Saturday, July 12, 2014

ஆருயிர் நண்பர் சிவக்குமார் அவர்களுடன் கோத்தகிரி மலைவாசஸ்தலத்திற்கு சென்ற வேளையில்!! 02.06.14..!!


ஆருயிர் நண்பர் சிவக்குமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலிருந்து வந்திருந்தார். ஒரு நாள் ஓய்வு எடுத்தவர் மறுநாள் கோத்தகிரிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். திடீரென்று அதிகாலை அலைபேசியில் அழைத்து தன்னுடன் கோத்தகிரி வருமாறு என்னை அழைத்தார். வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போதெல் லாம் தன்னுடன் வருமாறு அழைப்பார். பொருட்செலவு நம்மால் ஆகக் கூடாதே என்பதற்காக மறுத்துவிடுவேன். ஆனால் இந்தியாவில் எங்கு செல்லவேண்டும் என்று அழைத்தாலும், விடுமுறை எடுத்தாவது உடன் செல்வேன். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடந்த 12 வருடங்களாக நட்போடு பழகி வருபவர். அப்படித்தான் இன்றைய தினம் கல்லூரிக்கு விடுமுறை எடுத்துவிட்டு கோத்தகிரிக்கு உடன் சென்றேன். குன்னூர், ஊட்டி சாலையை விட கோத்தகிரி சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாதது. எழில் கொஞ்சும் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்ளும். இந்த எழில் கொஞ்சும் மலை வாசஸ்தளத்தில்தான் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சி அடையும். அதனாலேயே என்னை அறியாமல் இந்த கோத்தகிரி யின் அழகு மிக்க இயற்கையின் வனப்பை நோக்கி கட்டுக்கடங்காமல் என் மனது செல்லும். பேருந்தில் ஏறிச்சென்று ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மணிக்கணக்கில் சாலையில் நடந்து சென்றிருக்கிறேன். ஆள் அரவரமற்ற மலைச்சாரலில், என் பெயரை ஏழு கண்டங்களுக்கும் கேட்கும்படி உரக்கச் சொல்லியிருக்கிறேன். பேசும் எதிரொலி மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்போது, உலகையே வென்றது போல் ஒரு பிரமிப்பு ஏற்படும். அதற்காகவே பலமுறை பல மைல் தூரம் கோத்தகிரியின் சாலையில் நடந்து சென்றிருக்கிறேன். இந்த மலைப் பிரதேசத்தில் குடியிருப்பை ஏற்படுத்திய வெள்ளைக்கார அதிகாரி சல்லீவன் அவர்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது..!!


இந்த வீடு கோத்தகிரியிலிருந்து கொடநாடு செல்லும் பாதையில் உள்ளது. ஐந்து லட்சம் பெறுமானமுள்ள பிராஜக்டை இன்றுதான் முடித்திருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் மும்பையில் குடும்பத்துடன் வசிக்கிறார். பூச்செடிகளு க்கும், புல்தரை தோட்டத்திற்கும் தண்ணீர் பாய்ச்சும் மெஷினரி முறையை அமைத்திருந்தார் சிவக்குமார் அவர்கள். வீட்டின் உரிமையாளருடன் அரை மணிநேரம் பேசினேன். மலைவாசஸ்தளங்களைப் பற்றிய விசயங்களை பகிர்ந்து கொண்டோம். தலையில் தொப்பி அணிந்திருப்பவர்தான் வீட்டின் உரிமையாளர். வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இரவு உணவாக இவருடைய வீட்டில் கோழிக்குழம்புடன் உணவு சாப்பிட்டோம். சில்லென்று குளிர் காற்று வீசிய மாலை வேளையில் எழில் கொஞ்சும் சாலை ஓரங்களில் உள்ள இயற்கை அழகை புகைப்படம் பிடித்தேன். இயற்கை அழகை புகைப்படம் பிடிக்கும்போதுதான் மனதிற்கு எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. போலித்தனம் இல்லாத இறைவனின் படைப்பல்லவா..!! அந்த இறைவன் ஏனோ..!! மனிதர்களை மட்டும் போலித்தனம் உள்ள குணத்தோடு படைத்து விட்டான் என்று எண்ணிப்பார்க்கையில் வியப்பாக உள்ளது..!! நமச்சிவாய வாழ்க..!!

காரில் பயணிக்கையில் எடுத்த புகைப்படம். கோயிலில் இறைவனை வழிபட்டுவிட்டு தலையில் முலைப்பாரியை பெண்கள் எடுத்துச் செல்கிறார்கள்..!!

இப்படியொரு வனப்பு வாய்ந்த மரத்தை அடுத்த ஐம்பது வருடங்களில் பார்க்கமுடியுமா..? என்பது சந்தேகமாக உள்ளது. இயற்கையை மட்டும் மனிதன் பேணிக்காத்தால், இந்த பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இருக்காது..!!

No comments:

Post a Comment