Sunday, November 2, 2014

நினைவுகள் - 17

கல்லூரியில சேர்ந்த முதல் வருசத்துல, மாணவர்கள் விடுதியில மூன்றாம் ஆண்டு மாணவர்களோட எனக்கு நெருக்கமான பழக்கம் உருவாச்சி. உதய சூரியன், கிருஷ்ணபிரகாஷ், ஜீவராஜ், ரவிக்குமார், சுதாகர், ஸ்ரீதர் அண்ணா ன்னு நெருங்கிப் பழகி, ரொம்ப பாசமாயிட்டேன். 

சீனியர் மாணவர்கள்கூட நெருங்கிப் பழகுனாலும், எல்லைமீறாம இருக்குற மாதிரி பாத்துகிட்டேன். இவங்ககூட பழக ஆரம்பிச்சதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான், மாணவர் விடுதியில பெரிய பிரளயமே நடந்துச்சு.

என்னோட கணிப்பொறித்துறையில படிச்ச இரண்டாமாண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை அளவுக்கதிகமா பகடிவதை செஞ்சிகிட்டு 
இருந்தாங்க. ராக்கிங் செய்யுறதை தமிழ்ல பகடிவதைன்னு சொல்லுவாங்க.

கல்லூரியில புதுசா சேந்தப்ப முதலாமாண்டு விடுதியில தங்கிப் படிக்கிற மாணவர்கள் யாருமே, கல்லூரி முடிஞ்ச பிறகு சீனியர் மாணவர்கள் ராக்கிங் 
செய்யுவாங்கன்னு பயந்துகிட்டு, சடையம்பட்டி முக்குரோட்டுக்கு போகமாட்- டோம். ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம்போல நானும், வணிகவியல் துறையில படிச்ச முகமது ஆசிக்கும் கோவில்பட்டிக்கு போறதுக்கு முக்கு ரோட்டுக்கு வந்தோம். ஆசிக்குக்கு சொந்த ஊரு மதுரை. கல்லூரியில வணிக வியல் துறையில பேராசிரியரா பணியாற்றுன, ஜபருல்லாஹான் சாரோட அக்கா பையன் முகமது ஆசிக். சாரு தினமும் அருப்புக்கோட்டை யில இருந்து வருவாரு. ஆசிக்கும், நானும் படிச்ச மூணு வருசமும் நெருங்கிய நண்பர்க -ளாக இருந்தோம்.

முக்கு ரோட்டுல நடந்து வந்துகிட்டு இருக்கும்போது, இரண்டாமாண்டு சீனியர் மாணவர்கள் எங்க ரெண்டு பேரையும் கூப்புட்டாங்க. நாங்களும் போனோம்.
பேரு என்ன, ஊரு என்ன, எந்த துறையில படிக்கிறீங்கன்னு? கேட்டாங்க. நாங்களும் பதில் சொன்னோம். சீனியர் மாணவர்கள்ல ஒருத்தரு புகை பிடிச்சிகிட்டு இருந்தாரு. என்னைய பாத்துக் கூப்புட்டு, சிகரெட் அடிப்பான்னு சொன்னாரு. எனக்கு சரியான கோபம் வந்துருச்சு!

வேற ஏதாவது செய்யச் சொல்லுங்க, செய்யுறேன். ஏதாவது கடையில வாங்கிக் கொடுக்குறேன். சிகரெட் குடிக்கச் சொன்னீங்கன்னா, நல்லா இருக்கா துன்னு சொன்னேன். ஏய்! என்ன என்கிட்டயே எதிர்த்து பேசுறயா. நீ என்ன பெரிய கடவுளா! சொல்றதை செய்யுறதுக்குன்னு நானு கோபமா பேசுனேன்.
என்னைய கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டவும், படக்குன்னு அவரோட 
சட்டையை பிடிச்சிட்டேன். 

