Saturday, June 28, 2014

மக்கள் சமூக முன்னேற்றக் குழு - நெருப்பூர் - தர்மபுரி மாவட்டம் !!

நெருப்பூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் உரையாற்றிய வேளையில்...


சாத்தூரிலுள்ள எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியில் இளங்கலை கணிப்பொறித் துறையில் படிக்கும்போதிருந்தே எனக்கு சமூக விசயங்களில் அதிக ஈடுபாடு உண்டு. நமது தமிழக மாநிலத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. நிறைய சமூக அமைப்புகள் இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் நாமும் இளைஞர்களைக் கொண்டு ஏதேனும் ஒரு சமூக அமைப்பை உருவாக்கி, சமூக மாற்றத்திற்காக நம்முடைய பங்களிப்பையும் செய்ய வேண்டும். தனித்துவமான சமூக சிந்தனையுள்ள நூறு இளைஞர்கள் இருந்தால் போதுமானது. மகத்தான காரியங்களை செயல்படுத்தலாம். சுவாமி.விவேகானந்தரின் கொள்கைகளை நமது வாழ்விலும் செயல்படுத்தினோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கும் என்றெல்லாம் மன ஓட்டத்தில் கற்பனை செய்துகொள்வேன். ஆனால் செயல்முறை என்று வந்தபோது அவ்வளவு எளிதான காரியமாக எனக்கு அமையவில்லை. சுற்றியுள்ள மனிதர்களின் கடுமையான ஏளனம், கேலி, கிண்டலுக்கு உள்ளானேன். கோவை மாநகரில் முதுகலை கணிப்பொறி படிப்பில் என்.ஜி.பி. கல்லூரியில் 2003 ம் ஆண்டு சேர்ந்த பிறகு, இளைஞர்களை நோக்கிய எனது நீண்ட பயணத்தை ஆரம்பித்தேன். நான் பணியாற்றும் கல்லூரியிலுள்ள மாணவர்களைத் தவிர்த்து, மற்ற கல்லூரி மாணவர்களிடம் சமூக விசயங்கள், சமூக மாற்றம் குறித்து பேச ஆரம்பித்தேன். 2003 ம் ஆண்டிலிருந்து 2007 ம் ஆண்டு வரைக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்து பேசினேன்.
இளைஞர்களிடமிருந்து நிறைய அனுபவங்களை, வாழ்வியலை கற்றுக் கொண்டேன். பொதுக்கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது சந்தித்த இளைஞர்களி   டம் நிறைய பேசுவேன். ஆண்டவன் என்னைக் கைவிடவில்லை. ஒரு நாள் சித்ரா பேருந்து நிலையத்திலிருந்து பேரூரிலுள்ள பட்டீஸ்வரர் கோயிலுக்கு செல்லும்போது, இரண்டாம் என்னுடைய பேருந்தில் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஒருவரிடம் தற்செயலாக சமூக விசயங்கள் குறித்து பேசிக்கொண்டு வந்தேன். அந்த இளைஞர் எனது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர். பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் சமூக விசயங்களில் செயல்படுகிறார்கள். அவர்களை உங்களை சந்தித்து பேச ஒரு நாள் அழைத்து வருகிறேன் என்று கூறி, என்னுடைய அலைபேசி என்னை வாங்கிக் கொண்டார். இவருடைய பெயர் எனக்கு சரியாக நினைவு இல்லை. அந்த மாணவர்களை சந்திக்க வைத்து விட்டு இவர் போய்விட்டார். அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. இவரை சந்தித்த ஒரு வாரம் கழித்து ஜீவா, கோவிந்தன் என்ற இரு மாணவர்கள் என்னை சித்ரா பகுதியில் சந்திக்க வந்தார்கள். 2008 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் தேதியன்று சந்தித்தபோது, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டு நிறைய பேசினோம். சமூக அமைப்பை உருவாக்குவது என்று முடிவு செய்தோம். இவர்களுக்கு மூத்த மாணவராக, ஆலோசனை வழங்குபவராக தருமபுரி மாவட்டம் பண்ணவாடியன்காடு என்ற ஊரைச் சேர்ந்த ராஜா என்பவர் இருந்தார். இவர் 2006 ம் ஆண்டு முதுகலை கணிதப் பாடத்தை பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர். ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதுவதற்காக சென்னை மாநகரில் படித்துக் கொண்டிருந்தார். நானும் ராஜாவும் ஒரு நாள் சந்தித்து நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம். மக்கள் சமூக முன்னேற்றக் குழு என்ற அமைப்பை உருவாக்குவது என்று முடிவானது. 2008 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பிறந்த ஊரான நெருப்பூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மக்கள் சமூக முன்னேற்றக் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. ராஜா, இவருடைய சகோதரர் கோவிந்தன் மற்றும் நண்பர்கள் படித்த பள்ளியாகும். நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு மணி நேரம் உரையாற்றினேன். அப்போதைய நாட்களில் என்னுடைய மனம் கொந்தளிப்புடன் இருந்த காலகட்டங்கள்..!! இந்த அமைப்பு வெற்றிகரமாக உருவாகிய பிறகுதான்
மனம் சாந்தமடைந்தது. விண்ணகமே அதிரும் அளவுக்கு என்னுடைய சக்தி முழுவதையும் திரட்டி உரையாற்றினேன். என்னுடைய வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாக உணர்ந்தேன். என்னால் இந்த அளவிற்கு சிறப்பாக பேச முடியுமா என்று வியந்து போனேன். இறைவன் என்னுடைய ஆன்மாவில் அமர்ந்துகொண்டு உரையாற்ற வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அதேபோல் அன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்தது. எதிர்வரும் காலங்களில் பாரத இந்தியாவில் நாம் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறோம் என்று விழாவில் ஆணித்தர மாகக் கூறினேன். என் கண்களில் ஒரு பெருமிதம் தெரிந்தது. அது போன்ற உணர்ச்சிகரமான தருணத்தை அப்போதுதான் உணர்ந்தேன். மக்கள் சமூக முன்னேற்றக் குழுவின் சமூக மாற்றத்தை நோக்கிய வரலாற்றுப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

