Monday, October 13, 2014

நினைவுகள் - 14

அழகர்ராஜ் சாரோட வகுப்பு நண்பர் பாலமுருகன் சாரு, கோவையில அரசு கலை அறிவியல் கல்லூரியில உதவிப் பேராசிரியரா வேலை செய்யுறாரு. 
சமீபத்துல ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் பாரதியார் பல்கலைக்கழகத்துல கணிப்பொறித் துறையில முனைவர் பட்டம் வாங்குனாரு. நானும் கோவை மாநகருல இருக்குற கல்லூரியில உதவி பேராசிரியரா பணியாற்றும்போது, சாரோட நட்பு உருவாகிச்சு. தன்னோட எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி, இளங்கலை வகுப்பு அனுபவங்களை என்கிட்ட நிறைய சொல்லியிருக்காரு. அவரு படிச்சப்ப பசங்க மட்டுமே படிச்சிருக்காங்க. நான் படிக்கும்போது இருபாலர் கல்வி முறை வந்துருச்சு. இந்த இருபாலர் கல்விமுறையில படிக்கிறதால பெண்கள்கிட்ட பேசும்போது இருக்குற கூச்ச சுபாவம் போயிரும். குறும்பு பண்ணி வகுப்புகள்ல பேராசிரியர்கள்கிட்ட திட்டு வாங்கும்போது கொஞ்ச கஷ்டமா இருக்கும். நாளாக நாளாக இதுவும் பழகிப் போயிரும். அழகர்ராஜ் சாரு என்னோட வகுப்புல பொண்ணுங்களைத்தான் அதிகமா திட்டுவாரு. அதனால சாரு திட்டும்போது அடக்கமுடியாத அளவுக்கு சிரிப்பு வரும். அதனால சிரிக்கும்போது கீழ குனிஞ்சுகிட்டு சிரிப்போம். சமீபத்துலதான் முகநூல்ல கூட படிச்ச பொண்ணு ஜெய பாரதியை பாத்தேன்முகநூல் நண்பர்கள் ஆயிட்டோம். முகநூல்ல நல்லா இருக்கியா செந்திகுமாருன்னு, நலம் விசாரிச்சாப்புலை. திருமணமாகி அரபு நாடான ஓமன் நாட்டுல இருக்குறாங்க. கல்லூரியில படிக்கும்போது நாகவள்ளி, ஜெயபாரதி, கிருஷ்ணவேணி பொண்ணுங்க ஏதாவது குறும்பு பண்ணி அழகர்ராஜ் சாரு கிட்ட திட்டு வாங்கிருவாங்க. எங்களுக்கே கஷ்டமா இருக்கும். சாரு உங்களை திட்டுனாலும் நாங்க ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டோமுன்னு சொல்லுவோம். ரொம்ப நன்றின்னு நிறைய தடவை சொல்லுவாங்க. மூன்றாம் ஆண்டு சுற்றுலா போனப்பதான் ரொம்ப சகஜமா பேசிகிட்டோம். மைசூருக்கு போனதுக்கு அப்புறம் இயற்கை அழகையும், பிரமாண்டமான மகாராஜா அரண்மனையையும், திப்பு சுல்தானோட ஸ்ரீரெங்க பட்டணத்துக் கோட்டையையும் பாத்து பிரமிச்சு போயிட்டோம்.


