Thursday, July 10, 2014

ஆருயிர் எழுத்தாளர் நண்பர் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!!


நேற்றைய (10.07.14) ஹிந்து தமிழ் நாளிதழில் 9 ம் பக்கத்தில், ஆருயிர் எழுத்தாளர் நண்பர் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் சிறப்புக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஒரு ஆசிரியர் - தாயின் அனுபவம்: என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி என்ற தலைப்பில் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தி இருந்தார். மேலே உள்ள புகைப்படம் 23.03.14 அன்று, கோவை மாநகரில் பூ.சா.கோ.கல்லூரியில் நடைபெற்ற, வெண்ணிலா அவர்கள் உருவாக்கிய டிராட்ஸ்கி மருது அவர்களின் தொகுப்பு நூலை வெளியிட்டபோது நடைபெற்ற நிகழ்ச்சியன்று எடுக்கப்பட்டது. அன்றைய தினம் வெண்ணிலா அவர்களின் புதல்வி படிப்பு குறித்து கேட்டேன். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அர்பணிப்பு உணர்வோடு படிக்கிறாள். மாநில அளவில் நல்ல மதிப்பெண்களை எடுத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பத்தாம் வகுப்பை முடித்ததும், நான் பணியாற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியிலேயே பதினொன்றாம் வகுப்பில் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். உங்களுடைய முடிவை நினைத்து மிகவும் சந்தோசமாக உள்ளது. நான் பத்தாம் வகுப்பு வரை கோவில்பட்டியி லுள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக நாடார் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பைத் தொடர முடியவில்லை. அதனால் கழுகுமலையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பில் சேர்ந்தபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நாடார் மேல்நிலைப் பள்ளியைப் போன்று அரசு மேல்நிலைப் பள்ளியிலும், என்னுடைய ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்தினார்கள். ஆனால் பொறுப்புணர்வோடு படிக்காமல், நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியாமல் போய்விட்டது. பண்ணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கடைசி மூன்று மாதங்கள் கடுமையாக படித்து 757 மதிப்பெண்கள் எடுத்தது, மிகப்பெரிய சாதனையாக பள்ளியில் பேசப்பட்டது. என்னுடன் படித்த ஆருயிர் நண்பன் கழுகுமலை ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரன், என்னை விட ஒரு மதிப்பெண்கள் (758) அதிகமாகப் பெற்று சாதனை புரிந்தான். இப்போது ராஜேஸ்வரன் காவல்துறையில் பணிபுரிகி றான். அப்போது எனது கணிதப் பேராசிரியர் செல்வராஜ் அவர்கள், அவருடைய வீட்டிற்கு இரண்டு பேரையும் அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்தார். இரண்டு பேரும் எங்கே தேர்வில் பெயிலாகி விடுவோமோ என்று பயந்து கொண்டே இருந்ததாக ஆசிரியர் செல்வராஜ் கூறினார். வெறும் மூன்று மாதத்தில் படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற நீங்கள், நன்றாக படித்திருந்தால் மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கலாமே என்று கடிந்து கொண்டார். அப்போது நான் எதிர்வரும் காலங்களில் மாநில அளவில் ஏதேனும் ஒரு துறையில் சாதித்துத் காட்டுகி றேன் என்று கூறினேன். மிகவும் சந்தோசம் என்று கூறினார். இப்படியாக என்னுடைய பள்ளி வயது அனுபவங் களை கவிஞர் வெண்ணிலா அவர்களி டம் பகிர்ந்து கொண்டேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெண்ணிலா அவர்கள், வந்தவாசிப் போர் என்ற வரலாற்றுத் தொகுப்பு நூலை வெளியிட்டபோது, அவருடைய குழுவில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங் கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். வேண்டுகோளுக்கினங்க என்னை சேர்த்துக்கொண்டார். என்னுடைய எழுத்துப் பணிகளுக்கு தக்க ஆலோசனை தருபவராக இன்று வரைக்கும் இருக்கிறார். என்னுடைய கிராமம் இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத் தில் மத நல்லிணக்க விருது பெற்ற செய்தியை சொன்னபோது வியப்பில் ஆழ்ந்தார். இந்த விருது இலக்கியத்திற் காக கொடுக்கப்படும் சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, தாகூர் இலக்கிய விருது போன்றவற்றை விட மிகப்பெரிய அங்கீகாரம்!! மேலே குறிப்பிட்ட விருதுகள் தனி நபருக்குக் கொடுக்கப்படுபவை. கிராமத்திற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் நூற்றாண்டுகளையும் கடந்து பேசப்படும் என்று மனம் திறந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். நேற்று நான் வெண்ணிலா அவர்களை அலைபேசியில் அழைத்து, பத்திரிகையில் வெளியான கட்டுரை க்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொண் டேன்..!! சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட தங்களுடைய குழந்தைகளை மிகுந்த பொருட்செலவு செய்து, ஆங்கில மோகத்தில் உயர் தரமான பள்ளியில் சேர்க்கும்போது, வெண்ணிலா அவர்கள் 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்ற தன்னுடைய புதல்வியை அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்திருப்பதன் மூலம் மிகப்பெரிய யுகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்..!! கவிஞர்   அ.வெண்ணிலா அவர்களுக்கு இந்த வலைப்பூவின் மூலம் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்..!!

No comments:

Post a Comment