மாணவர் ராஜா அவர்கள் தற்போது இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநகரில் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறார். தேர்வில் வெற்றிபெற என் இதயப் பூர்வமான வாழ்த்துக்களை இந்த வலைப்பூவின் மூலம் உரித்தாக்குகிறேன்..!!

மாணவர் ராஜா அவர்கள் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை சுயசரிதை நூலை எனக்கு பரிசளித்தார்..!!


2008 ம் ஆண்டு இந்த விழாவில் கலந்துகொள்ளச் சென்ற தருணம் புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியது. என்னுடன் அன்னூருக்கு அருகிலுள்ள புளியம் பட்டி ஊரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர் வந்தார். பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கோவையிலிருந்து பேருந்து ஏறி ஈரோடு பஸ் நிலையத்தில் இறங்கினோம். பின்னர் அங்கிருந்து மேட்டூருக்குச் செல்ல பேருந்தில் ஏறினோம். அதிகாலை வேளையில் மேட்டூரிலிருந்து கொளத்தூருக்குப்  போய் சேர்ந்தோம். அங்கிருந்து முக்கால் மணி நேர பயணத்தில் காவிரி ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கிருந்து பண்ணவாடியான் காடு ஊருக்குச் செல்ல பரிசலில் ஏறி காவிரி ஆற்றைக் கடந்தோம். பரிசலில் பயணம் செய்கையில் காவிரி ஆற்றின் எழில் கொஞ்சும் அழகைக் கண்டு பிரமித்துப் போனேன்..!!

