Wednesday, October 1, 2014

நினைவுகள் - 13

நம்ம தினசரி வாழ்க்கையில புத்தகங்கள் படிக்கிறதே ஒரு இனிமையான அனுபவம். ஒவ்வொரு நல்ல புத்தகமும் நமக்கு நல்ல ஒரு ஆசானா இருந்து, வாழ்க்கையில வழி நடத்திக்கிட்டு வருது. என்னோட வாழ்க்கையில குறிப்பிட்ட சில மனிதர்களும், என்னோட பெற்றோர்களும், புத்தகங்களும் எனக்கு மேம்பட்ட வாழ்க்கையை கத்துக் கொடுத்துருக்கு. சின்ன வயசுல இருந்தே பள்ளிக்கூட பாடப் புத்தகத்தை தாண்டி, புத்தகங்களை வாசிக்ககூடிய பழக்கம் இருந்துச்சு. இந்த நல்ல பழக்கம் இன்னைக்கும் வரைக்கும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது. ஒவ்வொரு வருசமும் படிக்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.

2003 ம் வருஷம் வடமொழி எழுத்தாளர் ராகுல சாங்கிருதத்யனோட 'வால்கா விலிருந்து கங்கை நதி வரை' புத்தகம் படிச்சப்ப, மனசுல இருந்த குப்பைகள், குழப்பங்களை எல்லாம் அடிச்சிட்டு போயிருச்சு. அதுக்குப் பிறகு 2006 ம் வருஷம் 'நள்ளிரவில் சுதந்திரம்' என்ற புத்தகம் மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்திச்சி. இதை மாதிரி நிறைய புத்தகங்களை பட்டியலிட லாம். சமீபத்திய மலையாள எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் அசுரன், கவுரவன் என்ற தலைப்புல ராமாயாணம், மகாபாரதம் கதையோட மாறுபட்ட அம்சத்துல ஆங்கிலத்துல புதினம் எழுதி இருந்தாரு. ராவணன் சார்பாகவும், கவுரவர்கள் சார்பாகவும் கதையோட அம்சத்தை எழுதி இருக்காரு. ஆங்கிலத் துல இருந்து நாகலட்சுமி சண்முகம் தமிழுக்கு மொழி பெயர்த்து வெளியிட்டி ருந்தாங்க. கடந்த ரெண்டு மாதத்துக்கு முன்னாடி கோவை மாநகருல இருக்குற விஜயா பதிப்பகத்துல இந்த ரெண்டு புத்தகத்தையும் பாத்தேன். விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் ஐயாவும், புத்தகம் அற்புதமா இருக்குறதா சொன்னாரு. சரி! ஏதோ ஒரு மாயாஜாலம் புத்தகத்துல இருக்கும் போலன்னு நினைச்சுகிட்டு வந்துட்டேன். கோவை மாநகருல என்னோட எழுத்தாளர் நண்பர் ஆட்டோ சந்திரன் அண்ணன், கடந்த ஒரு மாசத்துக்கு முன்னாடி அலைபேசியில கூப்புட்டு நேரம் இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாரு. நானு ஒரு மாலை நேரமா அண்ணனோட வீட்டுக்குப் போனேன். எங்கிட்ட இப்ப ஒரு மிகப்பெரிய புதையல் கிடைச்சிருக்குன்னு சொன்னாரு. நானு வாழ்க்கையில இத்தனை நாளா எதை தேடிகிட்டு இருந்தேனோ, எந்த குறிக்கோளுக்காக வாழ்ந்துட்டு இருந்தேனோ, அதற்கான சரியான பாதை களை துல்லியமா காட்டக்கூடிய ஒரு புத்தகத்தை கடந்த ரெண்டு மாதங்களா படிச்சிகிட்டு இருந்தேன். இப்ப படிச்சி முடிச்சிட்டேன். மனசுல இருந்து ஒரு பாரம் இறங்குன மாதிரி இருக்குதுன்னு சொன்னாரு. அசுரன், கவுரவன் ரெண்டு புத்தகங்களையும் எனக்கு காமிச்சாரு. நானு திகைச்சிப் போயிட்டேன். இந்த ரெண்டு புத்தகங்கள்லயும் அந்த அளவுக்கு எழுதி இருக்கான்னு ஆச்சரியமா கேட்டேன். நானு இதுக்கு முன்னாடி எந்த ஒரு புத்தகத்தையும் பாத்து இப்படி பிரமிச்சது இல்லேன்னு அண்ணனே சொன்னதுக்கு பிறகு, எனக்கு ஆர்வம் அதிகமா ஆயிருச்சு. இந்த ரெண்டு புத்தகத்தை பத்தி ஒரு மணி நேரம் பேசுனாரு. அதுக்குப் பிறகு பல விசயங்களை பேசிட்டு, புத்தகங்களை படிக்க எடுத்துகிட்டு வந்துட்டேன்.

