Wednesday, June 16, 2010

கனா காணும் காலங்கள் - 7

நதிகளின் நீர் 
மலைகளில் தவழ்ந்து 
கடலில் கலக்கிறது...

ஆர்ப்பரிக்கும் கடலோ 
அலைகளின் சங்கநாதத்தோடு 
எல்லையற்றதாகக் 
காட்சி தருகிறது...!

கடலின் எல்லையைத் 
தொட்டுவிடலாம் என்று 
நான் பயணிக்கையில்...

பயண முடிவில் 
வேற்றுக் கிரகத்தில் போய் 
விழுந்து விட்டேன்...!

இறைவா!உன்னுடைய 
திருவிளையாடல்களில் 
இதுவும் ஒன்றோ...!

எங்களை வழியனுப்பும் விழா முடியும் தருவாயில் உள்ளது...!


டெல்லி பொண்ணு வெங்கடேஸ்வரி பேசிட்டு போனதுக்கு அப்புறம், 5,6 பேரு வந்து பேசுனாங்க...! எல்லாரும் முகத்துலயும் பிரியப்போரோமிங்கிற சோகம் இருந்துச்சு. எல்லாரும் பேசி முடிச்சதுக்கு அப்புறமா, துறையோட பேராசிரியர்கள் பேச ஆரம்பிச்சாங்க...

G.சுப்பிரமணியன் சாரு, தனபால் சாரை அறிமுகப்படுத்தி பேசுனாரு. தனபால் சாரைப் பத்தி சீனியர் மாணவர்கள் நிறைய சொல்லுவாங்க. அவரு வரண்டால நடந்து வர்றத பாத்தாலே, திரும்பி நடந்து போயிருவோம்னு, நான் முதல் வருஷம் படிக்கும்போது மூணாவது வருஷம் படிச்ச மாணவர்கள் சொல்லுவாங்க. COBOL Programming - ல பெரிய அளவுல Knowledge உண்டு சாருக்கு. எந்தப் பாடத்தை எடுத்தாலும், பிரமிக்க வைக்கிற மாதிரி இருக்கும். இப்படி நிறைய விஷயம் சொல்லுவாங்க சீனியர் மாணவர்கள்.


பன்னீர்செல்வம் 
G.சுப்பிரமணியன் சாரு பேசுனப்ப, நான் உங்களுக்கு Digital Electronics வகுப்பு எடுத்தேன். Microprocessor பாடம் எடுத்தேன். என்னோட மாணவர்கள்ல அழகர்ராஜ் சாரோட வகுப்பு மாணவர்கள்(1991-1994), எந்த அளவுக்கு டாப்ல படிச்சாங்களோ, அவங்க வகுப்பு மாதிரியே பெர்பாமன்ஸ் பண்ணீங்க. தனபால் சாரு உங்களுக்கு வகுப்பு எடுக்குறது கிடைக்காம போச்சு. எல்லாரும் டிகிரிய முடிச்சிட்டு போனதுக்கு அப்புறமும், கல்லூரிக்கு அடிக்கடி வந்து தொடர்புல இருக்கணும். உங்களோட எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்னு சொல்லி முடிச்சாரு. ஒரே கைதட்டல்... ஆனா எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஏன்னா என்னோட வகுப்ப சிறந்த வகுப்புன்னு சொன்னார். ஆறு செமஸ்டர் மார்க் எல்லாம் சேர்த்தா எனக்கு 59% தாண்டலை. அதுவுமில்லாம, நான் சீனியர் மாணவர்களோட சேர்ந்துகிட்டு கொஞ்சம் சேட்டைகள் பண்ணதால, என்னோட வகுப்பு மாணவர்கள், கடைசி செமஸ்டர்ல எங்கூட சேர்ந்து பிராஜக்ட் பண்றதக்கு கூட யாரும் தயார இல்ல. இறைவா! எனக்கு இப்படியும் ஒரு சோதனையானு கண்ணு முழி பிதுங்கிருச்சி. அப்பதான் சடையம்பட்டி பன்னீர்செல்வம், ஏன் மாப்ளே நீ கவலைப்படுறே. நான் இருக்கேன் மாப்ளே உங்கூட பிராஜக்ட் பண்றதுக்கு...! நீ ஒண்ணுமே பண்ண வேண்டாம், எல்லாமே நானே செய்யுறேன். நீ கம்பெனி லெட்டர் பேடு மட்டும் வாங்கிக்குடு. நாம பிராஜக்ட் வொர்க்க ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்னப்ப, என்னோட கண்ல இருந்து கண்ணீர் வந்துருச்சு. ஆண்டவன் என்னைய கைவிடல, அப்படின்னு நினைச்சுகிட்டேன்...! இப்ப பன்னீர்செல்வம் சென்னை மாநகர்ல மென்பொருள்துறை வல்லுநரா பணியில இருக்காரு...

