Tuesday, October 14, 2014

முள்ளும் மலரும்

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த ரஜினிகாந்த் அவர்களின் முதல் படம் 1978 ம் ஆண்டில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படம். அப்போது எனது கிராமத்தில் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஊரிலுள்ள பஞ்சாயத்து தொலைக்காட்சியில் தூர்தர்சனில் ஒளிப்பரப்பான போது பார்த்தது. "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், எனக்கொரு கவலையில்லை" என்ற பாடல் இதயத்தில் பசுமையாக பதிந்தது. சிறுவயதில் அடிக்கடி இந்தப் பாடலை பாடுவேன். என்னுடைய தந்தையார் கூட நன்றாக பாடுகிறாயே என்று பாராட்டுவார். அப்போதைய சிறுவயதில் பாடல் மட்டுமே நன்றாக நினைவிருந்தது. படத்தின் கதை அம்சத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.


அதன்பிறகு 1998 ம் ஆண்டு கழுகுமலை பாலசுப்ரமணியா திரையரங்கில் பார்த்தபோது, கதையம்சம் இதயத்தையே உருக்கிவிட்டது. 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா', ஆசையக் காத்துல தூதுவிட்டு' போன்ற பாடல்களை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வீடியோ காணொளியில் பார்த்தேன். 


ரஜினிகாந்த, சரத்பாபு இரண்டு பேருமே முள்ளும் மலரும் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளர். இதற்கு முன்பு கேரள மாநிலத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாள ராகப் பணியாற்றி, சிறந்த ஒளிப்பதி வாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர். முள்ளும் மலரும் திரைப்படத்தில் சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்தியிருப் பார். பாடபட் ஜெயலக்ஷ்மி, நடிகை சோபா போன்றோரின் நடிப்பு பசுமை மாறாமல் இன்றும் நினைவில் உள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநராக மகேந்திரன் அவர்கள் "முள்ளும் மலரும்" படத்தில் முத்திரை பதித்தார். எழுத்தாளராகவும், கதை - வசனம் எழுதுபவராகவும் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு பணியாற்றியவர். அதன்பிறகு தான் இயக்கிய முதல் படத்திலேயே இந்திய அளவில் பேசப்பட்ட இயக்குநராக பரிணாமம் அடைந்தார். என்னுடைய இதயம் கவர்ந்த இயக்குநராகவும் மாறினார். 

நான் எப்போது உலகநாயகன் கமல்ஹாசனின் "சத்யா" படத்தை பார்த்தேனோ, அன்றிலிருந்து இன்றுவரைக்கும் கமலின் தீவிர ரசிகன். ஆனால் அதே அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் என் இதயத்தில் நீங்காத இடம்பிடித்தவர். பகட்டில்லாத தன்னுடைய எளிமையான, வசீகரிக்கும் நடிப்பின் மூலம் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர்...


முள்ளும் மலரும் படத்தில் ரயில்வேயில் வேலை செய்யும் பணியாளராக ரஜினிகாந்த் நடித்து இருப்பார். அண்ணன், தங்கை பாச உணர்வுகளை தன்னுடைய நடிப்பின் மூலம் மென்மையாக வெளிப்படுத்தியிருப்பார். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை - என்ற பாடலுக்கு ரஜினி ஆடும்போது, கிராமத்து மனிதருக்கே உண்டான பாவனைகள் இருக்கும். அப்போதைய கோடம்பாக்கத்து சினிமாவில் இருந்த கடுமையான போட்டிகளுக்கு இடையிலும், தன்னுடைய எளிமையான தாராளமான பல பேருக்கு உதவும் ஈகை குணத்தாலும், கடுமையான உழைப்பாலும் புகழ்பெற்றார்...

No comments:

Post a Comment