ஜெயபாரதி 
இரண்டாம் பருவத்துல அழகர்ராஜ் சாரு கணிப் -பொறித்துறை சுயநிதிப் பாடப் பிரிவுக்கு பாடம் எடுக்க போயிட்டாரு. அருணேஷ் சாரு 'C++ Language' பாடம் எடுக்க வந்தாரு. இரண்டாம் பருவத்துலதான் கணிப்பொறி ஆய்வுக் கூட தேர்வுமுறை வரும். C Language பாடமும் Digital Electronics ம் பாடமும் சேந்து வந்துச்சு. இந்த ரெண்டு தேர்வையும் எழுதுனதுக்கு பிறகுதான் உசுரே வந்துச்சு. பல்கலைக்கழக பாடத் தேர்வு எழுதுறது கூட கடினமாத் தெரியலை. இந்த செய்முறைத் தேர்வு மட்டுமே கடினமா இருந்துச்சு. இரண்டாம் வருடத்துல ரொம்ப ஈசியா இருந்துச்சு. விஜயாபுரி வெங்கடேஷ் செய்முறைத் தேர்வை முதல் ஆளா செஞ்சி முடிச்சிருவாப்புலை. நானு முடிக்கிறதுக்கு கடைசி மூணு மணி நேரமும் ஆயிரும். படிப்பு ஆர்வம் முழுக்க இலக்கியத்து லயும், வரலாற்று ஆய்வுகள்லயும் இருந்ததால கணிப் -பொறிப் பாடம் கடினமாவே இருந்துச்சு. 1999 ம் வருட முதல் பருவத்துல எங்களோட மாணவர்களு- க்கு பாடத்திட்டத்தை பல்கலைக்கழகத்துல மாத்தி, வெளி நாட்டுக்காரங்க எழுதுன புத்தகங்கள் பாடத்திட்டத்துல இருந்ததால, படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆயிரும். ஆங்கில அகராதியை பக்கத்துல வச்சிக்கிட்டு கடினமா படிச்சதால, இன்னைக்கு வரைக்குமே எந்த ஒரு கணிப்பொறி புத்தகத்தையும் எளிமையா புரிஞ்சிக்க முடியுது. ஒரு வருசத்துல அழகர்ராஜ் சாரு கல்லூரியில இருந்து வேலையை விட்டுட்டு போயிட்டாரு. அப்புறமா அமெரிக்காவுக்கு வேலைக்குப் போயிட்டதா சுப்பிரமணியன் சாரு சொன்னாரு. அந்த வருடங்கள்ல அமெரிக்காவுக்கு வேலைக்குப் போறதை பிரமிப்பா நாங்க பேசிகிட்டு இருப்போம். இன்னைக்கு அழகர்ராஜ் சாரு சென்னையில சொந்தமா மென்பொருள்துறை நிறுவனம் வச்சி நடத்திகிட்டு இருக்காரு. சாரோட நிறுவனத்துல சுமார் முப்பது பேருக்கு மேல வேலை செய்யுறாங்க. அமெரிக்கா நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மென்பொருள் உற்பத்தி செஞ்சி கொடுக்காரு. முகநூல்ல சாரைப் பிடிக்க முடியலை. ரொம்ப நாள் கழிச்சு முகநூல்ல பாத்தேன். ஆனா, புகைப்படம் எதுவுமே போடலை. முதலாமாண்டு படிக்கும்போது சாரோட கோவில்பட்டிக்கு போகும்போது தன்னோட கல்லூரிக் கால நினைவுகளை நிறைய பகிர்ந்துகிட்டாரு. இந்த கல்லூரி வலைப்பூவுல நானு எழுதியிருக்குற நினைவுகளை படிச்சிட்டு, ரொம்ப அற்புதமா எழுதியிருக்கேன்னு பாராட்டு னாரு. அழகர்ராஜ் சாரு சொன்னதுக்கு அப்புறமதான், அமெரிக்காவுல இருக்குற எஸ்.ஆர்.என். எம்.கல்லூரி முன்னாள் மாணவர்களெல்லாம் கல்லூரி வலைப்பூவோட வாசகர்களா இருக்காங்கன்னு தெரிஞ்சது. இந்த கல்லூரி வலைப்பூவுல நானு கடந்த ஒரு மாசமா எழுதலை. நிறைய பேரு எழுதச் சொல்லி மின்னஞ்சல் செய்தி அனுப்பிச்சி வச்சிருந்தாங்க. எஸ்.ஆர். என்.எம்.கல்லூரியோட வாழ்வியல் நினைவுகளை ஒரு மாணவரா, இந்த அளவுக்கு வெளிப்படையா யாருமே எழுதலேன்னு அமெரிக்காவுல இருந்து என்னோட சீனியர் மாணவர் ராஜ்குமார் அண்ணன் சொன்னதுக்கு பிறகு, என்னாலேயே நம்பவே முடியலை! இந்த அளவுக்கு நானு எழுதுவேன்னு. என்னோட வகுப்பு நண்பன் போத்திராஜ் மாப்பிளை அமெரிக்காவுல இருந்து அலைபேசியில கூப்புட்டு, ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிகிட்டே கல்லூரி கால ரொம்ப சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்களை எழுதுனதுக்கு நன்றி சொன்னாப்புலை...

No comments:

Post a Comment