Tuesday, May 13, 2014

முகநூலில் திமுக தலைவர் கலைஞர்


Kalaignar89 என்ற அவருடைய அதிகாரப்பூர்வ முகநூலில் மேலே உள்ள புகைப்படத்தை பிரசுரம் செய்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் அவர்களையும், பேராசிரியர் அன்பழகன் அவர்களையும் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதற்கு முன்பு ஒரு அற்புதமான ஓவியம் வரைந்த புகைப்படம் பிரசுரம் ஆகியிருந்தது. அதுவும் மிக அழகாக இருந்தது. கலைஞர் அவர்களுடைய கோபாலபுர இல்லத்தில், அவர் அமர்ந்துள்ள பின்புறம் புத்தகம் உள்ள அலமாரி உள்ளது. இதைப் பார்க்கும் நமக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிப்பது போல் உள்ளது. எல்லாமே அழகுதான்..!! 


1972 ல் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது மதுவிலக்கை நீக்கி, அரசாங்க வருமானத்திற்காக மதுக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஒயின்ஷாப் நடத்துகிறவர்கள் அனைவரும் கட்சியின் மாவட்டச் செயலாளராக, கட்சியின் நிர்வாகியாக அங்கம் வகித்தார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் மதுபானக் கடைகள் பல்கிப் பெருகி இலட்சக்கணக்கான குடும்பங்களை அரக்கனைப் போல் அழித்து வருகிறது.
தற்போதைய முதல்வர் அவர்களும் மேலும், மேலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை டாஸ்மாக் கடைகளை மொய்க்கிறது. இதை காணும்போது ஜீரணிக்க முடியவில்லை. உலகத்தின் எட்டாவது அதிசயம் ஆனாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.இப்படியாக மதுபானக் கடைகள் பல்கிப் பெருகுவதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் 1972 ம் ஆண்டே வித்திட்டார்கள். இதற்கு நாம் அவருக்கு எப்படி நன்றிக்கடன் செய்வது என்றே தெரியவில்லை..!!

தன்னுடைய வாழ்நாளில் பல சிரஞ்சீவி காவியங்களைப் படைத்திருக்கிறார். சங்கத்தமிழ், குறளோவியம், ரோமாபுரி பாண்டியன் என்று பல பல காவியங்கள். தமிழ் மொழிக்கு கலைஞர் அவர்கள் செய்திட்ட பங்கு அளப்பரியது. நெஞ்சுக்கு நீதி என்ற ஒப்பற்ற தன் வரலாறு நூலைப் போன்று எந்த ஒரு கழகத் தலைவரும் படைத்தது கிடையாது. தமிழக அரசியல் வரலாற்றை நுனி விரலில் வைத்திருக்கும் தலைவன்..!!

www.KalaignarKarunanidhi.Com என்ற இணையதளத்தில் ஓடும் கலைஞரைப்பற்றிய வீடியோ காணொளி பரவசப்படுத்திகிறது. அத்தனையும் 1977 ம் ஆண்டோடு முடிந்து போனது. பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்ற 1977 லிருந்து 1987 ஆண்டு தான் மரணம் அடையும் வரைக்கும் ஆட்சிக் கட்டிலில் அமரவே முடியவில்லை, கலைஞர் அவர்களால்..! எங்கே போயிற்று அந்த முத்தமிழுக்கே உண்டான ராஜகம்பீரம்..! தனக்குப் பிறந்த புதல்வர்கள் அந்தக் கம்பீரத்தை குலைத்தார்களா..! இல்லை இல்லை..! திமுக விலிருந்து 1992 ம் ஆண்டுகளில் கலிங்கத்துச் சிங்கம் வைகோ அவர்கள் கொலைப்பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டபோது, கழகம் தன்னுடைய கம்பீரத்தை இழந்தது. இப்போது இருக்கும் புதல்வர்களால் அந்தக் கம்பீரத்தை மீட்டுக் கொண்டு வரமுடியவில்லை. எல்லாமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்த பூமியில் வாழும் வரைதான். அதன்பிறகு அரசியலில் ஒரு அகதிகளாகத்தான் திரிவார்கள்..!!

No comments:

Post a Comment