Friday, May 23, 2014

ஆங்கிலத்துறை பேராசிரியர் Dr.சந்திரசேகரன் அவர்கள்

பேரா.சந்திரசேகரன் அவர்கள் நான் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவம் படிக்கும்போது ஆங்கிலப் பாடம் நடத்த வந்தார்.
 15.09.1984 ஆண்டு எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் பேராசிரியர் பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டவர். எனக்கு ஒரே ஒரு பாடம் நடத்தினாலும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஒரு மணி நேர வகுப்பில் பாடம் சம்பந்தமான விசயங்களை நடத்திவிட்டு, உலக இலக்கியங்கள் குறித்து பேசுவார். இலக்கிய உலகில் சகாப்தம் படைத்தவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து உரையாற்றுவார். ஒவ்வொரு வகுப்பிலும் புதிய புதிய மனிதர்களைப் பற்றி குறைந்த நிமிடங்களே பேசினாலும், இப்போதுள்ள சமூக வலைதளமான ட்விட்டரில் நம்முடைய எண்ணங்களை எழுதவதைப்போல் நினைவுகள் தோன்றுகிறது. அன்றாடம் மாணவர்கள் அனைவரும் தினசரி நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வகுப்பிலும் அன்றைய முக்கியச் செய்திகளை குறிப்பிடுவார். மாணவர்கள் யாரேனும் ஒருவரை அழைத்து, அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளச் சொல்லுவார். சிலர் பேசுவார்கள், சிலர் அமைதியாக இருப்பார்கள்.

இப்படியாக இருக்கும்பட்சத்தில் ஏதாவது ஒரு வகுப்பிலாவது என்னுடைய சில நினைவுகளைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். அதே போல ஒரு வகுப்பில் பேராசியர் என்னை பேச அழைத்தபோது, மிகுந்த ஆவல் கொண்டிருந்த எனக்கு தீடீரென அத்தனை மாணவர்கள் முன்னாள் பேச வேண்டுமே என்று நினைத்து படபடப்பு வந்துவிட்டது. வகுப்பில் என்னுடைய மாணவர்கள், வேதியியல் துறை மாணவர்கள் அனைவரையும் சேர்த்து 80 பேர். இறைவா..!! எப்படியாவது நாம் பேச வேண்டும் என்று நினைத்ததை பேசி விட வேண்டும் என்று தன்முனைப்போடு எழுந்து முன்னாள் சென்றேன். இரண்டே நிமிடங்கள்தான் பேசினேன்..!!