கிருஷ்ணவேணி மேடம் பேசுனாங்க, சசிகலா மேடம் பேசுனாங்க, இன்னும் இரண்டு, மூணு ஆசிரியர்கள் பேசுனாங்க. எல்லோருமே ஒரு விஷயத்தை வலியுருத்துனாங்க - அடிக்கடி கல்லூரிக்கு வந்து தொடர்புல இருக்கணும்கிற விஷயத்தை.

வழியனுப்பு விழா முடிஞ்சி, சிற்றுண்டி விடுதியில தேநீர், வடை எல்லோரும் சாப்பிட்டோம். ஆனா, அன்னைக்கு குரூப் போட்டோ எடுத்த மாதிரி ஞாபகம் இல்ல. சில மாணவர்கள் தனித்தனியா கேமரா வச்சி புகைப்படம் எடுத்தாங்க. நான் எடுக்காம விட்டுட்டேன். 


விழா முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்துச்சு. ஏன்னா, எல்லா மாணவர்களுமே தெளிவா இருந்தாங்க. முதுகலைப் பட்டம் படிச்சி, மென்பொருள் துறையில வேலைக்கு போயி சேர்ந்து, பன்னாட்டுக் கம்பெனியில சாதனை பண்ணனும்னு. எனக்கோ அந்த மாதிரியான இலக்கே மன ஓட்டத்துல ஓடல. அடுத்த 10,20 வருசத்துல ஆயிரக்கணக்கான, இலட்சக் -கணக்கான மக்கள் கூட்டத்துல, தீப்பொறி பறக்குற மாதிரி, தமிழ் மொழியில மேடைகள்ல பேசணும். அறிஞர் அண்ணாவோட வரலாற படிக்கணும், அண்ணா எழுதுன எல்லாப் புத்தகங்களையும் படிக்கணும், ஆபிரகாம் லிங்கனோட வரலாறப் படிக்கணும், மாவீரன் நெப்போலியனோட வரலாறப் படிக்கணும், 'போரும் அமைதியும்' நாவலைப் படிக்கணுமே சொல்லி, என்னோட மனசு அலைபாஞ்சது...

நம்ம அப்பா எவ்வளவோ குடும்ப கஷ்டத்துலேயும், பொருளாதார நெருக்கடியிலயும், நிறையக் கனவுகளோட நம்ம பையன படிக்க வெச்சா, கம்பியூட்டரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்து, நம்ம ஒத்தையால்ல  இருக்கிற கூடப்பொறந்த அக்கா பையன் கணேசன் மாதிரி அமெரிக்காவுல போயி வேலையில சேர்ந்து, இலட்சம் லட்சமா பணம் சம்பாதிச்சு, நம்ம கஷ்டத்தை எல்லாம் போக்குவான்னு நினைச்சுகிட்டு இருந்தாரு. எங்க அப்பாவோட கனவையெல்லாம் தகர்க்குறமாதிரி நான் ஒரு மனக்கோட்டை கட்டிக்கிட்டு இருந்தேன். இதைத்தான் ஆரம்பத்துல கவிதை வரியா சொல்லி இருப்பேன், வேற்று கிரகத்துல போயி விழுந்துட்டேன்னு...

