Tuesday, June 3, 2014

பூவரசம் பீப்பீ - தேசிய விருதுக்குத் தகுதியான திரைப்படம்


தற்போது வெளியாகி உள்ள பூவரசம் பீப்பீ தமிழ் திரைப்படம் சினிமா உலகில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. இத்திரைப்படத்தின் பெண் இயக்குநர் ஹலீதா சமீம் அவர்களுக்கு கோடிக்கணக்கான நன்றிகளை சொல்லியாக வேண்டும். தமிழ் சினிமா உலகை நினைத்து பெருமையாக உள்ளது. நேற்றுதான் இத்திரைப்படத்தை நான் எனது ஆருயிர் அண்ணன் ஆட்டோ சந்திரன் அவர்களுடன் திரையரங்கில் பார்த்தேன். சந்திரன் அவர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டே இருக்குபோது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்று கூறினார்! இதற்கு முன்பு மெரினா திரைப்படம் சந்திரன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக இருந்தது என்று கூறினார். அவர் சிறைச்சாலை அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய லாக்கப் என்ற புத்தகத்தில் வரும் கதைகள்  மெரினா திரைப்படத்தில் இருந்தது!!


பூவரசம் பீப்பீ படத்தில் பள்ளி சிறுவர்களைக் கொண்டு இப்படியும் உணர்வுப்பூர்வமாக காவியம் படைக்க முடியுமா..? என்ற அதிசயத்தை திரையரங்கில் காண முடிந்தது. இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தன்னுடைய குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து காலத்தால் அழியாத காவியம் படைத்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் விஜய் மில்டன் அவர்கள், சிறுவர்களை கதாநாயகர்களாகக் கொண்டு கோலிசோடா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் புதிய அத்தியாயம் படைத்தார். இவர்களை நினைத்து பெருமையாக இருந்தது. காம இச்சைகளை கிளறி விடாமல் திரைப்படம் பார்ப்பவர்களின் உள்ளத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தினார் இயக்குநர் விஜய் மில்டன். எனது மானசீகமான இயக்குநர் மணிரத்னம் அவர்கள் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகளை நடிக்க வைத்து சகாப்தம் படைத்தார். அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அஞ்சலி திரைப்படம் பார்த்துவிட்டு பல நாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். உணர்வுப்பூர்வமான காவியமாக என்னுடைய சிறு வயதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் பசங்க திரைப்படத்தில் தன்னுடைய வசனத்திற்காக தேசிய விருது பெற்றார். பாண்டிராஜ் அவர்கள் இந்து பத்திரிகையின் தமிழ் நாளிதழில் தன்னுடைய சிறுவயது வாழ்க்கை அனுபவங்களை எழுதுகிறார். கிராமத்தின் உயிர்ப்புள்ள வாழ்க்கையை காவியமாக எழுத, கிராமத்தில் பிறந்த மண்ணின் மைந்தர்களால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். சமீபத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் சீடரான ராம் அவர்களின் இயக்கத்தில் உருவான தங்கமீன்கள் திரைப்படம் தேசிய விருது பெற்றது. தமிழ் சினிமா ஆபசங்களில் சிக்கி சீரழிந்து விடவில்லை என்பதை இவர்கள் நிரூபித்தார்கள்.

ஹலீதா சமீம் 
அந்த வரிசையில் ஹலீதா சமீம் தற்போது பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் சகாப்தம் படைத்து விட்டார். திரைப்படம் முடியும்போது கண்களில் கண்ணீர்த் துளிகள் தெறித்து நம்பிக்கை ஊற்றை பெருகச் செய்தது. இந்திய தேசத்தை இந்த நூற்றாண்டிலேயே உலக அளவில் தலை நிமிரச் செய்ய முடியும் என்பதை இயக்குநர் நிரூபித்திருக்கிறார். இதைப் போன்ற ஒரு திரைக்களத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. தமிழ் திரை உலகில் அற்புதமான முயற்சி. ஆனால் நம் தமிழ்நாட்டின்  சில திரைப்பட ரசிகர்களுக்கு காமரசம் சொட்டும் பாடல்களும், ஆபாசக் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இல்லையென்றால், திரையரங்கின் பக்கமே வரமாட்டோம் என்று சபதம் எடுத்தவர்கள்!! இவர்களை எல்லாம் மீறி இந்த திரைப்படம் இமாலய வெற்றியடையும்..!!


No comments:

Post a Comment