என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத விஷயங்கள் நிறைய இருந்தாலும் ஒண்ணு ரெண்டு விசயங்களை சொல்ல விரும்புறேன். முன்னாடி என்னோட மாணவ நண்பர்கள் தலையை குனிஞ்சிகிட்டு சிரிக்கிறாங்க. நான் அவங்களை பார்க்காம பேசணும் நினைச்சு ஒரு பக்கமாகவே பார்த்துகிட்டு பேச ஆரம்பிச்சேன். நான் என்னோட தாயோட கருவறையில இருந்து பிறக்கும் போது, எனக்கு நினைவு இல்லை. ஆனா என்னோட பிறந்த நாளை புனிதமான நாளாகவே நினைக்கிறேன். பிறந்த நாளை பெருசா நான் கொண்டாடுறது இல்லை. சில மகத்தான மனிதர்களோட பிறந்தநாள் அன்னைக்கு அவங்களை மனசுக்குள்ள நினைச்சு, உங்களோட ஆன்மிக பலத்தை கொஞ்சமாவது எனக்கும் கொடுங்க. இந்த பொல்லாத உலகத்துல நிலைகுலைஞ்சு கீழ விழுந்துடாம வாழுறதுக்கு உண்டான மனபலத்தை கொடுங்கண்னு கேட்டுக்குவேன். நான் ஆரம்பபள்ளி படிச்ச பள்ளிக்கூடத்துல இருந்து ஐந்தாம் வகுப்பு முடிச்சிட்டு, ஆறாம் வகுப்பு கோவில்பட்டியில உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில சேரும்போது, என்னோட மனசு திக்கு திக்குன்னு இருந்துச்சு. அந்த நாளை மறக்கவே முடியாது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்தப்ப, என்னோட குடும்ப சூழ்நிலை காரணமா அந்தப்  பள்ளியிலேயே
11,12 ம் வகுப்பு படிக்க முடியலேன்னு நினைச்சு, என்னோட அப்பாவோட சைக்கிள்ள ஊருக்கு போய்கிட்டு இருக்கும்போது கண்ணீர் விட்டு அழுத நாளை என்னால மறக்க முடியாது. இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு பேசிகிட்டு இருக்கேனே, இந்த நாளையும் என்னால வாழ்க்கையில மறக்க முடியாது. இந்தக் கல்லூரியில படிப்பு முடிச்சிட்டு, கடைசி நாளு கனத்த இதயத்தோட போவேனே..! அந்த நாளை நினைச்சாலே இப்பவே கண்ணீர் வருது. அதுக்குப் பிறகு எந்த ஒரு நாளுமே வாழ்க்கையில பொன்னான நாளாகத்தான் இருக்கும். ஏன்னா, நாம வாழ்க்கையில இழப்புகளை சந்திச்சே பக்குவப்பட்டுருவோம். இந்த நேரத்துல சந்திரசேகரன் சாருக்கு நன்றிகளை சொல்லிக்கிறேன். எல்லா மாணவர்களும் கைதட்டுறாங்க. பேராசிரியர் Very Good, Execellent செந்தில்குமாருன்னு சொல்லி முதுகுல தட்டுனாரு. அப்புறமா நான் போயி என்னோட இருக்கையில உட்கார்ந்துட்டேன். நான் பேசுனதுக்கு அப்புறமா, வகுப்புல ஆழ்ந்த அமைதி இருந்துச்சு. நான் வகுப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா, எப்படி என்னோட நண்பர்களை சமாளிக்கப் போறோமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நண்பர்கள் என்கிட்டே எப்படி செந்தில்குமாரு மனசுல இருக்குறத கொட்டு கொட்டுனு கொட்டிட்டே. ஆனா உன்னோட ஆளப்பத்தி சொல்லாம, ஏமாத்திட்டியே மாப்பிளை. ரொம்ப எதிர்பாத்தோம் நீ சொல்லுவேன்னு. என்ன மாப்பிளை சொல்றீங்க, எனக்கு அப்படி யாருமே இல்லை. அப்படியே இருந்தாலும் நான் சின்சியரா விரும்புற ஆளு வைகோ ஒருத்தர்தான். அவரத்தான் ஒவ்வொரு நிமிசமும் என்னால மறக்க முடியல. இந்தக் காதல் எங்க போயி முடியப்போகுதுன்னு எனக்கே தெரியலை. ஆனா நல்ல விதமாத்தான் முடியனுமுன்னு இறைவனை தினமும் வேண்டிக்கிறேன்..! என்ன மாப்பிள்ளே நாங்க ஒண்ணு கேட்டா, நீ என்னென்னமோ பேசுற. எங்களுக்கு எல்லாம் தெரியும். எப்பவெல்லாம் உன்னோட ஆளை பாலோ பண்ணி போறேன்னு. சரி உங்களுக்குத்தான் தெரிஞ்சிருச்சுல்லே மாப்ளே. அவங்கதான் என்னோட ஆளுன்னு வச்சுக்காங்க. இப்படி இருந்த என்னோட மாணவ நண்பர்களோட அன்பான கேலி கிண்டல்களை இன்னைக்கு நினைச்சிப் பார்த்தாலும், மனசு அப்படியே ஜில்லுன்னு ஆயிருது. இறைவா..!! நான் படிச்ச மூணு வருசமும் காதல், அன்பு, நண்பர்களோட நட்பு, போர்க்களமான இலக்கியம், வரலாறு, சமூக படிப்புன்னு இளங்கலை படிப்புக் கல்லூரி வாழ்க்கையில சுனாமி அலை மாதிரி வந்துட்டு போயிருச்சு..!!

பேரா.சந்திரசேகரன் அவர்கள் ஆங்கில இலக்கியத் துறையில் பணியில் சேர்ந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருப்பார். எத்தனையோ மாணவர்கள்கிடம் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பார். 03.04.14 அன்று நான் கல்லூரிக்கு சென்றபோது, ஆங்கிலத் துறைக்குச் சென்று பேராசியரை பார்த்து பேசி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டேன். மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறினார். மறுநாள் 04.04.14 அன்று என்னுடைய கணிப்பொறித்துறை சில்வர் ஜுபிலி விழாவில் கலந்து கொண்டேன். இந்த நாளில் முன்னாள் மாணவர்களின் சார்பில் பத்து நிமிடங்கள் என்னுடைய கல்லூரி வாழ்க்கையைப் பற்றி உரையாற்றிய பிறகு, மிகுந்த ஆன்மிக பலத்தை உணர்ந்தேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கை யைப் பற்றி பேசும்போது, இந்தக் கல்லூரிதான் எனக்கு வாழ்வின் இமாலய லட்சியங்களைக் கற்றுக் கொடுத்தது என்று குறிப்பிட்டபோது, கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பியது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன், எப்படி அந்த மாபெரும் கற்றோர்கள் நிறைந்த அவையில், கணிப்பொறித் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் வெளிப்படையாக நம்மைப் பற்றி பேச முடிந்தது என்று...!! அதற்கு   பேரா.சந்திரசேகரன் அவர்களின் ஆளுமையும் ஒரு காரணமாக இருந்திருக் -குமோ என்று நினைத்துக் கொண்டேன்...

No comments:

Post a Comment