Wednesday, July 16, 2014

பேராசிரியர் பரதன் அவர்களை சந்தித்த வேளையில் - 13.07.14


புகைப்படங்களை நாம் நன்றாக எடுப்போம். ஆனால் நம்மை நன்றாக புகைப்படம் எடுக்க சரியான நபர்கள் கிடைக்க மாட்டார்கள். அதுபோல் மேற்கண்ட புகைப்படம் மனதிற்கு திருப்தி இல்லாமலேயே அமைந்துவிட்டது. சரியான முறையில் தயராவதற்குள் புகைப்படம் எடுத்துவிட்டார் நண்பர் ஒருவர். புகைப்படத்தை கணிப்பொறியில் பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டேன். இப்படியாக அற்புதமான தருணங்களின் புகைப்படங்கள் சரியாக எடுக்கப்படாமல், நிறைய புகைப்படங்களை பிரசுரம் செய்யவில்லை..

பேராசிரியர் பரதன் அவர்கள் நான் என்.ஜி.பி.கல்லூரியில் 2003 - 2005 ம் ஆண்டுகளில் முதுகலை கணிப்பொறிப் படிப்பு படிக்கும்போது, கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். இளங்கலை வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுப்பார். சில சமயங்களில் மட்டுமே இவரிடம் பேசியது உண்டு. பிற துறை மாணவர்கள் பரதன் அவர்களை சினிமா நடிகர்போல் இருக்கிறார் என்று பேசிக்கொள்வார்கள். நான் 2005 ம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பாண்டிச் சேரிக்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். புதுவையில் ஐந்து மாதங்கள் பணியாற்றினேன். அதன்பிறகு கோவை மாநகருக்கு வந்தேன். அப்போதுதான் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேரா.பரதன் அவர்களை சந்தித்தேன். கல்லூரியிலிருந்து உதவிப் பேராசிரியர் பணியை ராஜினமா செய்துவிட்டேன் என்று கூறினார். சென்னை மாநகருக்குச் சென்று Software Testing Course படித்துவிட்டு, மென்பொருள்துறையில் வேலைக்குச் சேர உள்ளதாகக் கூறினார். ஏன்? செந்தில்குமார் நீயும் Software Testing Course படிக்கலாமே என்று கேட்டார். எனக்கு மென்பொருள்துறையில் பணியாற்ற விருப்பமி ல்லை என்று கூறினேன். கல்லூரியில் பேராசிரியர் பணியில்தான் சேரலாம் என்று நினைக்கிறேன். சமூக விசயங்களில் தீவிர ஈடுபாடு இருப்பதால், மேடைப் பேச்சுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளது என்று கூறினேன். இதயப்பூர்வமாக வாழ்த்துக்களைக் கூறினார்!! இப்படியாக பரதன் அவர்களிடம் வித்தியாசமாக பேசுவது நான்தான் முதலாவது ஆள் என்று கூறினார். அதன்பிறகு சென்னை மாநகருக்கு வேலைக்குச் சென்றார். அதன்பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகருக்கு வேலைக்குச் சென்றார். கடந்த ஏழு வருடங்களாக அங்கே பணி புரிந்து கொண்டிருக்கிறார். தற்போது விடுமுறைக்கு வந்தபோது தற்செயலாக சந்தித்துக் கொண்டோம். கடந்த மூன்று வருடங்களாக முகநூலில் நிறைய பேசிக்கொள்வோம்..!!

இன்றைய தினம் கொடிசியா அரங்கில் கவிஞர் வைரமுத்து அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு, வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் மணிவிழா நடைபெற்றது. காலையிலிருந்தே விழாவில் கலந்து கொண்டேன். இந்த விழாவில் எனது இதயம் கவர்ந்த இந்திய திரை உலகின் இயக்குநர் மணிரத்னம் அவர்களும் கலந்து கொள்ள வந்திருந்தார். ஜென்னி கிளப்பில் தங்கியிருந்தார். சிறப்பு அனுமதி பெற்று மாலைவேளையில் மலர்கொத்துடன் நேரில் பார்க்கச் சென்றேன். நினைத்தபோதெல்லாம் அவருடன் புகைப்படம் எடுக்க முடியாது. அவருடன் சென்னை மாநகரில் வைத்த எடுத்த புகைப்படமே எனது வாழ்வின் சிறந்த புகைப்படம்! மலர்கொத்தைக் கொடுத்துவிட்டு சுமார் ஐந்து நிமிடம் மட்டும் பேசினேன். 2014 ம் ஆண்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மதநல்லிணக்க விருதை, எனது கிராமம் பெற்ற செய்தியின் கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். எப்போதும் அதிகம் பேசாதவர் வாழ்த்துக்களைக் கூறினார். கிராமத்து வலைப்பூவின் கட்டுரைகளை வாசித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன். இதுபோன்ற மதநல்லிணக்க விருது பெற்ற செய்தியைக் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறினார். என்னுடைய அடுத்த திரைப்படம் சுதந்திரம் பெற்றபோது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களை மையமாகக் கொண்டது. உங்களுடைய பங்களிப்பு தேவைப்பட் டால் நிச்சயம் நான் அழைப்பேன் என்று கூறியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு எழுந்துவிட்டேன். இலக்கிய மேடைகளில் சிறப்புப் பேச்சாளராக இருப்பதால், சென்னை மாநகரில் கழக நண்பர் ஒருவருடன் மணிரத்னம் அவர்களின் இல்லத்திற்கு ஒரு முறை சென்றுள்ளேன். அப்போது அவருடன் பேச முடிய வில்லை. இவருடைய படத்தில் நடிப்பவர்கள் கூட மணிரத்னம் அவர்களுடன் அதிகமாக, தேவையில்லாமல் பேச முடியாது. முக்கியமாக அவ்வளவு எளிதில் புகைப்படமும் எடுக்க முடியாது. இவருடன் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் கூட நினைத்தவுடன் பேசவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. அந்த அளவிற்கு எட்டாக் கனியாக இருக்கும் எனது சகாப்தத்துடன் புகைப்படம் எடுத்ததைப் பார்த்துவிட்டு, கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நண்பர்கள், முகம் தெரியாத நண்பர்களிடமிரு ந்து ஆயிரக்கணக்கான வாழ்த்துகளைப் பெற்றுவிட்டேன்..!! 