காவிரி தென்பண்ணை பாலாறு 
தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி 
என மேவிய ஆறு பல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு..!! 
என்று  மகாகவி பாரதி பாடியதன் பெருமிதத்தை அப்போதுதான் உணர்ந்தேன். பரிசலிலிருந்து கீழே இறங்கி மினி பேருந்தில் ஏறி, நண்பர் கோவிந்தன் அவர்களின் ஊரான பண்ணவாடியான் காட்டிற்கு போய் சேர்ந்தோம். அந்த ஊரின் இயற்கைச் சூழலே ரம்மியமாக இருந்தது. மலையும் மலை சார்ந்த மக்கள் வாழும் கிராமம். அதிகாலைப் பொழுதில் நீராடிவிட்டு, காலை உணவு சாப்பிட்டுவிட்டு விழாவில் கலந்து கொள்ள கிளம்பிச் சென்றோம். சிறப்பாக உரை நிகழ்த்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டேன்.
உரை நிகழ்த்த குறிப்புகளோ, செய்திகளையோ தயார் செய்துகொண்டு போகவில்லை. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம், தமிழகத்திற்கு இந்த அமைப்பின் மூலம் செய்ய வேண்டிய மகத்தான பணிகள் குறித்து பேசினேன். 2003 ம் ஆண்டுகளில் ஜூனியர் விகடனில் எழுத்தாளர் பாலகிஷன் அவர்கள், சந்தனக்காட்டு சிறுத்தை என்ற தொடரை எழுதினார். 2004 ம் ஆண்டு விகடன் நிறுவனத்தார் புத்தகமாக வெளியிட்டார்கள். வீரப்பனின் வாழ்க்கை வரலாறு பிரமிப்பு ஊட்டுவதாக இருந்தது. வீரப்பன் மகத்தான் வீரராக வாழ்ந்தாலும், தமிழகம், கர்நாடகம், கேரளா மாநில அரசுக்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக முத்திரை குத்தப்பட்டார். அந்த களங்கத்தை பண்ணவாடியான் காடு, நெருப்பூர் கிராமத்து இளைஞர்கள் போக்க வேண்டும். மகத்தான வீரம் விளைந்த மண்ணில் பிறந்த நீங்கள் பாரத தேசத்தை புனரமைப்பதில் மகத்தான பங்கை செலுத்த வேண்டும் என்று என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பேசினேன்..!! விழா முடிந்து பண்ணவாடி யான்காடு ஊருக்கு அருகிலுள்ள சிவாலயத் தலமான முத்தையன் கோயிலு க்கு நானும், நண்பர் கோவிந்தன் அவர்களும் சென்றோம். தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற திருத்தலம்.  பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் கோயிலைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகியுள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சுனையில் பருவ மழையே பொய்த்துவிட்டாலும் தண்ணீர் வற்றாமல் ஊற்றெடுத்து வந்து கொண்டே இருக்குமாம். சந்தனக் காட்டு சிறுத்தை வீரப்பன் அடிக்கடி வந்து வணங்கும் முத்தையன் கோயில் என்று கிராமத்து மக்கள் சொன்னார்கள். நான் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்ட வேளையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திலுள்ள சிவபுராணத்தை மனமுருகப் பாடினேன். நண்பர் கோவிந்தன் நான் பாடியதைக் கேட்டு பரவசமாகிவிட்டார். இப்படியாக என் வயது ஒத்த இளைஞர்கள் எவரும் சிவபுராணத்தை பாடியதைக் கேட்ட
தில்லை என்று சொன்னார். புதுமையாக இருந்தது என்று கூறி பாராட்டுகளை தெரிவித்தார்..!!
(கீழே உள்ள புகைப்படம்) - இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் - ராஜா அவர்களின் சகோதரர் கோவிந்தன். எனது மானசீகமான நண்பர்..!! சந்தனக்காட்டு சிறுத்தை வீரப்பன் உலாவிய, வீரத்தோடு வாழ்ந்த கிராமத்தி லிருந்து வரலாற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். உலகின் வரலாற்றையே இந்த நூற்றாண்டில் நாம் மாற்றி அமைப்போம் என்று அடிக்கடி கோவிந்தன் அவர்களிடம் கூறுவேன்..!! அதை மெய்பிக்கும் விதமாக இன்றைய தினத்தில் சுமார் 1000 உறுப்பினர்களுடன் தருமபுரி, சேலம், விழுப்புரம், சென்னை என்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்..!!

No comments:

Post a Comment