Saturday, October 4, 2014

நினைவுகள் - 12

கல்லூரி கால வாழ்க்கை ஒவ்வொருத்தரோட மனசுலயும் பசுமையான நினைவுகளை ஏற்படுத்தும். இளங்கலை கல்லூரி வகுப்பை இந்தக் கல்லூரியில படிக்கும்போது பசுமையான நினைவுகளை விட, துன்பமான நினைவுகளதான் அதிகமா சுமந்தேன். கடவுள் எனக்கு கொடுத்த வரம்னுகூட சொல்லலாம். நான் இந்தக் கல்லூரியில மூணு வருஷம் படிச்சு முடிக்கும் போது, சரியான இலக்கு இல்லாத ஒரு மாணவனா இருந்தேன். சொல்லப் போனா மனதளவுல ஒரு வீழ்த்தப்பட்ட மனிதனா உணர்ந்தேன். மனிதனோட வாழ்க்கையில சில தவறுகளை செய்யுவோம். ஆனா, நாம செய்த சின்ன சின்ன தவறுகளையே நம்ம கூடயே இருந்த மனிதர்கள், பல வருசங்கள் கழிச்சும் ஞாபகப்படுத்தி பேசும்போது, எந்த அளவுக்கு துன்பமான சிந்தனைக்கு உள்ளாவோமுன்னு, இந்தக் கல்லூரியில இருக்குற சில மனிதர்கள்கிட்ட இருந்து தெரிஞ்சு கிட்டேன்.

இப்படியெல்லாம் நெருடல்களுக்கு உள்ளனாதுனால, இந்தக் கல்லூரியில என்னை ஒரு பெருமைமிகு மனிதனா நிலைநாட்டனுமுன்னு ரொம்ப காலமா தயார்படுத்திகிட்டு இருந்தேன். எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர் கள்தான் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. என்னோட பேராசிரியர் அருணேஷ் சார் சரியான தருணத்துல என்னை கல்லூரியில அடையாளம் காட்டுனாரு. 04.04.14 அன்னைக்கு கல்லூரிக்கு வந்தப்ப, என்னோட நண்பர்கள் மத்தவங்ககிட்ட அறிமுகப்படுத்திவச்ச விதமே என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிச்சு. வாழ்க்கையில என்னைய ஒரு வீழ்த்தப்பட்ட மனிதனாத்தான் என்னோட நண்பர்கள் பேசிகிட்டு இருந்தாங்க. ஜீரணிக்க முடியலை. ஆனா, நான் படிச்ச படிப்புக்கும் சமூகத்துல தேர்ந்தெடுத்த பாதையும் அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரிஞ்சது எல்லாம், கம்பியூட்டர், பன்னாட்டு நிறுவனங்கள்ல மென்பொருள்துறை வல்லுநர் ஆகுறது, லட்சம் லட்சமா பணம் சம்பாதிக்குறது. இதைத்தாண்டியும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கையும் சமூகக் கடமையும் இருக்குதுன்னு தெரிஞ்சாலும், அந்த பாதையில எல்லாராலுமே பயணிக்க முடியாது. ஏன்னா, அந்த பாதை முட்கள் நிறைந்த பாதை. நானு அந்தப் பாதையில நடந்து இமாலய வெற்றிய டைஞ்சு காமிச்சாதான், இந்த கரடுமுரடான பாதை ஆய்வு செய்யப்படும். அது வரைக்குமே வேடிக்கையான ஒரு நடைபாதையாத்தான் இருக்கும்.

04.04.14 ந் தேதி கணிப்பொறித் துறையோட சில்வர் ஜுபிலி விழாவுல, வாழ்க்கையில நான் தேர்ந்தெடுத்திருந்த பாதையைப் பத்தி, உணர்ச்சிப் பிழம்பா பேசுனதுக்கு அப்புறமா, என்னைப் பத்தின ஒரு பிம்பத்தையும், ஒரு நெருடலையும்  உடைச்செரிஞ்சேன். அதுக்குப் பிறகு என்னோட நண்பர்கள் கிட்ட பெரிய மாறுதலை பாத்தேன். அவங்களால நம்பவே முடியலை. கடந்த பண்ணிரெண்டு வருடங்களா நான் படிச்ச எஸ்.ஆர்.என்.எம் கல்லூரிக்கு வரும்போது ஒரு பெருமைமிகு மாணவனா வந்து போகணுமுன்னு தீர்மானமா இருந்தேன். இளங்கலை கணிப்பொறி படிப்பு படிச்ச கல்லூரி விழாவுல, மிகப்பெரிய மனிதர்கள் இருந்த அரங்கத்துல, நானு பேசுன ஏழு நிமிட பேச்சுல எல்லாமே மாறிப்போச்சு. நூற்றுக்கணக்கான என்னோட நண்பர்கள்கிட்ட இருந்து, இன்னைக்கு வரைக்கும் வாழ்த்துக்கள் வந்துகிட்டே இருக்குது. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர்கள் சக நண்பர்கள் கிட்ட பேசுற மாதிரி, என்னோட இன்னைக்கு வரைக்கும் பேசுறாங்க. இந்த ஒரு மகத்தான தருணத்துக்காகத்தான் காத்துகிட்டே இருந்தேன். அப்படி ஒரு இனிமையான தருணத்தை இறைவன் எனக்கு அமைச்சிக் கொடுத்தாரு.
நானு பொது வாழ்க்கையில நுழைஞ்சி அதற்கான அறிவை வளத்துகிட்டு, ஒரு மேடைப் பேச்சாளரா நூற்றுக்கணக்கான அரசியல் மேடைகள்ல கோவை மாநகருல பேசி இருக்கேன். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் முன்னாடி இலக்கியத்தையும் வரலாறையும், அரசியல் நிகழ்வுகளையும் பேசி இருக்குறேன். ஆனா, இந்தக் கல்லூரி விழாவுல பேசுனதுக்கு அப்புறமாதான் என்னைய ஒரு முழுமையான மனிதனா உணர்ந்தேன். கற்றோர்களும், மாபெரும் மனிதர்கள் இருக்குற இடத்துல பேசுனது முதல் தடைவையா இருந்துச்சு. என்னோட வாழ்க்கை லட்சியத்தை இந்தக் கல்லூரிதான் கத்துக் கொடுத்துச்சு. என்கிட்ட படிச்ச மாணவர்கள்கிட்ட இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிச்சு போய்கிட்டு இருக்கேன்னு,
எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த அருணேஷ் பேராசிரியர் சொன்னதுதான், என்னோட வாழ்க்கைப் பயணத்துல நான் கேட்ட மகத்தான வார்த்தைகள்.
அருணேஷ் சாரோட, பேராசிரியர் கிருஷ்ணவேணி, பேரா.சுப்ரமணியம் அவர்களோட மாணவனா, இந்தக் கல்லூரியோட ஐம்பதாவது ஆண்டு கணிப்பொறித் துறை விழாவுல, ஒரு பெருமைமிகு மனிதனா கலந்துகிட்டு, ஒரு மாபெரும் உரை நிகழ்த்துவேன்னு அபரிதமான நம்பிக்கை இருக்குது...

No comments:

Post a Comment