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சில பேருக்கு துறைத்தலைவர் மணிமொழி அவர்களின் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பிடிக்காது. ஏதோ சித்தம் கேட்டுப் போனது போல் புலம்பிய வண்ணம் இருப்பார்கள். அடிக்கடி மாணவர்கள் கல்லூரிக்கு விடுமுறை எடுத்தால் வகுப்பறைக்குச் செல்ல அனுமதிக்கமாட்டார். பெற்றோர்களை கல்லூரிக்கு அழைத்து வரச் சொல்லுவார். இந்த மாதிரியான நடைமுறைகளால்தான் கல்லூரியிலேயே கணிப்பொறித்துறைக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்தது. கல்லூரியிலுள்ள எந்த மாணவர்களுக்கும், பேராசிரியர் மணிமொழி அவர்களைத் தெரியாமல் இருக்காது. எனக்கு கல்லூரியில் பாடம் கற்றுக் கொடுத்த பேராசிரியர்களில், பேரா.மணிமொழி அவர்களிடமிருந்து வாழ்க்கையில் எக்கணத்திலும் சோற்றுக்கே வழியில்லாவிட்டாலும் சுயமரியாதையை மட்டும் இழந்து வாழக்கூடாது, கம்பீரமான மனிதனாக மகத்தான காரியங்களை செய்யும் போது எத்தனை இமாலயத் தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து, செங்குத்தான மலைமீது ஏறப் பழகிக் கொள்ளவேண்டும் என்ற மகத்தான விசயங்களைக்  கற்றுக்கொண்டேன்..

No comments:

Post a Comment