சீனியர் மாணவர்னா மரியாதையா காப்பாத்திக்கிற மாதிரி நடந்துக்கணும்.
எனக்கு ஒண்ணும் உங்களைப் பாத்து பயமெல்லாம் கிடையாது. நீங்க செய்யுற போதைப் பழக்கத்தை, நீங்க சொல்லி நானும் செய்யணுமுன்னு தலையெழு- த்து இல்லை. அதையும் மீறி செய்ய வச்சீங்கன்னா, நீங்களும் நானும் இந்த காலேஜ்ல படிக்க மாட்டோம். மரியாதை கொடுத்து பழகுனா, நானு உங்களு க்கு ஜூனியர் மாணவர் மாதிரி நடந்துக்குவேன்னு சொன்னதும், பிரச்சனை முடிஞ்சிருச்சு. மூணு பேருமே எங்களை முறைச்சு பாத்துகிட்டே அங்கிருந்து போயிட்டாங்க. முகமது ஆசிக்கு, என்னடா மாப்பிளை இப்படி திடீர்னு கோபபட்டுட்டே. ஹாஸ்டல்ல நம்மளைப் பாத்து முறைச்சிகிட்டே இருப் -பாங்க. 

இவங்களை சாமாளிக்கிறதுக்குள்ள போதும், போதுமுன்னு ஆயிருமே மாப்பிள்ளைன்னு ஆசிக்கு புலம்புனான். 

ஆசிக்கு, இவங்க சாராயம் குடிப்பாங்க. நம்மளையும் சாராயம் குடிக்கச் சொல்லுவாங்க. அதுக்குப் பிறகு நாம தினம் தினம் குடிகாரப் பயலுக மாதிரி திரிஞ்சிகிட்டு இருப்போம். நாம இங்க படிக்க வந்துருக்கோம். போதை பழக்கத்துக்கு அடிமையாகுறதவிட, இவங்ககூட சண்டை போட்டு நாலு அடி வாங்கிக்கலாமுன்னு சொன்னேன். அதுவும் சரிதான் மாப்பிள்ளைன்னு ஆசிக்கு சொன்னான். கொஞ்ச நேரத்துல பேருந்து ஏறி கோவில்பட்டிக்கு போயிட்டோம்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாசத்துல இரண்டாமாண்டு மாணவர்கள்ல சிலர்  
ஜூனியர் மாணவர்களை அளவுக்கதிகமா ராக்கிங் செஞ்சதுல, வெவ்வேறு துறைகள்ல படிச்ச ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செஞ்சி, 
மாற்றுச் சான்றிதழை கொடுத்துட்டாங்க. அந்த 1999 ம் வருசத்தோட மாணவர் விடுதியிலயும், கல்லூரியிலயும் பகடிவதை சுத்தமா ஒழிஞ்சி போச்சு. பகடி வதை ஒழிஞ்சதுக்கு துணிச்சலா நான் எடுத்த முடிவுதான் காரணமா இருந்துச்சு. சீனியர் மாணவர்களை டிஸ்மிஸ் பண்ணதுக்கு அப்புறமா, சாயந்திரம் போல முக்கு ரோட்டுக்கு போகவேண்டாமுன்னு பயமுறுத்து னாங்க. நானு எப்பவும்போல போய்கிட்டு வந்துகிட்டு இருந்தேன். 

இந்த சம்பவத்துக்கு பிறகு, மூன்றாமாண்டு சீனியர் மாணவர்கள் என்னைக் கூப்புட்டு பேசுனப்ப, இரண்டாமாண்டு மாணவர்கள் நடந்துகிட்ட முறையை சொன்னேன். சரி, இதையெல்லாம் நினைச்சி வருத்தப்படாதேன்னு சொன்னா -ங்க. அதுக்குப் பிறகு சீனியர்கள்ல பத்து பேரு ரொம்ப அன்பா பழகுனாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க எனக்கு நெருங்கிய நண்பர்களா இருக்காங்க. ஆனா, ராக்கிங் பிரச்சனை முடிஞ்சதுக்கு காரணமா இருந்ததால, நானு படிச்ச மூணு வருசமும் படதாபாடு பட்டுட்டேன்.

No comments:

Post a Comment