வவ்வாதொத்தி ஊரு சிவக்குமாரு மாப்ளே இப்ப துபாயில வேலை செய்றாரு. என்னடா செந்திலு, பேயறஞ்ச மாதிரி நின்னுகிட்டு அங்கயும் இங்கயும் பாத்துகிட்டு இருக்கே. என்னாச்சு? அது மாப்ளே, இமாலய இலக்க நினைச்சுகிட்டு, இதெல்லாம் நம்மளோட வாழ்க்கையில சாத்தியமா..? கற்பனை வாழ்க்கையில பயணிச்சு, எங்க வாழ்க்கை பயனில்லாம போயிருமோன்னு ஒரு பயம் இருக்குது. ஆனா, கலிங்கப்பட்டி தலைவனோட நினைப்பு வந்துருச்சுன்னா, கவலையெல்லாம் காணமப்போயிருது. இதை நினைச்சு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்னு, நூலகம் இருக்குற வராண்டாவுல நின்னு பேசிகிட்டு இருக்கோம். உருப்படுறதுக்கு உண்டான வழியைப் பாரு மாப்ளேன்னு சொல்லிட்டு, சிவக்குமாரு போயிட்டாரு...


எஸ்.ராமகிருஷ்ணன் 
சிவக்குமாரு யதார்த்தை தான் பேசுனாப்புல. ஏன்னா, என்கூட படிச்சதுல நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் அதிகம். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகம் இருந்தாங்க. படிக்க வந்தது கணிப்பொறித்துறை. வரலாற்றுத் துறையோ, சட்டப் படிப்போ, அரசியல் அறிவியல் துறை சார்ந்த படிப்போ கிடையாது. இந்தத் துறையில படிச்ச மாணவர்கள், சமூகத்தைப் பத்தியோ, அரசியலைப் பத்தியோ நினைக்குறதுல அர்த்தம் இருக்குதுன்னு, நாமளா பாத்து முடிவு பண்ணிக்கிடுறோம். வித்தியாசமா சிந்தனை பண்ணி, படிச்ச படிப்புக்கு மாறாக, வேற திசையில பயணம் செய்யும்போது, வாழ்க்கையில கடுமையான விமர்சனங்களையும், முரண்பாடுகளையும் சந்திக்க வேண்டியிருக்குது...!

என்னோட சொந்தக்காரங்களுக்கு இன்னைக்கும் வரைக்கும் அவங்க கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியல. M.Phil பட்டம் வரைக்கும் படிச்சிட்டு, எவ்வளவு பணம் சம்பாதிச்சிருக்கே..? இத்தனை வருசமா வேலை பாக்குறேயே, கல்யாணம் பண்ணி குடும்பம், குழந்தைன்னு வாழணும்னு எண்ணமில்லையா..? இல்ல அப்படி என்னதான் தினமும் சாதிச்சிகிட்டு இருக்குறே..?


இந்த மாதிரி கேள்வியெல்லாம் எங்க அப்பாவும் நிறைய தடவை கேட்டுட்டு, அலுத்துப்போயிட்டாரு. அவரு Janaury 7,2012 தேதியில, சென்னை மாநகர்ல இருக்குற ராஜீவ் காந்தி மருத்துவமனையில காலமானப்ப, அவரோட கனவை நாம நிறைவேற்றலையேன்னு கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான் பேராசிரியரா கல்லூரியில கடந்த 7 வருடங்களா வேலை செய்யறேன்னு சொல்லியும் அவரு மன ஆறுதல் அடையல. என்னை கருவுல சுமந்து பெற்றெடுத்த அம்மாதான், என்ன நல்லா புரிஞ்சிகிட்டு, தினம் தினம் நீ போற இலக்கு சரியானதுதான்னு கடந்த ஒன்றரை வருசமா சொல்றாங்க. அதுக்கு காரணம் அரசியல்ல அதிகமா கவனம் செலுத்தாம, சுற்றுச்சூழல் ஆர்வலரா, அது சம்பந்தமா உள்ள அமைப்புகள்ல சேர்ந்து களப்பணி ஆற்ற மாறுனதுக்கு அப்புறம், எங்க அம்மாவுக்கு ரொம்பவே சந்தோசம். அரசியல்ல இருந்து நீ வீணாப் போயிருவேன்னு பயந்தேண்டா..! இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்குன்னு சொன்னப்ப, அந்நியன் படத்துல வர்ற கிளைமாக்ஸ் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு... என் தாயோட ஆசிர்வாதத்துல தினம்தோறும் புத்தம் புதிய நாளாக போய்கிட்டு இருக்குது...


நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment