Wednesday, October 29, 2014

நாயகன் - 1

மணிரத்னம் அவர்களின் முதல் படமான 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட மொழிப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை.


மணிரத்னம் அவர்கள் அக்னி நட்சத்திரம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையில் ஈடுபட்டுள்ளபோது, தயாரிப்பாளர் 'முக்தா' ஸ்ரீனிவாசன் சந்திக்க வருகிறார்.
வீட்டில் 'கிழக்கு எந்தப் பக்கம்' என்று கேட்கிறார். கிழக்குத் திசையில் மணி ரத்னம் அவர்களை நிற்கவைத்து ஒரு காகித உரையைக் கொடுக்கிறார். முன் பணம்தான் கொடுக்கிறார் என்று மணிரத்னம் அவர்கள் நினைக்கையில்,காகித உறையினுள் இந்திப் படமான 'பக்லா கஹின் கா' வீடியோ கேசட் இருப்பதாகச் சொல்கிறார். இந்தப் படத்தில் மனநலம் குன்றிய ஷம்பி கபூர் ஒரு காப்பகத்தில் இருப்பார்.

கமல்ஹாசன் இந்தப் படத்தை பார்க்கச் சொன்னதாக மணிரத்னமிடம் முக்தா கூறுகிறார். ரீமேக் படங்கள் இயக்குவதில் விருப்பமில்லை என்று கூறுகிறார். 
கேசட்டைவிடக் காசோலை அதிக மனநிறைவு அளிக்கக்கூடியதாக இருந்திரு க்கும் என்று இயக்குநர் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். 'முக்தா ஸ்ரீனிவாசன்' சென்ற பிறகு இந்திப் படத்தை பார்க்கிறார். 'பக்லா கஹின் கா' படத்தை ரீமேக்காக இயக்குவதில் துளிகூட விருப்பமில்லாமல் இருக்கிறார்.

மணிரத்னம் அவர்களின் சூப்பர்ஹிட் படமான மெளனராகத்திற்குப் பிறகு அக்னி நட்சத்திரத்தை எடுக்கவே விரும்புகிறார். இளமையான வணிகப் படமாக எடுத்து, மெளனராகம் வியாபாரம் ஆகாத இடங்களில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

'முக்தா' ஸ்ரீனிவாசன் அடுத்த நாள் திரும்பிவந்தபோது, ரீமேக் படங்களுக்கு நான் சரியான தேர்வு இல்லை என்பதைச் சொல்கிறார். என்னைவிடச் சிறந்த,
வேலைகளை சீக்கிரம் முடிக்கக்கூடிய, இயக்குநரைத் தேர்வு செய்வதே சரி என்கிறார். 'முக்தா' ஸ்ரீநிவாசன் பதற்றமடையாமல் தன்னுடைய காரிலேயே 
ஏ.வி.எம்.ஸ்டுடியோவுக்கு வரும்படி அழைத்துச் செல்கிறார். ஸ்டுடியோவில் 
கமல்ஹாசன் படப்பிடிப்பில் இருப்பதாகவும், தன்னிடம் சொன்னதை அப்படி யே கமலிடம் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.அப்போதுதான் மணிரத்னம் அவர்களுக்கு சில விஷயம் புரிகிறது.

எப்படி அவருக்கு ரீமேக் படத்தை இயக்க விருப்பமில்லையோ, அதேபோல், இயக்குநர் ஆவதை முக்தாவும் விரும்பவில்லை என்று. 

கமல்ஹாசனை உணவு இடைவேளையின்போது சந்தித்து, 'பக்லா கஹின் கா' என் பாணித் திரைப்படம் அல்ல, என்னால் இயக்க முடியாது என்று கூறுகிறார். அப்படியா னால், எந்த வகைப்படத்தை இயக்க விரும்புகிறீர்கள்? என்று கமல், மணிரத்னமிடம் கேட்கிறார். 

அந்த வீடியோ கேசட், ஓர் உரையாடலைத் தொடங்கு வதற்காகத்தான் கொடுக் -கப்பட்டது என்று மணிரத்னம் நினைத்துக் கொள்கிறார்.


படம் இயக்க முடியாது என்று சொல்லிவிட்டு வரலாம் என்று நினைத்தவரு க்கு, அதிர்ஷ்டவசமாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைக்கிறது. கமல், மணிரத்னமிடம் என்னை வைத்து எந்த வகையான படத்தை எடுக்கலாம் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்கிறார்.

மணிரத்னம் அவர்கள், இரண்டு வகையான படங்கள் சாத்தியம். ஒன்று, நகரத்தை மையப்படுத்திய நேர்த்தியான ஆக்ஸன் படம். தமிழ் சினிமாவில் அதிகம் வராத டர்டிஹாரி, பெவர்லி ஹில் ஹாப் அல்லது பாண்ட் படங்கள் போன்ற ஆக்ஸன் படங்களை எடுக்கலாம் என்கிறார். இன்றளவும் அது போன்ற படங்களை யாரும் எடுக்கவில்லை என்கிறார். நான் நேர்த்தியான ஆக்ஸன் படங்களின் ரசிகன். 

இரண்டாவது, பம்பாயிலுள்ள தாராவியில் தமிழர்கள் தெய்வமாக நினைத்து வணங்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று இயக்குநர் கமல்ஹாசனிடம் கூறுகிறார். இந்தியத் திரை உலகின் ஆணி வேரையே நாயகன் திரைப்படம் அசைக்கப்போகிறது என்பது, அப்போது இருவருக்குமே தெரியாது...

தொடரும்...

இயக்குநர் மணிரத்னம் அவர்கள் பரத்வாஜ் ரங்கனுடனான ஆங்கில உரையாடல் தொகுப்பிலிருந்து...

No comments:

Post a Comment