Monday, May 12, 2014

கோவை மாநகரின் தவப்புதல்வர் முத்துகுமார்

நான் கோவை மாநகருக்கு 2002 ம் ஆண்டு வேலை விசயமாக வந்தேன். சின்னியம்பாளையத்திலுள்ள எனது சித்தப்பா ஜெகநாதன் அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்து கொண்டு, பூ.சா.கோ.பொறியியல் கல்லூரியில் விடுதிக் காப்பாளராக வேலையில் சேருவதற்கு வந்திருந்தேன். பூ.சா.கோ.கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறி ஹோப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். எனக்குத் தெரியாது இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளிப் போனால்தான் பூ.சா.கோ.கல்லூரி பேருந்து நிறுத்தம் வரும் என்று.. அப்போது இந்தப் புகைப்படத்தில் உள்ள முத்துகுமார் என்ற இளைஞர் TVS XL இரு சக்கர வாகனத்தில் வந்தார். வண்டியை நிறுத்தி அண்ணே நானு பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரிக்குப் போகணும். உங்க வண்டியில வர்றேன். அங்க இறக்கி விட்டுறங்க என்றேன். சரி ஏறிக்கோங்க என்றார்.. எங்கிருந்து வருகிறீர்கள், பெயரென்ன, என்ன வேலை சம்பந்தமாக என்ற விவரங்களை முத்துகுமார் கேட்டார். நானும் சொன்னேன்.. நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?  என்று கேட்டபோது, ஒரு தொழிற்சாலையில் பணிபுரிவதாக சொன்னார். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பின்புறம் பெற்றோர்களுடன் வசிப்பதாக கூறினார். பிறகு கல்லூரி நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். நான் ரொம்ப நன்றி என்று கூறினேன். சரி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு எப்போதாவது அவினாசி சாலையில் செல்லும்போது பார்த்தால் வணக்கம் சொல்லிக்கொள்வோம்..!


நான் பூ.சா.கோ.கல்லூரியில் 6 மாதம் கழித்து சில கசப்பான அனுபவங்களால் வேலையை விட்டுவிட்டு, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படக் குழுவில் சேர்ந்து ஏழு மாத காலம் பணியாற்றினேன். அதன்பிறகு NGP கலை அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி முதுகலை பட்டம் பயின்றேன். பின்பு 2005 ம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று அங்கே ஒரு மருந்து தாயரிப்பு நிறுவனத்தில் ஒரு வருட காலம் பணியாற்றிவிட்டு, 2006 ம் ஆண்டில் மஹாராஜா கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்தேன். 2008 ம் ஆண்டு வாக்கில் நான் தங்கியுள்ள சித்ரா பகுதியில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை பார்க்கும்போது, இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறதே என்று வெகு நேரம் யோசனை செய்தேன். அதன் பிறகு கொஞ்சம் ஞாபகம் வந்தது. அது இந்த முத்துக்குமார்தான். இறைவா! இது என்ன சோதனை..! நான்றாகத்தானே இருந்தார். எப்படி இப்படி அலங்கோலமாக ஆனார் என்று திகைத்துப் போனேன். இவரிடம் பேச்சுக்கொடுத்தபோது ஒன்றுமே பேசவில்லை. தலையை தலையை ஆட்டி சிரிக்க மட்டுமே செய்தார். கடவுள் கொடுத்த பரிசா இது என்று கண்களில் லேசாக கண்ணீர் வந்தது. முதன் முதலில் வேலை விசயமாக இந்த கோவை மாநகருக்கு வந்தபோது, அற்புதமான ஒரு மனிதராக அறிமுகம் ஆனாரே.!! இப்போது இப்படி உருக்குலைந்து போனாரே என்று மனம் அங்கலாய்ப்பட்டது..!


அதன்பிறகு 01.03.14 அன்று இவரை அவினாசி சாலை கிருஷ்ணம்மாள் கல்லூரி முன்பு பார்த்தப்போது மேலும் மனம் கலங்கியது. இன்று பேச்சுக் கொடுத்தபோது கொஞ்சம் பேசினார். தற்போது 36 வயது ஆகிறது என்றார். நல்லா இருக்கீங்களா என்று ஐந்து ஆறு தடவை பேசினால் மட்டுமே பதில் வந்தது. சாப்பிட என்ன வேணும் என்று கேட்டபோது, பண்ணு வேணும் என்றார். நான் பண்ணும் தயிர் சாதமும் வாங்கிக் கொடுத்தபோது கண்களில் இருந்து ஒரே கண்ணீர் வருகிறது முத்துகுமாருக்கு. அவருடைய இல்லம் அருகாமையிலேயேதான் உள்ளது. என்னால் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு எப்போதெல்லாம் தென்படுகிறாரோ, அருகில் சென்று ஐந்து நிமிடம் பேசிவிட்டு, சாப்பிட ஏதாவது வாங்கிகொடுப்பேன். ஆனால் எப்படி இந்த மாதிரியான நிலைமை உருவானது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இறைவனுக்குத்தான் தெரியும்..!!

No comments:

Post a Comment