/** நான் பத்திரிகையாளராகவும் பணியாற்றுவதால் விழா மேடைக்கு முன் சென்று புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்திருந்தார்கள். ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்ததால் ரசிகர்களின் தள்ளுமுள்ளு இருக்கவில்லை. விழா முடிந்தபிறகு இயக்குநர் மணிரத்னம் அவர்களுடனே சென்றேன். காரில் ஏறிய பிறகு என்னைப் பார்த்து போய்வருகிறேன் என்று சொல்லியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. இறைவா! உன்னுடைய திருவிளையாடல்களில் இதுவோம் ஒன்றோ என்று நினைத்துக் கொண்டேன். அவருடைய உதவி இயக்குநர் என்னுடைய அலைபேசி என்னை வாங்கிக் கொண்டார். கூப்பிட்டவுடன் ஓடோடி சென்னை மாநகருக்கு வரவேண்டும் என்று கூறினார். நான் ஏற்கனவே அவரிடம் பணியாற்றியவன் என்று சொல்லிய போது, மன்னித்துவிடுங்கள்! நான் உங்களுக்கு ஜூனியர் என்று அவரே சொல்லிக்கொண்டார். மணிரத்னம் அவர்களிடம் நான் அங்கீகாரம் பெறுவதற்கு, எனது குளக்கட்டாக்குறிச்சி கிராமத்திற்குத்தான் கோடிக்கணக் கான நன்றிகளைச் சொல்லியாக வேண்டும்..!!


பத்திரிகையாளனாக முதன் முதலில் இந்தியத் திரை உலகின் மாபெரும் சகாப்தங்களை (பாரதிராஜா, மணிரத்னம், கே.பாலச்சந்தர்) அருகில் நின்று புகைப்படம் எடுத்தேன். இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்களின் காலைத் தொட்டு வணங்கி, அவரிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டேன். அப்போது பாரதிராஜா அவர்களிடம் எனது கிராமம் விருது பெற்ற செய்தியை மணிரத்னம் அவர்களே சொல்லினார். என்னை அழைத்து பாரதிராஜா கட்டியணைத்துக் கொண்டு வாழ்த்துக்களைச் சொல்லியபோது, அனைவரும் என்னையே வியப்புடன் பார்த்தார்கள். எதற்காக பாரதிராஜா அவர்கள் கட்டிப்பிடித்து பேசினார் என்று நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கேட்டபொழுது, திக்குமுக்காடிப் போனேன். இன்றைய தினம் இப்படியா!! அதிசயக்கத்தக்க வகையில் அமையும் என்று இறைவனிடம் சொல்லிக் கொண்டேன். அன்றைய தினத்தின் அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை..!!வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் கவிஞர்.வைரமுத்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டபோது..!!


இந்தியத் திரை உலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் அவர்கள் சுமார் பத்து நிமிடங்கள் உரையாற்றினார்..!!


மணிரத்னம் அவர்களை சந்தித்துவிட்டு வந்தபோதுதான் கொடிசியா அரங்கிற்கு செல்லும் பாதையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இலியட் இதிகாசம் குறித்து பேசிய வீடியோ குருந்தகடையும், நம்மாழ்வார் அவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றிய "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்" என்ற இரண்டு குறுந்தகடுகளை வாங்கியிருந்தேன். அப்போது தான் பேரா.பரதன் அவர்களை சந்தித்தேன். இருபது நிமிடங்கள் அனுபவங் களை பேசிக்கொண்டோம். பின்பு குடும்பத்தாருடன் நான்கு சக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றார். மாலை வேளையில்தான் சினிமா இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் மணி விழாவைக் காணச் சென்றேன்..

No comments:

Post a Comment