அன்னைக்கு இரவுப் பொழுது அசுரன் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிச் சேன். முன்னுரையே அற்புதமா இருந்துச்சு. முதல் நூறு பக்கம் படிச்சேன். தலையே சுத்தி திக்கு பிரமை பிடிச்சிருச்சு. என்னடா இது, ஆனந்த் நீலகண்டன் இப்படியெல்லாம் யோசிச்சு எழுதி இருக்காறேன்னு பிரமிச்சி போயிட்டேன்.
அசுரனான ராவணனோட கதையை படிச்சதுக்கு அப்புறம், வாழ்க்கையில நம்மளோட லட்சியங்களோடயும், கொள்கைளோடயும் பயணிக்கிறதுக்கு உண்டான சரியான இலக்கு கிடைச்சதை நினைச்சி, மனசு பூராவும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சிருச்சு. அப்படியே கற்பனையும், எண்ணங்களும் மனசுக்குள்ள பட்டாம் பூச்சி மாதிரி பறக்க ஆரம்பிச்சிருச்சு. அதுக்குப் பிறகு பத்தே நாள்ல கவுரவன் புத்தகத்தை படிச்சு முடிச்சேன். இறைவா! என்னோட அகத்துலயும், புறத்துலயும் எதை தேடுனேனோ, அதை என்னோட குருநாதர் சுவாமி விவேகானந்தர் கொடுத்தாரு. அதே மாதிரி என்னோட குருநாதரே, இந்த புத்தகத்தை எனக்காக எழுதி இருக்காருன்னு நினைக்கத் தோனிச்சி. மனசுல படிஞ்சி இருந்த இருள் மறைஞ்சி போயி, ஒரு அற்புதமான சிந்தனை யும், துடிப்பான இலக்கும் தெரிய ஆரம்பிச்சது. சந்திரன் அண்ணனை நேருல பாத்து, ரெண்டு புத்தகத்தை பத்தியும் ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம். தமிழர்களை எந்த அளவுக்கு வட இந்தியாவுல இருந்து வந்த ஆரியர்கள் அடிமை பண்ணி வச்சி இருந்தாங்கன்னு புதிய கோணத்துல தெரிய வந்துச்சு.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் மகாபாரதக் கதையை 'உப பாண்டவம்' என்ற தலைப்புல புத்தகமா எழுதி இருக்காரு. இதை படிச்சப்ப நல்ல ஒரு கதை அம்சமா இருந்துச்சு. எழுத்தாளர் ஜெயமோகன் வெண்முரசு என்ற தலைப்புல மகாபாரதக் கதையை எழுதிகிட்டு வர்றாரு. முதல் மூன்று பாகமா வெளியிட்டு நல்ல ஒரு வரவேற்பு கிடைச்சிருக்கு. ஆனா, இவங்க ரெண்டு பேருமே காலம் காலமா சொல்லப்பட்டு வர்ற கதையை புதிய கோணத்துல சொல்லலை. புதிய கோணத்துல ஆனந்த் நீலகண்டன் எழுதி இருக்குற ரெண்டு புத்தகமே இந்திய அளவுலயும், சர்வதேச அளவுலயும் கவனத்தை ஈர்த்துருக்கு. பரபரப்பா பேசப்படுது. சொல்லப்பட்ட விசயங்களும் ஆணித்தரமா இருக்குது. ஆயிரக்கணக்கான வருசங்களா இந்த ஆரியர்கள் பாரத தேசத்துல ராமாயாணமும், மாகாபாரதம் மட்டுமேதான் மாபெரும் இதிகாசங்கள்னு ஒரு மாயையை உண்டாக்கி இருக்காங்க. மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த ரெண்டு கதையையும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி, தமிழர்கள் கிட்ட இந்த அளவுக்கு பண்பாடான வரலாறு இல்லேன்னு மறைமுகமா தாக்கிட்டு வர்றாங்க. தமிழர்களும் ஆகா, ஓகோ ன்னு ராமாயாணத்தையும், மகாபாரதத்தையும் புகழ்ந்துகிட்டு வர்றாங்க. தங்களோட வாழ்க்கையில இந்தக் கதையில வரக்கூடிய கதைகளை பேசிக்கி டுறாங்க. இந்த மாயைகளுக்கு எதிரா ஒரு மிகப்பெரிய யுத்தம் செய்யலே ன்னா, தமிழர்களை பாரத தேசத்துல பலவீனமாக்கி அடிமைகளா செஞ்சிரு வாங்க போலத் தெரியுது. எந்த அளவுக்கு பொய்களையும், புனைக் கதைகளை யும் எழுதி, தமிழினத்தை சேர்ந்த ராவணனை ஒரு வீழ்த்தப்பட்ட மனிதனா, ஆயிரக்கணக்கான வருசங்களா, இந்த ஆரியர்கள் பாரத தேசத்துல கொண்டா டிகிட்டு வந்துருக்காங்க. தமிழர்களையும் ராவணனை ஒரு கொடுமைக்காரன நினைக்க வச்சிருக்காங்க. இந்த ஆரியர்களுக்கு எதிரா ஒரு மிகப்பெரிய கலாச்சார யுத்தத்தையும், எழுத்து யுத்தத்தையும் தொடங்கனுமுன்னு சந்திரன் அண்ணனும், நானும் சபதம் எடுத்துகிட்டோம். 'வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்' இந்த நூற்றாண்டுல ஒரு மிகப்பெரிய புரட்சியை பாரத தேசத்துல உண்டு பண்ணியிருக்குது.!! எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்..!!

No comments:

Post a Comment